You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பு என அறிவித்த அமெரிக்கா மற்றும் பிற செய்திகள்
இரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
மற்றொரு நாட்டின் ராணுவத்தை அமெரிக்கா பயங்கரவாத இயக்கமாக அறிவிப்பது இதுவே முதல் முறை.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய கிழக்கு பகுதியில் செயல்படும் அமெரிக்க ராணுவத்தை இரான் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இரானின் சர்வதேச அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்தது முதல் இவ்விருநாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இரானின் பாதுகாப்புப் படையையே பயங்கரவாத இயக்கமாக அறிவித்ததன் மூலம், அந்நாட்டின் மீது அமெரிக்காவால் மேலதிக தடைகளை விதிக்க முடியும். இதன் காரணமாக இரானின் தொழில்துறை பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே, இரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையும் அதோடு தொடர்புடைய மற்ற சில அமைப்புகளும் அணுஆயுத பரவல், பயங்கரவாத ஆதரவு மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக அவற்றின் மீது அமெரிக்கா பல்வேறு தடைகளையும் விதித்துள்ளது.
டிரம்ப் என்ன சொன்னார்?
"இரான் அரசாங்கம் பயங்கரவாதத்தை ஆதரிப்பது மட்டுமின்றி அதன் புரட்சிகர பாதுகாப்புப் படை பயங்கரவாத செயல்பாடுகளில் பங்கேற்பதுடன் அதற்கு நிதியுதவி அளித்து, அதை அரசாங்கத்தின் செயல்பாட்டு கருவியாக ஊக்குவிப்பதை அமெரிக்க அரசு உறுதி செய்கிறது" என்று இதுகுறித்த அறிவிப்பின்போது டொனால்டு டிரம்ப் கூறினார்.
இரான் மீதான அழுத்தத்தை "கணிசமான அளவில் அதிகரிக்கும் வகையில்" இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
"நீங்கள் இரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையோடு தொழில் செய்கிறீர்கள் எனில் அது பயங்கரவாததிற்கு நிதியுதவி செய்வதற்கு சமம்" என்று டிரம்ப் தெரிவித்தார்.
டிரம்பின் அறிவிப்பு இன்னும் ஒரு வாரகாலத்தில் நடைமுறைக்கு வருமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் முரண்படும் பாஜக - அதிமுக தேர்தல் அறிக்கைகள்
2019 மக்களவை தேர்தலில் முதல்கட்டம் நடைபெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டது. காங்கிரஸ் கட்சி தனது அறிக்கையை ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட்டது.
இந்தியாவில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கைகளில் மக்களுக்கு என்ன வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் சிலவற்றை பார்க்கலாம்.
பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், பாஜக தனது தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளது.
விரிவாக படிக்க: முற்றிலும் முரண்படும் பாஜக - அதிமுக தேர்தல் அறிக்கைகள்
பாகிஸ்தானின் F-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரங்கள் வலுவாக உள்ளது"
பாகிஸ்தானின் F-16 ரக விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியதற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக இந்திய விமானப்படை கூறியுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய விமானப்படையின் வைஸ் மார்ஷல் ஆர்ஜிகே கபூர், மிக் 21 பைசன் விமானம், ஒரு F 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு மறுக்க முடியாத வலுவான ஆதாரம் இருப்பதாக கூறினார்.
மேலும், பாகிஸ்தானின் விமானம் சுட்டுத்தள்ளப்பட்டதற்கான ரேடார் புகைப்படங்களையும் அவர் காண்பித்தார்.
நாடு கடத்தப்படுவதை எதிர்த்து விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு நிராகரிப்பு
தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் விவகாரத்தில் அவரது சார்பில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரும் மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் நேற்று (திங்கட்கிழமை) நிராகரித்தது.
பணபரிவர்த்தனை மோசடி வழக்கில், இந்தியாவின் சட்ட நடவடிக்கையை தொடர்ந்து, விஜய் மல்லையாவை நாடு கடத்த, பிரிட்டன் உள்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
அதனை செயல்படுத்தும் ஆணையில் பிரிட்டன் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டதை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
9,000 கோடி ரூபாய் வாராக்கடன் தொடர்பாக, மதுபான தொழிற்சாலை அதிபர் விஜய் மல்லையாவின் இந்திய பாஸ்போர்ட் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு நாட்டைவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
எட்டுவழிச் சாலைத் திட்டம் ரத்து: விவசாயிகள் உற்சாக கொண்டாட்டம்
சேலம்-சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கான ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பசுமைவழி விரைவு சாலை திட்டத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும், அரசு நட்ட எல்லைக் கற்களை பிடுங்கி எறிந்தும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் சென்னை இடையிலான எட்டு வழிச் சாலை திட்டத்தை மாநில அரசு கட்டாயமாக அமல்படுத்தப் போவதாக அறிவித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டது
இதற்கான எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டும், திட்டத்தினை கைவிட வலியுறுத்தியும் பல கட்டப் போராட்டங்களை விவசாயிகள் நடத்தினர். இவ்வாறு போராட்டம் நடத்திய விவசாயிகள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த ஆதரவாளர்கள் மீது தடியடி தாக்குதல், கைது நடவடிக்கையும் செய்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
விரிவாக படிக்க: எட்டுவழிச் சாலைத் திட்டம் ரத்து: விவசாயிகள் உற்சாக கொண்டாட்டம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்