You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்ப் : ''அடுத்த வாரத்தில் ஐஎஸ் கட்டுப்பாட்டு பகுதிகள் 100% விடுவிக்கப்படும்''
சிரியா மற்றும் இராக்கில், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிராந்தியம் அடுத்த வாரத்தின் ஆரம்பத்தில் "100%" விடுவிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
"இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும், அநேகமாக அடுத்த வாரம் ஏதாவது ஒரு சமயத்தில், நாம் 100% கலிபாவில் இருப்போம்," என்று அவர் கூட்டணி அமைப்பினரோடு நடத்திய ஒரு கூட்டத்தில் டிரம்ப் குறிப்பிட்டார்.
எனினும், இது தொடர்பான அதிகாரபூர்வ வார்த்தைக்காக காத்திருக்க வேண்டும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
பயங்கரவாத எதிர்ப்பு அழுத்தம் தொடர்ச்சியாக இல்லாது போனால், புத்துயிர் பெற்று ஐஎஸ் அமைப்பினால் மறுபிரவேசம் செய்ய முடியும் என்று அமெரிக்க ராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பரில், சிரியா மற்றும் இராக் பிராந்தியத்தில் உள்ள தனது நாட்டு துருப்புகளை 30 நாட்களுக்குள் டிரம்ப் திரும்ப பெற விரும்புகிறார் என்ற செய்திகள் வெளியான நிலையில் ஐஎஸ் குழு தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக கூறி டிரம்ப் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆனால், சில முக்கிய பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பதவி விலகல்கள், குடியரசு கட்சியினர் மற்றும் அமெரிக்காவின் கூட்டு நாடுகளின் எதிர்ப்பு ஆகியவற்றால் படைவிலகல் முடிவை டிரம்ப் தாமதப்படுத்தினார்.
ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான உலகளாவிய கூட்டணி தற்போது சுமார் 80 நாடுகளைச் சேர்ந்ததாக உள்ளது. இராக் மற்றும் சிரியா பிராந்தியங்களுக்கு வெளியேவும் பயங்கரவாதத் தாக்குதல்களை ஐஎஸ் அமைப்பு நடத்த துவங்கியபிறகு, 2014 ஆம் ஆண்டில் இந்த குழு உருவானது.
''நாம் இணைந்து பணியாற்றுவோம்''
வாஷிங்டனில் புதன்கிழமையன்று நடந்த கூட்டத்தில் பேசிய டிரம்ப், ''அவர்களின் இடம் பறிபோய்விட்டது. ஐஎஸ் அமைப்பின் பீடம் தகர்க்கப்பட்டுவிட்டது'' என்று தெரிவித்தார்.
ஆனால் இந்த குழுவை சேர்ந்த இன்னும் மிக சிறிய அமைப்புகள் மிகவும் ஆபத்தானவை" என்று அவர் கூறினார், வெளிநாட்டு போராளிகள் தாக்குதல் நடத்த அமெரிக்காவை நெருங்கவிடக்கூடாது என்றும் டிரம்ப் பேசினார்.
ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளில் இருந்து ஐஎஸ் அமைப்பு போராளிகளை நியமித்தது குறித்து சுட்டிக்காட்டி டிரம்ப் இவ்வாறு பேசினார்.
"ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நம்மை விட அவர்கள் இணையத்தைப் சிறப்பாக பயன்படுத்தினர்" என்று குறிப்பிட்ட அவர், "அவர்கள் அற்புதமாக இணையத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால், இப்போது அது மிகவும் திறமையாக இல்லை" என்றார்.
அமெரிக்காவின் கூட்டணி நாடுகளுக்கு நன்றி தெரிவித்த அவர், "இனி வரும் பல ஆண்டுகளில் நாம் ஒன்றாக இணைந்து வேலை செய்வோம்''
சிரியாவில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறும் போதிலும், ஐஎஸ் குழுவை எதிர்த்து அமெரிக்கா தொடர்ந்து போராடும் என்று அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பியோ உறுதியளித்தார்.
தற்போதைய துருப்புகள் விலகலை ஒரு தந்திரோபாய மாற்றம் எனவும், நோக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று மேலும் கூறினார்.
இதற்கிடையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையொன்று, தொடர்ச்சியான அழுத்தம் இல்லாது போனால் அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் சிரியாவில் மீண்டும் ஐஎஸ் அமைப்பு தலைதூக்கும் என்று கூறியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :