You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரேசில் அணை உடைந்து 9 பேர் பலி, 300 பேர் மாயம்
பிரேசிலின் தென் கிழக்கு பகுதியிலுள்ள இரும்பு சுரங்கத்தில் அணை உடைந்ததால், சுமார் 300 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அணை உடைந்து அடித்து செல்லப்பட்ட பெருமளவு சகதியால் இந்த அணையில் இருந்த உணவகம் புதைந்துள்ளது. அங்கு சுமார் 800 பேர் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்த வேளையில் இது நிகழ்ந்துள்ளது.
மினாஸ் கெராயிஸ் மாநிலத்தில் புரோமடீன்யு நகரத்திற்கு அருகில் நிலத்தை தோண்டும் இயந்திரங்களை பயன்படுத்தி மீட்பு பணியாளர்கள் மக்களை காப்பாற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
9 பேர் இறந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் புதையுண்டோர் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாக ஆளுநர் ரோமியு ஜிமா தெரிவித்திருக்கிறார்,
வாலே என்கிற பிரேசிலின் பெரியதொரு சுரங்க அகழ்வு நிறுவனத்திற்கு சொந்தமான இந்த அணை உடைந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
இதே மாநிலத்திலுள்ள மரியானாவில் அணை உடைந்து 19 பேர் பலியான மூன்று ஆண்டுகளில் இந்த அணை உடைந்துள்ளது. மரியானாவில் அணை உடைந்தது பிரேசிலின் மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவாக கருதப்பட்டது.
அணை உடைந்தது பற்றி என்ன தெரியும்?
ஃபெய்ஜியாவ் இரும்பு தாது சுரங்கத்திற்கு அருகிலுள்ள அணை உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு உடைந்தது. இதனால் இதற்கு கீழுள்ள இன்னொரு அணையில. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பெருமளவிலான சகதி அணை வளாகத்தின் ஊடாக சென்று அருகிலுள்ள நிறுவனங்கள், தொழிலாளர்கள் வாழுகிற பகுதிகளில் நிரம்பியதோடு, அவர்களின் வீடுகள், வாகனங்களையும் சேதமாக்கியுள்ளன.
சாலைகள் அழிக்கப்பட்டுவிட்டதால், இந்த சகதியில் சிக்கிய டஜன் கணக்கானோரை, ஹெலிகாப்டர் மூலம் மீட்க வேண்டியதாயிற்று.
பாதுகாப்பு காரணமாக அங்கு வாழ்கிற பலரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அணை வளாகத்திலேயே 100 முதல் 150 பேர் வரை காணாமல் போய்விட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்பு படையினர் 100 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சனிக்கிழமை நடைபெறும் மீட்பு பணிகளில் இன்னும் 100 பேர் கூடுதலாக கலந்து கொள்கின்றனர்.
1976ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை, சுரங்கத்தில் இருந்து வருகின்ற நீரை சேமித்து வைக்க பயன்பட்டது.
12 மில்லியன் கன மீட்டர் நீரை சேமிக்கும் கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து எவ்வளவு கழிவு வெளியேறியுள்ளது என்று இன்னும் தெரியவில்லை.
இதுவொரு மிகவும் கடுமையான சோகமான சம்பவம் என்று கூறியுள்ள அதிபர் சயீர் போல்சனாரூ, சனிக்கிழமை இவ்விடத்தை பார்வையிடுகிறார்.
இந்த சோக நிகழ்வில் பாதிக்கப்பட்டோரை கவனிப்பதே நமது முக்கிய கரிசனை என்று அவர் கூறியுள்ளார்.
சுற்றுச்சூழல், சுரங்க அகழ்வு மற்றும் பிரதேச வளர்ச்சி அமைச்சர்களும் இந்த பிரதேசத்திற்கு செல்கின்றனர்.
இந்த அணையை சோதித்த ஜெர்மனி நிறுவனம் ஒன்று கடந்த ஆண்டு செப்டம்பரில் வழங்கிய சமீபத்திய அறிக்கையில் இது உறுதியாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது என்று வாலே சுரங்க அகழ்வு நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஃபாபியோ ஸ்கவாட்ஸ்மன் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணியின் தத்ரூபக் காட்சி:
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்