You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எத்தியோப்பிய விமான விபத்து - இறுதி சடங்குக்கு கருகிய மண் ஒப்படைப்பு மற்றும் பிற செய்திகள்
எத்தியோப்பியாவில், மார்ச் 10 அன்று நடந்த விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கருகிய மண் மட்டும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 157 பேரின் உடல் எச்சங்களை அடையாளம் கண்டுபிடிக்க குறைந்தது ஆறு மாத காலம் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்குகளில் பயன்படுத்தப்படவுள்ள அந்த மண், அவர்களுக்கான கல்லறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் புதைக்கப்படும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. தங்கள் உறவினரை இழந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கிலோ மண் கொடுக்கப்பட்டது.
தலைநகர் அடிஸ் அபாபாவில் உள்ள எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் அலுவலகம் அல்லது வெளிநாடுகளில் இருக்கும் அந்த விமான சேவை நிறுவனத்தின் அலுவலகங்களில், இறந்தவர்களின் உறவினர்கள் டி.என்.ஏ மாதிரிகளை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் பெண்ணின் சாதனைக் கதை
வைஷ்ணவி பூவேந்திரன் பிள்ளை என்ற இந்த தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண் வசிப்பது மலேசியாவில். நவி இந்திரன் பிள்ளை என்ற பெயரில் இன்ஸ்ட்ராகிராம் கணக்கு வைத்திருக்கும் இந்தப் பெண்ணின் புகைப்படங்கள், தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பாராட்டுக்களை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கின்றன.
நவியின் மார்பகங்கள் அகற்றப்பட்டு விட்டன. கீமோதெரபியால் தலைமுடி கொட்டிப்போக, உடல் பொலிவிழந்துவிட்டது. இதை ஏற்றுக் கொள்வது இளம் பெண்ணான நவிக்கு மிகவும் மன உளைச்சலைத் தந்தது. ஆனால் தனது துக்கத்தில் இருந்து வெளியேறி, இன்று உலகிற்கே தன்னம்பிக்கை நட்சத்திரமாய் மிளிர்கிறார் வைஷ்ணவி பூபேந்திரன்.
விரிவாகப் படிக்க - இரு முறை தாக்கிய புற்றுநோய் - தன்னம்பிக்கையால் மீண்ட தமிழ் பெண்
நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு
நியூசிலாந்தில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இருவேறு மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதல்களில் தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்களை சேர்ந்த தலா ஒருவர் என இரண்டு இந்தியர்கள் பலியாகியுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுவரை உயிரிழந்தவர்களில் முதலாவதாக அடையாளம் காணப்பட்டவர் 1980களில் ஆப்கானிஸ்தானிலிருந்து நியூசிலாந்துக்கு குடியேறிய 71 வயதான தாவூத் நபி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
விரிவாகப் படிக்க - நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு: இந்தியர்கள் இருவர் உயிரிழப்பு
2011 மும்பை தாக்குதலுக்கு பின்னர், ஜெய்ஷ் இ முகமது இயக்கம் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் தலைவர் மசூத் அஸார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படவில்லை.
மும்பை தாக்குதல், பதான்கோட் தாக்குதல், உரி தாக்குதல்களின் போது, மசூத் அஸாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி இந்தியா தீவிர முயற்சிகளை எடுத்தது.
மசூத் அஸார், சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டால் அவரது சொத்துக்கள் முடக்கப்படும். மற்ற நாடுகளுக்கு பயணம் செய்ய முடியாது.
விரிவாகப் படிக்க - மசூத் அஸாருக்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு?
இலங்கையில் நில அதிர்வு
மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சனிக்கிழமை பயங்கர சத்தத்துடன் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
3.5 அளவில் சிறிய நில அதிர்வே பதிவாகியள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார்.
இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹாலி-எல, பசறை, ஹல்துமுல்ல உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்
விரிவாகப் படிக்க - இலங்கையில் பெரும் சத்தத்துடன் நில அதிர்வு - அதிர்ச்சியில் மக்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்