You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கியூபா மக்களுக்கு 3ஜி சேவை இப்போதுதான் கிடைத்திருக்கிறது - ஏன் இந்த தாமதம்?
கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
'இப்போது 3ஜி தேசம்'
தமது மக்களுக்கு 3ஜி நெட்வொர்க் சேவையை, கியூபா வழங்க இருக்கிறது. இதுவரை அந்நாட்டில் அரசு ஊடகவியலாளர்களுக்கும், வெளிநாட்டு தொழிலதிபர்களுக்கும் மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், இந்த சேவையை அனைவரும் பெற முடியாத அளவுக்கு அதன் கட்டணம் இருக்கிறது. 600 எம்.பி டேட்டாவின் விலை 7 டாலர்கள். இந்திய கணக்கில் மதிப்பிட்டால் அதன் விலை 490 ரூபாய். மக்கள் இணையத்தை பயன்படுத்துவதை கட்டுப்படுத்தவே இத்தனை நாட்களாக 3ஜி சேவை அளிக்காமல் அந்நாடு இருந்தது. அதுமட்டுமல்லாமல், ஐந்து ஆண்டுகள் முன்பு வரை வெளிநாட்டு விடுதிகள் மற்றும் அரசால் நடத்தப்படும் மன்றங்களில் மட்டுமே இணைய சேவை வழங்கப்பட்டு வந்தது.
'உளவியல் சித்திரவதை'
உளவு பார்த்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்ட பிரிட்டன் கல்வியாளர் தான் அங்கு உளவியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறி உள்ளார். 31 வயதான மேத்யூ, கைகளில் விலங்கிடப்பட்டு நாள் முழுவதும் நிற்க வைக்கப்பட்டதாகவும், தமக்கு தற்கொலை எண்ணங்கள் வந்ததாகவும் கூறி உள்ளார்.
பிபியிடம் பேசிய அவர், தாம் அங்கு எந்த உளவு வேலயையும் பார்க்கவில்லை என்றும், அவர்கள் எனக்களித்த சித்திரவதையை நிறுத்துவதற்காகவே எம்16இல் கேப்டனாக இருந்தேன் என்று ஒப்புகொண்டதாகவும் கூறி உள்ளார். ஆனால், அவர் 100 சதவிகிதம் குற்றவாளிதான். அவரை மன்னித்துவிட்டோம் என அமீரகம் கூறுகிறது. அண்மையில் மேத்யூவை விடுதலை செய்தது அமீரகம்.
'ஆயுதம் செய்வோம்'
பனிப் போரின் போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினால், நாங்கள் ஏவுகணைகளை உருவாக்குவோம் என ரஷ்ய அதிபர் விளாதிமர் புதின் எச்சரித்துள்ளார். ரஷ்யா முன்னதாகவே இடைநிலை அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்து கொண்டதாக நேட்டோ அமைப்பு குற்றஞ்சாட்டியதை அடுத்து புதின் இவ்வாறாக கூறி உள்ளார்.
'நிதி அதிகாரி கைது'
க்வாவே (HUAWEI) நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங், அமெரிக்க காவல்துறை கேட்டு கொண்டதன் பேரில் கனடாவில் கைது செய்யப்பட்டார். இவர் க்வாவே நிறுவனரின் மகள் ஆவார். இவரை சரணடைய அமெரிக்கா கேட்டு கொண்டிருந்தது.
ஒரு விமானத்திலிருந்து மற்றொரு விமானத்திற்கு மாறும் போது இவரை கைது செய்திருக்கிறது க்வாவே. ஆனால், அவர் என்ன தவறு செய்தாரென தெரியவில்லை என்கிறது அந்நிறுவனம். இரான் மீது அமெரிக்க விதித்த பொருளாதார தடையை க்வாவே மீறி விட்டதாக குற்றஞ்சாட்டி உள்ளது அமெரிக்கா.
'சிறந்த தந்தை'
அரசு மரியாதை உடன் வாஷிங்டனில் நடைபெற்ற முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபுள்யூ புஷ்ஷின் இறுதி சடங்கில் அவரது மகன் ஜார்ஜ் புஷ் அஞ்சலி செலுத்தினார்.
இறுதி சடங்கில் பேசிய புஷ் ஜூனியர், தனது தந்தையை "ஒரு நல்ல மனிதர், சிறந்த தந்தை" என்று விவரித்தார். இந்த நிகழ்வில் தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர்களும் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவின் 41வது அதிபராக 1989 முதல் 1993 வரை பணியாற்றிய அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ், தனது 94வது வயதில் கடந்த வெள்ளியன்று காலமானார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்