You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூனியக்காரர்கள் சொல்லை கேட்டு கொல்லப்பட்ட குழந்தைகள் மற்றும் பிற செய்திகள்
உடல் உறுப்புக்காக குழந்தைகள் கொலை
உடல் உறுப்புக்காக ஆறு குழந்தைகள் தான்சான்யாவில் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட அந்த குழந்தைகளின் காது, பற்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கொல்லப்பட்ட சிறுவர்களுக்கு வய்து இரண்டிலிருந்து, ஒன்பதுக்குள்தான் இருக்கும். சில குழந்தைகளின் மூட்டு பகுதியும் நீக்கப்பட்டுள்ளது.
மூடநம்பிக்கையின் காரணமாகவே இது நடந்துள்ளது. குழந்தைகளின் உடல் பாகங்கள் செல்வத்தை கொண்டு வருமென சூனியக்காரர்கள் சொல்வதை கேட்டு குழந்தைகளை கொன்று உடல் பாகங்களை வெட்டி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மன அழுத்தத்தால் ஏற்பட்ட விமான விபத்து
நேபாளத்தில் கடந்த மார்ச் மாதம் விபத்தில் சிக்கிய விமானத்தின், விமானி மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார் என அந்த விபத்து குறித்த கடைசி அறிக்கை தெரிவிக்கிறது.
71 பயணிகளை கொண்ட அந்த விமானம் வங்கதேசத்தில் உள்ள தாக்காவில் இருந்து புறப்பட்டு காத்மாண்டுவை சென்று இறங்கும்போது தீப்பற்றி விபத்துக்குள்ளானது.
அந்த விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர்.
வான் போக்குவரத்து கட்டுப்பாட்டுடனான மோசமான தொடர்பே விமான விபத்துக்கு காரணம் என்று முன்னதாக கூறப்பட்டது.
ஆனால், விமானி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், விமானக் குழுவினருடன் கோபமாக பேசியதாகவும், விமானியறையில் புகைப்பிடித்ததாகவும் விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விரிவாக படிக்க: விமானியின் மன அழுத்தத்தால் ஏற்பட்ட விபத்து
இந்திய அரசுதவியில் இலங்கையில் பள்ளிக்கூடங்கள்
இந்திய அரசாங்கத்தின் உதவியில் அமைக்கப்பட்ட வடக்கு மாகாண பாடசாலைகளுக்கான புதிய பள்ளிக்கட்டடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டன.
யாழ்ப்பாண மாவட்டத்தின் நாவற்குழி மற்றும் சாவகச்சேரி பகுதிகளிலுள்ள இரண்டு பாடசாலைகளுக்கு இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட புதிய பாடசாலை கட்டடங்கள் இன்று இலங்கை மக்களிடம் கையளிக்கப்பட்டன.
நாவற்குழி மகாவித்தியாலயத்திலும் டிறிபேர்க் கல்லூரியிலும் இந்திய அரசின் நிதி உதவியுடன் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டடங்கள் இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் டாக்டர் ஷில்பக் அம்புலே மற்றும் வட மாகாண ஆளுநர் முனைவர் சுரேன் ராகவன் அவர்களாலும் இன்று திங்கள் கிழமை திறந்து வைக்கப்பட்டது.
முற்றுகிறது ஜாக்டோ - ஜியோ போராட்டம்; என்னதான் பிரச்சனை?
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் - அரசு ஊழியர் சங்கங்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டம் ஒரு வாரத்தைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அரசு தன் நிலையிலிருந்து பின்வாங்குவதாக இல்லை.
போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென்கிறது நீதிமன்றம்.
தமிழ்நாடு முழுவதும் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ என்ற ஒருங்கிணைப்புக் குழுக்களின் கீழ் இயங்கிவரும் ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் ஜனவரி 22 ஆம் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்று கூறிவந்த தமிழக அரசு, பள்ளிக்கூடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து பாடம் நடத்தச் செய்துவருகிறது.
இந்த நிலையில், இன்று சென்னையில் எழிலகம் அருகே மறியல் போராட்டம் நடத்த முயன்ற ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
விரிவாக படிக்க:முற்றும் ஜாக்டோ - ஜியோ போராட்டம்: காரணம் என்ன?
'தாய் மொழியில் பேசாதே'
அமெரிக்க வட கரோலினாவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புக்களுக்கான இயக்குநராக இருந்த பேராசிரியர், சீன மொழியில் பேசக் கூடாது என்று மின்னஞ்சல் அனுப்பிய விவகாரத்தில் நீக்கப்பட்டார்.
டியூக் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார் மெகன் நீலி. இவர் மாணவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், "உயிரி புள்ளியியல் துறையில் பணிபுரியும் இரு பேராசிரியர்கள், தங்கள் துறையில் மாணவர்கள் சிலர் சீன மொழியில் உரையாடுவதாக என்னிடம் கூறினர். ஆங்கிலத்தில் பேசாமல் இவ்வாறாக பேசுவது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்த மின்னஞ்சல் ட்விட்டர் மற்றும் சீன சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
மெகன் நீலியை பலர் இனவெறியர் என்று குற்றஞ்சாட்டினர். அதுமட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளிலிருந்து அங்கு வந்து படிக்கும் மாணவர்களை பாகுபாட்டுடன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நடத்துகிறார்களோ என்று கவலை தெரிவித்திருந்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :