பத்து குழந்தைகள் நரபலியா? - 65 சூனியக்காரர்கள் கைது மற்றும் பிற செய்திகள்

சூனியக்காரர்கள்

பத்து குழந்தைகளை நரபலி கொடுத்தது தொடர்பாக 65 சூனியக்காரர்கள் அல்லது பாரம்பரிய மருத்துவர்களை தான்சானியா போலீஸ் கைது செய்துள்ளது.

குழந்தைகள் ஜனவரி மாதம் கொல்லப்பட்டு, அவர்களின் உடல் பாகங்கள் நீக்கப்பட்டு உள்ளது. சமய சடங்குகளில் உடல் பாகங்களை பயன்படுத்துவது வளத்தை கொண்டு வருமென்பது தான்சான்யா மக்களின் நம்பிக்கை. தான்சான்யா உயர் போலீஸ் அதிகாரி பாரம்பர்ய மருத்துவர்கள் உரிய உரிமம் பெற்று இருக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

மசூத் அஸ்கர்: ஜெய்ஷ்-இ-முகம்மது நிறுவனர் இறந்துவிட்டாரா?

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டதில் இருந்து ஒவ்வொரு நாளும் விதவிதமான புரளிகள் தோன்றிப் பரவுகின்றன.

நேற்று ஞாயிற்றுக்கிழமையும் ஊடக பரபரப்புகளால் நிறைந்த ஒரு நாளானது.

ஜெய்ஷ்-இ-முகம்மது நிறுவனர் மசூத் அஸ்கர் இந்துவிட்டதாக வெளியான "செய்தியை" இந்தியாவின் டிவிட்டர் பயனர்கள் பலரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பகிரத் தொடங்கினர்.

சிறிது நேரத்தில் இந்த "செய்தியை"மைய நீரோட்ட ஊடகங்களும் கையில் எடுத்தன. இந்த செய்தியின் நம்பகத்தன்மை தெரியாத ஊடகங்கள் கூட, உறுதி செய்யப்படாத தகவல்கள் என்று கூறி இத்தகவலை ஒளிபரப்பத் தொடங்கின.

அலபாமா சூறாவளி

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு சூறைக் காற்றுகள் தாக்கியதில் குழந்தைகள் உள்பட குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கட்டடங்கள், சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளன.

இறந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. டஜன்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் காற்று வீசியது. உயிர் தப்பியுள்ளவர்களைத் தேடும் பணி ஒரு நாளுக்கு பின் மீண்டும் தொடங்கியுள்ளது.

பாலகோட் தாக்குதலில் எவ்வளவு தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள்?

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை பற்றி தங்களால் ஏதும் கூற முடியாது என்றும், அரசாங்கம் மட்டுமே அதுகுறித்துச் சொல்ல முடியும் என்றும் இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் தநோயா தெரிவித்தார்.

அதே நேரத்தில், விங் கமாண்டர் அபிநந்தன், உடற்தகுதி பரிசோதனை முடிவை பொறுத்தே அவர் மீண்டும் பணிக்கு திரும்புவரா, இல்லையா என்பது குறித்து தெரிய வரும் என அவர் தெரிவித்தார்.

கோயம்புத்தூரின் சூலூரிலுள்ள இந்திய விமானப்படை தளத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். அதன் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய விமானப்படையின் ஏர் சீப் மார்ஷல் தநோயா பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

கைதான கனட நாட்டவரை உளவாளிகள் என குற்றஞ்சாட்டும் சீனா

சீனா கைது செய்துள்ள கனடா நாட்டை சேர்ந்த இருவரும் உளவு பார்த்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

சீன தொலைத்தொடர்பு நிறுவனமான குவாவெயின் முக்கிய செயலதிகாரி அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படும் சாத்தியக்கூறு அதிகரித்துள்ளதால், இரு நாடுகளுக்கு இடையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

முன்னாள் ராஜ்ஜீய அதிகாரி மைக்கேல் கோவ்ரிக், வணிகர் மைக்கேல் ஸ்பாவர் ஆகிய இருவரும் கடந்த டிசம்பர் மாதம் சீனாவால் கைது செய்யப்பட்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :