You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கலிஃபோர்னியாவின் மூன்று மூலைகளில் மிரட்டும் காட்டுத்தீ - பலி எண்ணிக்கை உயர்வு
கலிஃபோர்னியாவை மிரட்டி வரும் காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீயினால் இதுவரை 31 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 200 பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கலிஃபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பலியானர்வர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
கலிஃபோர்னியாவின் வரலாற்றிலேயே மோசமான காட்டுத்தீயாக கருதப்படும் 1933ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சிலுள்ள கிரிஃபித் பூங்காவில் நிகழ்ந்த காட்டுத்தீயிக்கு சமமான நிலையை இது அடைந்துள்ளது.
அதேசமயத்தில், கலிஃபோர்னியாவின் தென்பகுதியிலுள்ள வூல்சி பகுதியில் ஏற்பட்ட தீயில் கடற்கரையோர உல்லாச விடுதிகளில் பரவியதில் தீயில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர்.
கலிஃபோர்னியாவின் மூன்று மூலைகளில் மிரட்டி வரும் காட்டுத்தீயிலிருந்து தப்பிப்பதற்காக கிட்டதட்ட 2,50,000 மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கலிஃபோர்னியாவில் வரும் நாட்களில் இன்னும் அதிகப்படியான காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை பேரழிவாக அறிவிக்கவேண்டுமென்று அம்மாநிலத்தின் ஆளுநர் ஜெர்ரி பிரவுன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால் அமெரிக்காவின் மத்திய அவசரகால நிதியிலிருந்து பல்வேறு உதவிகள் கிடைக்கும்.
மோசமான காடு பராமரிப்பினால்தான் இந்த பேரிடர் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியதை தொடர்ந்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் இந்த கருத்துகள் "பொறுப்பற்ற மற்றும் அவமதிக்கும்" வகையில் இருப்பதாக சர்வதேச தீயணைப்பு வீரர்கள் அமைப்பின் தலைவர் ஹரோல்ட் தெரிவித்துள்ளார்.
"இந்த தீ ஏற்படுத்தியுள்ள சேதம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது" என கலிஃபோர்னியா ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வூஸ்லி தீ எங்கு பரவுகிறது?
மத்திய லாஸ் ஏஞ்சல்ஸின் வட- மேற்கில் இருந்து 40 மைல்கள் தொலைவில் உள்ள ஆயிரம் ஓக் பகுதியில் இத்தீப்பிழம்பு கடந்த வியாழனன்று தொடங்கியது. மற்றொரு தீப்பிழம்பான ஹில் தீயும் இதே பகுதிக்கு அருகில் அதே நேரத்தில் ஆரம்பித்தது.
கேம்ப் தீ எங்குள்ளது?
ப்ளுமஸ் காட்டில் தொடங்கிய தீ 20,000 ஏக்கர் நிலப்பரப்பை எரித்து, பேரடைஸ் நகரையும் விட்டுவைக்கவில்லை. 6,700க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழில்கள் நாசமாக்கப்பட்டுள்ளதோடு, உயிருக்கு அஞ்சி அங்கிருந்த மக்கள் தப்பியோடினர். தீ மிக வேகமாக பரவிய காரணத்தினால், சிலர் தங்கள் கார்களை விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடினர்.
பிற செய்திகள்:
- நம்பகமான செய்திகள் இல்லாமல் எதிர்காலம் பற்றி முடிவு எடுக்க முடியாது - டோனி ஹால் #BeyondFakeNews
- மஹாபாரதத்தில் இருந்தே போலிச் செய்திகள் உள்ளன: மத்திய தகவல் ஆணையர்
- தேசியவாதத்தை புறக்கணியுங்கள்: உலகத் தலைவர்களுக்கு மக்ரோங் வேண்டுகோள்
- தேசியவாதத்தின் பெயரில் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன - பிபிசி ஆய்வு #BeyondFakeNews
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :