ஸ்பெயின் உணவகம்: உயிரிழந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட இரவு உணவு என்ன? மற்றும் பிற செய்திகள்

ஸ்பெயின் உணவகத்தில் உணவு உண்ட பெண் உயிரிழப்பு: பலருக்கு உடல்நலக்குறைவு

ஸ்பெயினில் வேலன்சியாவில் உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவு உண்ட ஒரு பெண் இருந்துள்ளார். மேலும் இங்கு உணவு உண்ட 28 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

மிச்சலைன் கைட் என்ற உணவகங்களின் தர வரையறை செய்யும் குழுமம் இந்த உணவகத்துக்கு சிறந்த உணவகம் என்ற தர சான்றிதழை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் 12 வயது மகனுடன் இந்த உணவகத்துக்கு இரவு உணவுக்கு சென்றனர். இரவு உணவு உண்ட பின்னர் இவர்கள் அனைவருக்கும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி தொந்தரவுகள் இருந்தன.

தற்போது இந்த சமபவத்தால் இந்த உணவகம் மூடப்பட்டுள்ளது. உணவகத்தில் வழங்கப்பட்ட உணவு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பிப்ரவரியில் இந்த உணவகத்தில் உணவு உண்ட 75 பேரிடம் விசாரணை செய்த அதிகாரிகள் அவர்களில் பலருக்கு உணவு கெட்டு போவதால் உண்டாகும் பாதிப்பு ஏற்பட்டதாக கண்டறிந்துள்ளனர்.

புல்வாமா தாக்குதல்: காங்கிரசுக்கு பின்னடைவையும், பாஜகவுக்கு ஊக்கத்தையும் கொடுத்தது எவ்வாறு?

பிப்ரவரி 11ஆம் தேதியன்று, உத்தரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதியின் தேர்தல் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி சாலைப் பேரணி நடத்தினார்; ராகுல் காந்தி கையில் பொம்மை விமானத்தை எடுத்துக் கொண்டு, மக்களுக்கு ரஃபேலை நினைவூட்டினார்.

அரசியலில் காற்றடிக்கும் திசை மாறிவிட்டது; காங்கிரசுக்கு ஏறுமுகம், பாரதிய ஜனதா கட்சிக்கு அழுத்தம் அதிகரித்துவிட்டது என்றுகூட சிலர் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால், பிப்ரவரி 14ஆம் தேதியன்று புல்வாமாவில் தாக்குதல் நடைபெற்ற பிறகு, நாடே கொந்தளித்துப் போனது. "இந்த சமயத்தில் அரசியல் பேசக்கூடாது" என்று கூறிய பிரியங்கா காந்தி தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார்.

புல்வாமா தாக்குதல் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது என்றால், காங்கிரசால் இன்னும் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை. ஆனால், பாஜகவோ, அந்த துக்கத்தையே அஸ்திரமாக பயன்படுத்தி, முழு உத்வேகத்துடன் தேர்தல் களத்தில் இறங்கிவிட்டது.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ், இந்த விஷயத்தில் அரசுக்கு ஆதரவாக இருக்கும், இதுதொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்திலும் பாஜகவுக்கு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர். காங்கிரசிற்கு புதுச்சேரி ஒதுக்கீடு

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணிகளை அமைப்பதில் தீவிரமாக இருக்கும் நிலையில், அகில இந்திய என்.ஆர். காங்கிரசின் தலைவர் என். ரங்கசாமி இன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.

அங்கு அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை - ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

பிறகு, புதுச்சேரி தொகுதியை என்.ஆர். காங்கிரசிற்கு ஒதுக்கீடு செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரைத் தடுத்து நிறுத்த இந்தியா முடிவு

பாகிஸ்தானுக்கு செல்கின்ற நீரை நிறுத்திவிட இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

இது இந்திய அரசின் நீண்டகாலத் திட்டமாகும். இதன்மூலம் பாகிஸ்தானுக்கு உடனடியாக பாதிப்பு எதுவும் ஏற்படாது.

இந்தியாவின் கிழக்கு பகுதியிலுள்ள ஆறுகளில் இருந்து தண்ணீரை திருப்பி ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மக்களுக்கு விநியோகிக்க முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மும்பை தாக்குதலில் தொடர்புடையவரின் அமைப்புகளுக்கு பாகிஸ்தானில் தடை

பாகிஸ்தான் அரசு ஜமா-உத்-தாவா மற்றும் ஃபலா-இ-இன்சானியாத் ஆகிய இரு அமைப்புகளையும் தடை செய்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு கமிட்டியின் கூட்டம் இன்று நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தீவிரவாதத்துக்கு எதிரான தேசிய செயல் திட்டத்தை விரிவாக மறு ஆய்வு செய்ததாகவும், பாகிஸ்தான் உள்விவகாரங்கள் துறையின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தின்போதே மேற்கண்ட இரு அமைப்புகளையும் தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இரு அமைப்புகளும் பாகிஸ்தான் உள்விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கண்காணிப்பில் இருந்தன.

ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :