You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எச்.ஐ.வி. நோயாளியின் சிறுநீரகத்தை மற்றொரு நோயாளிக்குப் பொருத்தி சாதனை மற்றும் பிற செய்திகள்
உலகில் முதன்முறையாக அமெரிக்க மருத்துவர்கள் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியிடம் இருந்து சிறுநீரகத்தை தானமாக பெற்று இன்னொருவருக்குப் பொருத்தியுள்ளனர்.
2017-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உலகம் முழுவதும் 3.7 கோடி மக்கள் எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். உலகளவில் பொது சுகாதாரத்தில் மிகவும் சவாலாக இருக்கும் நோய்களில் எச்.ஐ. வியும் ஒன்று என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
இந்நிலையில், அமெரிக்காவில் மேரிலாண்டில் பல்டிமோர் நகரத்தில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் எச்.ஐ.வி. யால் தொற்று உள்ள நோயாளியிடம் இருந்து சிறு நீரகத்தை எடுத்து, மற்றொருவருக்குப் பொறுத்தும் அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது இரு நோயாளிகளும் நன்றாக இருக்கிறார்கள்.
''எச்.ஐ.வியோடு வாழும் ஒருவர் சிறுநீரகம் தானம் செய்ய அனுமதிக்கப்பட்டது உலகிலேயே இது தான் முதல்முறை'' என்கிறார் மருத்துவர் டாரி செஜெவ்.
எச்.ஐ.வி. பாதிப்புள்ளவர்களுக்கு சிறுநீரக நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என முன்னதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது புதிய வகை
ஆன்டி- ரெட்ரோவைரல் மருந்துகள் மூலமாக இந்நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும். இவை சிறுநீரகத்துக்கு நல்லதாக பார்க்கப்படுகிறது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸில் மருந்தியல் மற்றும் புற்றுநோயியல் துறை இணை பேராசிரியர் கிறிஸ்டின் துரந்து ''இந்த அறுவை சிகிச்சை மக்களுக்கு எச்.ஐ.வி குறித்த பார்வைகளை மாற்றும். மேலும் மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படும்''என்றார் .
நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு பின்னர் நன்றாக இருக்கிறார்கள். தற்போது நீண்ட கால அடிப்படையில் இதன் விளைவுகளைப் பார்க்கவேண்டும் என்கிறார் கிறிஸ்டின்.
கடந்த திங்கள் கிழமையன்று இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. சிறுநீரகத்தை தானமாக வழங்கிய அட்லான்டாவைச் சேர்ந்த 35 வயது நினா மார்ட்டினெஸ் ''நன்றாக இருக்கிறேன்'' என செய்தியாளர்களிடம் கூறினார்.
'கிரே அனாடமி' எனும் தொலைக்காட்சி தொடரின் ஒரு அத்தியாயத்தை பார்த்த பிறகு சிறுநீரகத்தை தானம் செய்ய முடிவெடுத்ததாகவும், மருத்துவ உலகில் முதல்முறையாக இந்த அறுவைச் சிகிச்சையின் ஒரு பகுதியாக இருந்தது உற்சாக உணர்வை தருவதாகவும் அவர் கூறினார்.
சிறுநீரகத்தை தானாமாக பெற்றவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் சிகிச்சை பெற்ற நபர் நலமாக இருக்கிறார் என துரந்து கூறினார்.
ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை மூலம் பிரிட்டன் நோயாளி ஒருவருக்கு எச்.ஐ.வி கிருமிகள் அகற்றப்பட்ட செய்தி வந்த ஒரு மாதத்துக்குள் எச்.ஐ.வி சிகிச்சையில் மருத்துவ உலகம் மற்றொரு குறிப்பிடத்தக்க மற்றொரு முன்னேற்றத்தை பார்த்திருக்கிறது.
பொன்முடி மகனா? விஜயகாந்த் மைத்துனரா?
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை ஒட்டி, தமிழக மக்களவைத் தொகுதிகள் ஒவ்வொன்றைப் பற்றியும் அடிப்படைத் தகவல்கள் அடங்கிய கட்டுரைகளை வெளியிட்டுவருகிறது பிபிசி தமிழ். அதன் ஒரு பகுதியாக இன்று கள்ளக்குறிச்சி தொகுதியை பார்ப்போம்.
வடதமிழகத்தில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது கள்ளக்குறிச்சி நகரம்.
விவசாயம், குச்சி வள்ளிக் கிழங்கில் மாவு தயாரித்து அதன் மூலம் ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் சேகோ தொழிற்சாலைகள், சுற்றுலாத் தலமான ஏற்காடு, பழங்குடியினர் வாழும் கல்வராயன் மலை என கலவையான சமூக, பொருளாதார, நிலவியல் முகம் கொண்டது கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் இதுவரை நடந்த நான்கு தேர்தல்களில் மூன்று முறை திமுக-வும், ஒரு முறை அதிமுக-வும் வெற்றி பெற்றுள்ளன.
"மிஷன் சக்தி" சோதனையால் விண்வெளியில் கழிவுகள் - அமெரிக்கா எச்சரிக்கை
செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகனையை இந்தியா சோதனை செய்திருப்பதையடுத்து, விண்வெளியில் அதன் கழிவுப்பொருட்களால் பாதிப்பை உண்டாக்கலாம் என அமெரிக்க பாதுகாப்பு துறையின் செயலாளர் பேட்ரிக் ஷனாஹன் எச்சரித்துள்ளார்.
செயற்கைக்கோள்களை இடைமறித்து அழிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி மார்ச் 27ம் தேதி புதன்கிழமை அறிவித்தார்.
விண்வெளியில் கழிவுப் பொருட்களை விட்டுவிடக் கூடாது என்பதற்காக தாழ்வான உயரத்தில் இருக்கும் சுற்றுப்பாதையில் இந்த சோதனையை இந்தியா மேற்கொண்டதாகவும், இந்தியாவின் இச்சோதனையை அமெரிக்கா ஆராய்ந்து வருவதாகவும் பேட்ரிக் ஷனாஹன் தெரிவித்தார்.
விரிவாக படிக்க - "மிஷன் சக்தி" சோதனையால் விண்வெளியில் கழிவுகள் - அமெரிக்கா எச்சரிக்கை
இஸ்ரோவுக்கு நிதி வழங்காமல் இந்திரா காந்தி குடும்பம் ஆடம்பர வாழ்க்கை நடத்தியதா? #BBCFactCheck
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தேவைகளை புறக்கணித்துவிட்டு இந்திரா காந்தியின் குடும்பம் ஆடம்பரமான வாழ்க்கையை நடத்தி வந்தது என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
செயற்கைக்கோளைத் தாக்கி அழித்துவிடும் தொழில்நுட்பத்தை இந்தியா வெற்றிகரமாக புதன்கிழமை பரிசோதித்ததாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி அறிவித்த பின்னர், இந்த புகைப்படம் இந்த செய்தியோடு பகிரப்பட்டு வருகிறது.
புதன்கிழமை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி திடீரென நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இந்தியா ஒரு விண்வெளி வல்லரசாக ஏற்கனவே உருவெடுத்துள்ளது என்று கூறினார்.
இந்த நடவடிக்கையை வலதுசாரி சமூக ஊடகப் பக்கங்கள் பல புகழ்ந்துள்ளன. அதேவேளையில், வரவிருக்கும் 2019 மக்களவைத் தேர்தலில் அரசியல் ஆதாயம் பெறுவதற்கு நரேந்திர மோதி இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இதன் விளைவாக, சில வலதுசாரி சமூக ஊடகப் பக்கங்கள் காங்கிரஸ் கட்சியை இலக்கு வைத்து, குறிப்பாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் குடும்பத்தை இலக்கு வைத்து தாக்கி பதிவிட தொடங்கின. காங்கிரஸ் கட்சியின் நீண்டகால ஆட்சியின்போது இந்தியாவின் விண்வெளி நிறுவனம் மற்றும் பிற விஞ்ஞானிகளை காங்கிரஸ் புறக்கணித்ததாக இந்த பதிவுகள் அமைந்தன.
அவர்களது கருத்தை நிரூபிப்பதற்கு, ஒரு படத்தை பயன்படுத்தியுள்ளனர். இது ஆயிரக்கணக்கான முறை பலராலும் பார்க்கப்பட்டுள்ளது.
பிபிசியின் உண்மை பரிசோதிக்கும் குழு இதனை ஆராய்ந்தது.
தயாநிதி மாறன், ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார், மன்சூர் அலிகான், சு. வெங்கடேசன் சொத்து விவரம்
மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தயாநிதி மாறன் தனது அசையும் சொத்தாக மூன்று கோடியே அறுபத்து ஐந்து லட்சத்து பதினைந்தாயிரம் ரூபாய்மதிப்புடைய சொத்துகள் உள்ளதென குறிப்பிட்டுள்ளார். தனது மனைவி ப்ரியாவுக்கு ரூ 3.09 கோடி மதிப்புடைய அசையும் சொத்துகள் உள்ளதென்றும், மகன் கரன் பெயரில் 4.92 கோடி மதிப்புடைய சொத்துகள் உள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார்.
அசையா சொத்தாக திருக்குவளையில் ரூ 59,000 மதிப்புடைய இடம் உள்ளதென்று குறிப்பிட்டுள்ளார். தனது மனைவி பெயரிலோ அல்லது மகன் கரன் பெயரிலோ வேறெதுவும் அசையா சொத்துகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு ஏதும் கடன் இல்லை என்று பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மற்றவர்களின் சொத்து விவரங்களை படிக்க - தயாநிதி மாறன், ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார் சொத்து விவரம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்