உணவளிக்க வந்த பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு முதலை

பட மூலாதாரம், AFP
இந்தோனீசிய பெண் ஒருவரை முதலை ஒன்று கடித்துக் குதறிக் கொன்றுள்ளது.
44 வயதாகும் டீசி டுவோ தான் வேலை செய்யும் முத்து பண்ணையில், சட்டத்துக்கு புறம்பான வகையில் வளர்க்கப்படும் முதலைக்கு உணவு கொடுக்கச் சென்றபோது கடித்து குதறப்பட்டதாக கூறப்படுகிறது.
700 கிலோ எடை கொண்டிருக்கும் மெரி எனப் பெயரிடப்பட்டுள்ள முதலை அப்பெண்ணின் கையை கடித்துள்ளது மேலும் வயிற்றின் பெரும்பாலான பகுதியைக் கடித்துக் குதறியுள்ளது.
தற்போது முதலைகளுக்கான பாதுகாப்பான தளமொன்றுக்கு மெரி அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த பண்ணையின் உரிமையாளரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
முத்து பண்ணையின் ஆய்வக தலைவரான டுவோ கடந்த ஜனவரி 10-ம் தேதி மெரிக்கு உணவளிக்கச் சென்றார். அப்போது வேலியைத் தாண்டி முதலை இருக்கும் பகுதிக்குள் விழுந்துவிட்டார். அடுத்த நாள் காலையில் தான் சக ஊழியர்கள் அப்பெண்ணின் உடலை கண்டறிந்தனர்.
வடக்கு சுலவெசி இயற்கை வள பாதுகாப்பு முகமையின் ஹென்றிக்ஸ் ருன்டெங்கன் பிபிசி இந்தோனீசியாவிடம் பேசியபோது, முதலையை இங்கிருந்து எடுத்துச் செல்வதற்காக முன்னதாக பல முறை இந்த தளத்திற்கு வந்ததாகவும் ஆனால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
''நாங்கள் சில முறை இந்த இடத்திற்கு வந்துள்ளோம். ஆனால் எப்போதுமே பூட்டப்பட்டுக் கிடந்தது,'' என புதன்கிழமை ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
ஏ.எஃப்.பி நிறுவனத்தின் செய்தியின்படி, அப்பெண்ணின் உடல் பாகங்கள் இன்னமும் 4.4 மீட்டர் நீளம் உள்ள அந்த முதலையின் இரைப்பைக்குள் இருக்கக்கூடும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

பட மூலாதாரம், Shutterstock
இந்தப் பண்ணை மற்றும் முதலை இரண்டுக்கும் உரிமையாளரான ஒரு ஜப்பானியரை காவல்துறையினர் தற்போது தேடி வருகின்றனர்.
இந்தோனீசிய தீவுக்கூட்டங்களில் பல்வேறு வகை முதலைகள் உள்ளன. இவை தொடர்ச்சியாக மனிதர்களை தாக்கி கொள்கின்றன ஏ எஃப் பி கூறுகிறது.
கடந்த 2016-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் ராஜா அம்பாட் தீவுகளில் ஒரு ரஷ்ய சுற்றுலாப்பயணி முதலையால் கொல்லப்பட்டு இறந்தார்.
உலகம் முழுவதும் முதலைகளால் ஆண்டுக்கு ஆயிரம் பேராவது மரணமடைகிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சுறாக்கள் தாக்கி மனிதர்கள் மரணமடைவதை விட இந்த எண்ணிக்கை அதிகம்.
முதலைகள் வேண்டுமென்றே தேவையின்றி மனிதர்களை வேட்டையாடுவதில்லை. ஆனால் சந்தர்ப்பவாத கொலையாளியாக இருக்கின்றன.
ஆஃப்ரிக்காவில் மட்டும் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான முதலை தாக்குதல்கள் நடக்கின்றன. இதில் முதலையின் வகைகளை பொறுத்து கிட்டத்தட்ட பாதி தாக்குதல்கள் உயிரிழப்பை ஏற்படுத்துபவையாக உள்ளன.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













