You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாக்குதலுக்கு மத்தியில் தாமதமான ஆப்கானிஸ்தான் தேர்தல்
ஆப்கானிஸ்தானில் நீண்டநாள் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில், பல கொடூர தாக்குதலுக்கு மத்தியில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
நாடுமுழுவதும் வாக்குச்சாவடிகளை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பயோமெட்ரிக் முறையால் ஏற்பட்ட தாமதங்களுக்கு மத்தியில், பல தொகுதிகளில் நாளையும் வாக்கெடுப்புகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரசாரத்தின் போது பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், காபூலில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் உட்பட பல்வெறு தாக்குதல்கள் தேர்தல் நாளிலும் நடைபெற்றன.
தேர்தலுக்கு முன்பாக 10 வேட்பாளர்கள் கொல்லப்பட்டனர்.
தாலிபன் மற்றும் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பு தேர்தலில் இடையூறு ஏற்படுத்தப் போவதாக தெரிவித்திருந்தது.
மூன்று வருட தாமதத்துக்கு பிறகு நடைபெறும் இந்த தேர்தலில் பெண்கள் உட்பட 2500 வேட்பாளர்கள் 250 இடங்களுக்கு போட்டியிடுகின்றனர்.
ஏன் இந்த தாமதம்?
கந்தஹர் மாகணத்தில் தாலிபன்கள் நடத்திய தாக்குதலில் மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதில் வாக்குப்பதிவு ஒருவார காலம் ஒத்தி வைக்கப்பட்டது. காஸினி மாகாணத்திலும் வாக்குப்பதிவு தாமதம் ஆனது.
சனிக்கிழமையன்று தொழில்நுட்ப கோளாறுகளும், நிர்வாக ரீதியான பிரச்சனைகளும் ஏற்பட்டதில் வாக்குப்பதிவு தடைப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பயோமெட்ரிக் கருவியை பயன்படுத்துவதில் சில தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டன.
தாமதம் ஏற்பட்டதால் உருஸ்கான் மாகாணத்தில் 15 பேர் பயோமெட்ரிக் கருவியை உடைக்க முயற்சித்தனர்.
மேலும் வாக்குப்பதிவை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பல இடங்களில் தாமதமாக வந்ததால் பல வாக்குச்சாவடிகள் தாமதமாக திறக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
பல வாக்குச்சாவடிகளில், பல மணி நேரம் மக்கள் காத்துக்கிடந்தனர். வாக்களிக்க வந்த முஸ்தஃபா, "வாக்களிக்க காத்திருப்போருக்கான வரிசை நீண்டு கொண்டே போகிறது. அவர்கள் எங்களின் வாக்குகளை விரைவாக பதிய வேண்டும். எங்கள் மீது யாரேனும் குண்டு வீசிவிடுவார்களோ என எங்களுக்கு அச்சமாக உள்ளது" என்று தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகளும் விரைவாக வரப்போவதில்லை. குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு பிறகே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
நடைபெற்ற வன்முறைகள் என்னென்ன?
- வாக்குபதிவு நாளன்று டஜன் கணக்கான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. பலர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் .
- காபூலில் நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் என டோலு செய்தி முகமை தெரிவித்துள்ளது.
- காபூலில் மற்றொரு சம்பவத்தில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் 30க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.
- தலைநகர் காபூலின் வட மேற்கு பகுதியில் வெடிகுண்டு ஒன்றை செயலிழக்கச் செய்ய முயன்ற இரண்டு போலிஸார் உயிரிழந்ததாக அசோசியேடட் பிரஸ் தெரிவித்துள்ளது.
- ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் இருக்கும் குண்டுஸ் நகரில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
- மத்திய மாகாணமான காரில் போலிஸாரும் தாக்கப்பட்டனர். வெடிகுண்டு வெடித்ததில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் ஆனால் சில செய்திகள் 11 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கின்றன.
- தேர்தல் அமைதியாக நடைபெற பாதுகாப்புத் துறை அமைச்சகம், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 70,000 பேரை பணியமர்த்தியது.
- மூன்றில் ஒரு பங்கு வாக்குச்சாவடிகள் பாதுகாப்பு காரணங்களால் மூடப்பட்டன.
பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் மட்டுமே வாக்குப்பதிவை பாதிக்கவில்லை. கடந்த தேர்தல் ஊழல் மற்றும் மோசடியால் பாதிக்கப்பட்டது. வாக்குப் பெட்டிகள் தவறாக நிரப்பப்பட்டன பல போலி வாக்குகள் பதியப்பட்டன எனவே தேர்தல் இடையூறுகளுக்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.
பல்வேறு தடைகளால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டமையால் ஞாயிறன்றும் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக 7000 வாக்குச்சாவடிகள் இயங்கும் என திட்டமிடப்பட்டது ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக 5000 வாக்குசாவடிகளே இயங்கின.
இந்த தேர்தல் ஏன் முக்கியம் வாய்ந்தது?
ஆப்கானிஸ்தானின் மக்கள் ஒரு நல்ல வாழ்க்கை, வேலை மற்றும் கல்வியை பெற விரும்புகின்றனர் மேலும் தாலிபனுடன் நடைபெறும் போரையும் அவர்கள் விரும்பவில்லை.
வேட்பாளர்கள் பலர் இளம் வயதினர் அவர்கள் போரால் பாதிப்படைந்த நாட்டில் பல மாற்றங்களை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்துள்ளனர்
ஆனால் அனைத்து அரசியல்வாதிகளும் ஊழல் செய்பவர்கள் என்றும் அவர்களால் எந்த ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை என்ற முடிவுக்கு ஆப்கானிஸ்தான் மக்கள் வந்துள்ளதாக செய்தியாளர் தெரிவிக்கிறார்.
தற்போதைய இந்த வாக்குப்பதிவு நாட்டின் ஆட்சிக்காலம் முடிந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்