9/11 தாக்குதல் - முக்கிய கூட்டாளியை விடுதலை செய்தது ஜெர்மனி
கடந்த சில மணி நேரங்களில் நடந்த உலக நிகழ்வுகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், Reuters
கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடந்த அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் தொடர்புடையவரின் கூட்டாளியை சிறையிலிருந்து ஜெர்மனி விடுதலை செய்யவுள்ளது.
மொரோக்கோவை சேர்ந்த மவுனி அல்-மொசாஸாடெக், இரட்டை கோபுர தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகளின் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்த குற்றச்சாட்டிற்காக சுமார் 15 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார்.
தனது தண்டனை காலத்தில் பெரும்பகுதியை அனுபவித்துவிட்ட இவர் தற்போது மொரோக்கோவிற்கு நாடு கடத்தப்படுகிறார்.
தனக்கும், 9/11 சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்று மொசாஸாடெக் தொடர்ந்து கூறி வந்தாலும், இந்த தாக்குதலை நடத்தியவர்களின் நண்பராக இவர் இருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை-நிறுவனர் காலமானார்

பட மூலாதாரம், Getty Images
ஒருவித புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பால் ஆலென் தனது 65 வயதில் உயிரிழந்துள்ளார்.
குருதியியல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2009ஆம் ஆண்டு தீவிர சிகிச்சைக்கு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்த பால், குருதியியல் புற்றுநோய் தன்னை மீண்டும் தாக்கியுள்ளதாக கடந்த வாரம்தான் அறிவித்திருந்தார்.
பாலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ், "என்னுடைய சிறந்த மற்றும் பழைய நண்பர்களில் ஒருவரை இழந்தது பெரும் துயரத்தை அளிக்கிறது. அவர் இல்லையெனில் கணினிகளின் உருவாக்கமே சாத்தியமில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

மற்றொரு பெண்ணை கொன்ற போக்கோ ஹராம் தீவிரவாதிகள்

பட மூலாதாரம், AFP
கடந்த மார்ச் மாதத்திலிருந்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு பெண் உதவியாளரை போக்கோ ஹராம் தீவிரவாதிகள் கொன்றுள்ளதை நைஜீரிய அரசாங்கம் உறுதிசெய்துள்ளது.
இந்த பெண் உதவியாளருடன் சேர்த்து கடத்தப்பட்ட மருத்துவச்சி கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
15 வயதான பள்ளி சிறுமியும், மற்றொரு மருத்துவ ஊழியரும் போக்கோ ஹராம் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜமால் கசோஜி காணாமல் போனது குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து

பட மூலாதாரம், EPA
செளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
செளதி அரசர் சல்மானுடன் நடத்திய தொலைபேசி அழைப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கசோஜிக்கு என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என செளதி அரசர் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ உடனடியாக செளதி அரேபியா செல்லவுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












