பறக்கும் தட்டு? அயர்லாந்து விமான போக்குவரத்து ஆணையம் விசாரணை

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

பறக்கும் தட்டு?

பிரகாசமான வெளிச்சமும், அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் (பறக்கும் தட்டு?) ஒன்றும் தென் மேற்கு ஐர்லாந்து கடற்கரை பகுதியில் தென்பட்டதாக சொல்லப்பட்டது குறித்து ஐரீஷ் விமான போக்குவரத்து ஆணையம் விசாரித்து வருகிறது.

உள்ளூர் நேரப்படி நவம்பர் 9 ஆம் தேதி காலை 6.47 மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானி ஷனான் விமான போக்குவரத்து கட்டுபாட்டு அறையை தொடர்பு கொண்டு, இந்த பகுதியில் ஏதேனும் ராணுவ பயிற்சி நடக்கிறதா, ஏதோவொன்று 'அதிவேகமாக' பறந்து கொண்டிருக்கிறது என சொல்லி உள்ளார். கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் அதுபோல் எதுவும் பயிற்சி நடக்கவில்லை என கூறி உள்ளனர்.

அந்த அடையாளம் தெரியாத மர்மப் பொருள் விமானத்துக்கு இடது பக்கமாக வந்து வேகமாக வடக்கு நோக்கி சென்றுவிட்டது என்று கூறிய விமானி, ஆனால் அந்தப் பொருள் மோத வரவில்லை என்று கூறியுள்ளார்.

விர்ஜின் விமானத்தின் மற்றொரு விமானி, அது விண் கல்லாகவோ, புவியின் மண்டலத்துக்கு வெளியே சென்று மீண்டும் நுழையும் ஒரு பொருளாகவோ இருக்கக்கூடும் என்றார்.

இதனை தொடர்ந்து இது தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை

பாகிஸ்தானி கிறிஸ்தவ பெண் அசியா பீபிக்கு அடைக்கலம் தருவது தொடர்பாக கனடா பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தெய்வ நிந்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட அசியா, 8 ஆண்டு காலத் தனிமை சிறையை அனுபவித்தார். அண்மையில் பாகிஸ்தான் நீதிமன்றம் அசியா குற்றமற்றவர் என தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்தது. இதற்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வன்முறையில் இறங்கியதை அடுத்து அவருக்கு அடைக்கலம் தர பல நாடுகள் முன்வந்தன. ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அசியாவை கனடாவிற்கு அழைத்துவருவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

விருதை திரும்ப பெறுதல்

மியான்மர் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு அளித்த உயரிய விருதை திரும்ப பெற்றுள்ளது அம்னெஸ்டி இன்டெர்நேஷனல். நோபல் பரிசு பெற்றவரான சூச்சி, வீட்டுக் காவலில் இருந்த போது 2009 ஆம் ஆண்டு இந்த விருது அளிக்கப்பட்டது. ரோஹிஞ்ஜசா சிறுபான்மை இஸ்லாமியர்களுக்காக இவர் பேசவில்லை என சூச்சி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதனை தொடர்ந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளானார் சூச்சி.

காட்டுத்தீயில் அழிந்த பிரபலங்களின் வீடுகள்

அமெரிக்க நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களான ஜெரார்டு பட்லர், மிலே சைரஸ், கிம் ஆகியோரின் இல்லங்கள் கலிஃபோர்னியா காட்டுத்தீயினால் நாசமாகி உள்ளன. இதுவரை இந்தக் காட்டுத்தீயினால் 31 பேர் இறந்துள்ளனர், 2,50,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி உள்ளனர்.

காஸாவில் வெடித்த மோதல்

காஸா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ரகசிய நடவடிக்கை ஒன்றில் ஏழு கிளர்ச்சியாளர்களும், இஸ்ரேலை சேர்ந்த ஒரு ராணுவ வீரரும் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் வன்முறை வெடித்துள்ளது. கிளர்ச்சியாளர்கள் சிறு பீரங்கி மற்றும் 300 ஏவுகணைகளைக் கொண்டு தாக்கினர். இதில் ஒன்று வெற்றுப் பேருந்தை தாக்கியதில், அதன் அருகே இருந்த ராணுவ வீரர் காயமடைந்தார். ஹமாஸை குறிவைத்து இஸ்ரேலும் பதில் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :