யேமன் பெண்மணிக்கு அமெரிக்கா விசா : மரணத்தின் விளிம்பில் உள்ள மகனை பார்க்க அனுமதி

கலிபோர்னியாவில் உள்ள தனது மகன் இறக்கும் தருவாயில் உள்ள நிலையில், அமெரிக்காவுக்கு சென்று தனது மகனை பார்க்க வேண்டும் என விரும்பினார் யேமனைச் சேர்ந்த ஷைமா ஸ்விலே. தற்போது அவருக்கு அமெரிக்காவில் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஷைமா ஸ்விலே தற்போது எகிப்தில் வசித்து வருகிறார். டிரம்ப் அரசு சில குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்ததால் ஷைமாவால் தனது மகனை பார்க்க இயலவில்லை.

இரண்டு வயது அப்துல்லா ஹாசன் மூளை சார்ந்த ஒரு நோயால் பாதிக்கப்பட்டார். அவர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில் சிறுவனின் தாயை அந்நாட்டுக்குள் நுழைய அனுமதிக்குமாறு பொதுமக்களிடம் இருந்து பெரும் அழுத்தங்களை சந்தித்தது அமெரிக்க அரசு.

இக்குடும்பத்தை பிரதிநிதித்துவம் செய்யும் லாப நோக்கற்ற வழக்கறிஞர் குழுவான அமெரிக்க-இஸ்லாமிய உறவுகளுக்கான அமைப்பு செவ்வாய்க்கிழமை ஷைமா ஸ்விலேவுக்கு அமெரிக்க அரசுத்துறை அனுமதி அளித்ததாக தெரிவித்துள்ளது.

அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மாலையில் ஸ்விலே சான் பிரான்சிஸ்கோ சென்றடைவார். மேலும் தனது மகனுக்கு உயிர் காக்கும் கருவி அகற்றப்படுவதற்கு முன் அவரால் சந்திக்கமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது என்கிறது அமெரிக்க-இஸ்லாமிய உறவுகளுக்கான அமைப்பு .

ஒரு அறிக்கையில் '' இது தான் எனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான தினம் . கௌரவத்துடன் துயரப்பட எங்களை அனுமதிக்கும் நடவடிக்கை இது '' என அப்துல்லாவின் அப்பா அலி ஹாசன்(22 வயது) கூறியுள்ளார்

அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்கள், ட்வீட்கள், அமெரிக்க அவையின் உறுப்பினர்களின் கடிதங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக அமைந்தன என்கிறது அமெரிக்க-இஸ்லாமிய உறவுகளுக்கான அமைப்பு.

சிஏஐஆர் அமைப்பின் வழக்கறிஞர் சாத் ஸ்வெலெம் ''இனி தனது குழந்தையை கடைசியாக ஒரு முறை பிடித்து முத்தமிட முடியும் என்பதில் நாங்கள் நிம்மதியடைந்துள்ளோம்'' என்கிறார்.

இக்குடும்பத்துக்கு மக்களின் ஆதரவு நம்பமுடியாததாக இருந்தது . மனிதநேயத்துடன் அரசு ஓர் நடவடிக்கை எடுப்பதற்கு மிகப்பெரிய அளவில் பொதுமக்களின் ஆதரவு தேவைப்பட்டிருக்கிறது'' என்றது அமெரிக்க-இஸ்லாமிய உறவுகளுக்கான அமைப்பு. ஆனால் இது தொடர்பாக அரசுத் துறை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

பயணத்தடை எதற்காக?

அமெரிக்க அதிபராக பதவியேற்ற உடனேயே, பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வசிக்கின்ற 7 நாடுகளில் இருந்து அமெரிக்கா வருவோருக்கு பயணத்தடையை விதித்து டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க உச்சநீதிமன்றம் டிரம்பின் பயணத்தடையை உறுதிசெய்வதற்கு முன்பு பலமுறை அதில் திருத்தங்கள் செய்தது.

டிரம்பின் பயணத்தடையின் காரணமாக இரான், வடகொரியா, வெனிசுவேலா, லிபியா, சோமாலியா, சிரியா, யேமன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அப்துல்லா பிறக்கும்போதே மூளை சார்ந்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததால் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு வந்தார்.

யேமனில் போர் தீவிரமடைந்ததால், அப்துல்லா எட்டு மாத குழந்தையாக இருக்கும்போது அவரது குடும்பம் எகிப்துக்கு சென்றது.

மூன்று மாதங்களுக்கு முன்பு, ஹஸன் தனது மகனை மேலதிக சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு அழைத்து சென்றார். சிறிதுகாலத்திற்கு பிறகு தனது மனைவியும் தங்களுடன் இணைந்து கொள்வார் என்ற எண்ணத்தில் அவர் இருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: