You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"அமெரிக்காவிடம் சரியான அணுகுமுறை இருந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்" - வட கொரியா
"அமெரிக்கா சரியான அணுகுமுறையோடு வந்தால் மட்டுமே அதிபர் டொனால்டு டிரம்புடன் மூன்றாவது பேச்சுவார்த்தையில் பங்கு கொள்வேன்" என்று வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தை சனிக்கிழமை கிம் ஜாங்-உன் தெரிவித்ததாக வட கொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பரஸ்பரம் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒப்பந்தம் ஒன்றை அதிபர் டிரம்ப் உருவாக்க வேண்டுமென கிம் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கிம் ஜாங்-உன்னை புகழ்ந்து அதிபர் டிரம்ப் ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு முதல் முறையாக சிங்கப்பூரில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்தனர்.
அணு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்படாமல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஹனோயில் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பு தோல்வியடைந்தது.
முக்கிய அணு ஆய்வு தளத்தை அழிப்பதற்கு பிரதிபலனாக, வடகொரியா மீதான அனைத்து பொருளாதார தடைகளையும் விலக்க லேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகள் கோரியதால் இந்த சந்திப்பை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
ஆனால், அமெரிக்காவின் இந்த கூற்றை வடகொரியா மறுத்துவிட்டது.
உறவுகளை மேம்படுத்த அமெரிக்கா உண்மையிலேயே விரும்புகிறதா என்பதில் கடைசி சந்திப்பு பெரும் சந்தேகத்தை தனக்கு ஏற்படுத்தியுள்ளதாக மிக சமீபத்திய உரையில் கிம் ஜாங்-உன் தெரிவித்திருந்தார்.
"சரியான அணுகுமுறையோடும், பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிபந்தனைகளோடும் மூன்றாவது உச்சி மாநாட்டை அமெரிக்கா நடத்துமானால், இன்னொரு முறை முயற்சிக்க தயாராக இருக்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.
எங்கள் மீது அதிகபட்ச அழுத்தங்களை திணத்தால் நாங்கள் அடங்கிவிடுவோம் என்று அமெரிக்கா தவறாக நம்பிக்கொண்டிருப்பதாகவும், விரோத பேச்சுவார்த்தைகள் மற்றும் தந்திரங்களை நிறுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டும் அவர் பேசியுள்ளார்.
அதிபர் டிரம்புடனான தனது தனிப்பட்ட உறவுகள் சிறப்பாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு முடிவுக்குள் புதிய உச்ச மாநாடு பற்றிய எந்தவொரு துணிச்சலான முடிவை எடுக்கவும் இந்தாண்டு இறுதி வரை அமெரிக்காவுக்கு நேரமளிப்பதாகவும் வடகொரிய தலைவர் தெரிவித்துள்ளார்.
கிம் ஜாங்-உன்னின் தலைமையில் வடகொரியாவுக்கு இருக்கும் அசாதாரணமான வளர்ச்சியை பற்றி புகழ்ந்து அமெரிக்க அதிபர் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்