You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
‘அவசர நிலை பிரகடனம்?’: போராட்டமும், மோதலும் - பிரான்சில் நடப்பது இதுதான்
பிரான்ஸ் அதிபர் மக்ரோங் தலைமையில் அவசர பாதுகாப்பு கூட்டம் நடக்க இருக்கிறது. அந்நாட்டில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக மூன்றாவது வாரமாக நடைபெறும் போராட்டத்தில் போலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இப்போது நிலவும் அமைதியற்ற நிலையை எதிர்கொள்ள அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்படலாம் என்கிறார் அந்நாட்டு அரசு செய்தித் தொடர்பாளர்.
ஏன் மோதல்கள்?
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக அந்நாட்டில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தில் போலிஸ் அதிகாரிகள் மீது மஞ்சள் நிற பெயிண்டு வீசப்பட்டதால் போலிஸார் கூட்டத்தினர் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் 23 பேர் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் ஆவர்.
தொடரும் கைதுகள்
இதுவரை 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவிக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை ஜி20 மாநாட்டிலிருந்து திரும்பிய பிரான்ஸ் அதிபர் மக்ரோங், நேராக போராட்டம் நடந்த இடத்திற்கு சென்று சேதங்களை பார்வையிட்டார்.
என்ன காரணம்?
பிரான்ஸில் கார்களின் முக்கிய எரிபொருளான டீசலின் விலை, ஒரு லிட்டருக்கு சராசரியாக 1.24 யூரோக்கள் முதல் 1.53 யூரோ என கடந்த 12 மாதங்களில் 23 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதே இந்த போராட்டத்துக்கு காரணம்.
2000களின் தொடக்கங்களிலிருந்து எரிபொருள் விலை இத்தனை உயர்வை காண்பது இதுவே முதல்முறை.
உலகளவில் எண்ணெயின் விலை உயர்ந்தாலும், எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள் மீதான வரியை மக்ரோங் அரசு உயர்த்தியுள்ளது. இது 2019ஆம் ஆண்டு மேலும் உயரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான முதலீடுகளுக்கு நிதி தேவைப்படுவதால் எரிபொருள் மீது அதிகப்படியான வரி விதிக்கப்படுவதாக மக்ரோங் கூறுகிறார்.
மஞ்சள் ஜாக்கெட் போராட்டம்
"மஞ்சள் ஜாக்கெட்" என்று அழைக்கப்பட்ட இந்த போராட்டம் முதலில் டீசல் விலை அதிகரித்ததனால் தொடங்கப்பட்டது. அது பின்னர் வாழ்க்கை நடத்துவதற்கான செலவில் உயர்வு உள்ளிட்ட மக்ரோங்கின் பிற கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் களத்தில் இறங்கியதால் போராட்டம் விரிவடைந்தது.
சனிக்கிழமையன்று பிரான்ஸ் முழுவதும் 1,600 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கு கொண்டதாக பிரான்ஸின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதில் தலைநகரில் நடைபெற்ற போராட்டத்தை தவிர பெரும்பாலான போராட்டங்கள் அமைதியாக நடைபெற்றன. தலைநகர் பாரிஸில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 8000 பேர் கலந்து கொண்டனர்.
பிரான்ஸில் கார்கள் பழுதாகிபோனால் பயன்படுத்துவதற்கு வைத்திருக்கப்படும் பாதுகாப்பு கருவிகளுடன் ஓட்டுநர்கள் மஞ்சள் ஜாக்கெட்டுகளையும் வைத்திருக்க வேண்டும்.
சிவப்பு நிறத்தில் முக்கொம்பு வடிவ தடுப்பு, வண்டி சாலையில் பழுதடைந்தால் வைக்கப்படுவதை போல் ஓட்டுநர்கள் இந்த மஞ்சள் ஜாக்கெட்டுகளை அணிந்திருக்க வேண்டும். இது தொலைதூரத்தில் வருபவர்களுக்கு தெளிவாக தெரியக்கூடிய மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
மஞ்சள் ஜாக்கெட்டுகளை அணிய தவறினால் அபராதம் விதிக்கப்படும் சட்டம் 2008ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :