You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒயின் தோட்டத்தில் உயிரிழந்த மில்லியன்கணக்கான தேனீக்கள்
கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
ஒரே தோட்டத்தில் உயிரிழந்த மில்லியன்கணக்கான தேனீக்கள்
தென்னாப்பிரிக்காவில் ஒயின் தயாரிப்பு பகுதியில் விஷம் கொடுத்ததால் குறைந்தது ஒரு மில்லியன் தேனீக்கள் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
ஒயின் விவசாயிகள் பயன்படுத்திய பிப்ரோனில் என்ற பூச்சிக்கொல்லி மருந்து உயிரிழப்பிற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதுவதாக தேனீக்கள் உயிரிழந்த தோட்டத்தின் உரிமையாளரான பிரெண்டன் ஆஷ்லே-கூப்பர் பிபிசியிடம் தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரிலுள்ள மற்ற ஒயின் தோட்டங்களிலும் தேனீக்கள் உயிரிழந்துள்ளதால், மொத்தம் எத்தனை தேனீக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று தெரியவில்லை.
கடந்த காலத்தில் ஐரோப்பாவில் மில்லியன்கணக்கான தேனீக்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமாக பிப்ரோனில் என்ற பூச்சிக்கொல்லி குற்றஞ்சாட்டப்பட்டது.
தனது அரசாங்கத்தின் அறிக்கையையே நம்ப முடியாது என்று கூறிய டிரம்ப்
அமெரிக்காவில் காலநிலை மாற்றம் பேரழிவுகளை உண்டாக்கும் என்று கூறிய தனது சொந்த அரசாங்கத்தின் அறிக்கையின் மீதே நம்பிக்கை இல்லை என்று அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளது.
உலக வெப்பமயமாதல் அமெரிக்க பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று வெள்ளை மாளிகையில் டிரம்பிடம் கேட்டபோது, "எனக்கு அதில் நம்பிக்கை இல்லை" என்று தெரிவித்தார்.
காலநிலை மாற்றம் அமெரிக்காவில் வருடந்தோரும் பில்லியன்கணக்கான டாலர்கள் கூடுதல் செலவை ஏற்படுத்துவதோடு மக்களின் உடல்நலத்தில் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்துமென்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'முயற்சியை கைவிடுங்கள்'
அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டத்தில் ஒன்றான வடக்கு சென்டினல் தீவில் வசிக்கும் வெளியுலகுடன் தொடர்பில்லாத பழங்குடிகளால் கொல்லப்பட்டதாக கருதப்படும் அமெரிக்கரின் உடலை மீட்கும் முயற்சியை இந்திய அதிகாரிகள் கைவிட வேண்டுமென்று உரிமைகள் அமைப்பொன்று கேட்டுக்கொண்டுள்ளது.
உடலை மீட்கப்பதற்காக எடுக்கப்படும் எந்த முயற்சியும் செனிடலிஸ் பழங்குடிகள், அதிகாரிகள் ஆகிய இரண்டு தரப்பினருக்கும் 'ஆபத்தான விளைவுகளை' ஏற்படுத்துமென்று சர்வைவல் இன்டர்நேஷனல் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்தமான் சென்டினல் தீவில் தடை செய்யப்பட்ட பழங்குடியினர் பகுதிக்கு படகு மூலம் சென்ற அமெரிக்கர் ஜான் ஆலன் சாவ் (26) அங்கு வாழும் பழங்குடியினரால், கடந்த 17ஆம் தேதி அம்பு எய்து கொல்லப்பட்டார்.
செவ்வாயில் பத்திரமாக தரையிறங்கிய இன்சைட் ரோபோ
அமெரிக்காவின் விண்வெளி முகமையான நாசா செவ்வாய் கிரகத்தில் புதிய ரோபோ ஒன்றை தரையிறக்கியுள்ளது.
தி இன்சைட் (The InSight probe) எனப்படும் அந்த ரோபோ, செவ்வாய் கிரகத்தின் ஆழமான மற்றும் உள் பகுதிகள் குறித்து ஆராய்ச்சி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
பூமியை தவிர செவ்வாயில் மட்டும்தான் இது போன்ற ஆராய்ச்சி நடக்கிறது.
திங்கள்கிழமை மாலை 19:53 (ஜிஎம்டி) நேரப்படி இந்த ரோபோ செவ்வாயில் தரையிறங்கியதாக உறுதி செய்யப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :