You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
16 வயதில் நடந்த பாலியல் தாக்குதல் பற்றி பத்மலக்ஷ்மி அமைதி காத்தது ஏன்?
பதின்பருவத்தில் தான் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டபின்னர் தாம் அமைதியாக இருந்தது ஏன் என நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு ஒரு கட்டுரை வடிவில் தெரிவித்திருக்கிறார் அமெரிக்க தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளராக பணிபுரியும் பத்மலக்ஷ்மி.
'' சுமார் 30 வருடங்களுக்கு முன்னரே ஓர் ஆண் என்னை பாலியல் வல்லுறவு செய்தார்'' என அதில் எழுதியுள்ளார் பத்மலக்ஷ்மி.
ஆனால் அவர் குற்றம்சாட்டும் அப்பாலியல் தாக்குதல் நிகழ்ந்த பிறகு, அதற்கு காரணம் அவரேதான் என வருத்தப்பட்டிருக்கிறார். பிறகுதான் பெண்கள் ஏன் பாலியல் தாக்குதலுக்கு ஆளான சம்பவங்களை வெளியில் சொல்வதில்லை என புரிந்துகொண்டதாக தெரிவித்திருக்கிறார்.
நீதிபதி பிரெட் கவனாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க டொனால்டுக்கு டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், கவனா குறித்து சில குற்றச்சாட்டுகள் கூறப்படும் வேளையில் இந்த கட்டுரையை எழுதியிருக்கிறார் பத்மலக்ஷ்மி.
பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக நீதிபதி பிரெட் கவனா மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள இரண்டு பெண்கள் மீதும் சந்தேகம் கொண்டிருக்கிறார் அதிபர் டிரம்ப்.
1980களில் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்ட சம்பவமொன்று நடந்ததாக அப்பெண்கள் குற்றம்சாட்டிய நிலையில், அவற்றை திரும்பத் திரும்ப வலுவாக மறுத்துவருகிறார் கவனா.
''ஃபோர்ட் எனும் பெண்மணி சொல்வது உண்மையாக இருந்தால் அவர், பல வருடங்களுக்கு முன்பே காவல்துறையை அணுகியிருக்க வேண்டும் என டிரம்ப் ட்வீட் செய்துள்ளார். ஆனால் குற்றம்சாட்டிய இரு பெண்கள் இவ்விஷயத்தை ஏன் பல வருடங்களாக வெளியில் சொல்லமாலும் குறிப்பாக காவல்துறையை அணுகாமலும் இருந்தார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஏனெனில் நானும் இதே விஷயத்தை செய்திருக்கிறேன்'' என எழுதியுள்ளார் லக்ஷ்மி.
லக்ஷ்மிக்கு என்ன நடந்தது?
பத்ம லக்ஷ்மி பதின் வருவத்தில் இருந்தபோது ஓர் ஆணுடன் டேட்டிங் செய்திருந்தார்.
தன்னுடைய கட்டுரையில், தான் அந்த ஆணின் வீட்டுக்குச் சென்றதாகவும், பின்னர் தூங்கிவிட்டதாகவும் எழுந்து பார்த்தால் அந்த ஆண் அவரின் மேல் இருந்ததாகவும் எழுதியிருக்கிறார்.
'' எனக்கு அப்போது 16 வயது. பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். நான் டேட்டிங் செய்த நபருடன் ஒரு மாலில் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு 23 வயது. கல்லூரி சென்று கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் எங்களுக்குள் நெருக்கம் அதிகமானது. அப்போது நான் கன்னியாக இருந்தேன் அது அவருக்கு தெரிந்திருந்தது. நான் உடலுறவுக்கு எப்போது தயாராவேன் என அப்போது அறிந்திருக்கவில்லை.''
''நாங்கள் டேட்டிங் செய்ய துவங்கிய சில மாதங்களுக்கு பின்னர் புத்தாண்டு தினத்தின் மாலையில் என்னை அவர் பாலியல் வல்லுறவு செய்தார். நான் பாலியல் வல்லுறவுக்குள்ளான அன்று மது குடித்திருந்தேனா என நீங்கள் கேட்கலாம். குடிப்பதோ குடிக்காமல் இருப்பதோ அங்கு விஷயமல்ல. ஆனால் அன்றைய தினம் நான் மது அருந்தியிருக்கவில்லை. '
சரி, அன்றைய தினம் நான் என்ன உடை அணிந்திருந்தேன் என கேட்கலாம். வல்லுறவு கொள்வதற்கு அதுவும் ஒரு காரணம் அல்ல. ஆனால் அன்றைய தினம் நான் முழு கை உடையில் இருந்தேன். எனது தோள்பட்டை மட்டும் தான் வெளியில் தெரிந்தது.
நாங்கள் இருவரும் இரண்டு பார்ட்டிகளுக்கு சென்றோம். அதன் பிறகு அவரது வீட்டுக்குச் சென்றோம். நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். நான் சோர்ந்திருந்ததால் படுக்கையில் படுத்தவுடன் உறங்கிவிட்டேன்.
அதன் பின் எனது கால்களுக்கு இடையில் ஏதோ கத்தியை கொண்டு கிழிப்பதைப்போன்ற உணர்வும் வலுவான வலியும் இருந்தபோது நான் விழித்துக்கொண்டேன். அப்போது அவர் என் மேல் இருந்தார்.
'என்ன செய்கிறாய்?' என கேட்டேன். 'கொஞ்ச நேரம்தான் வலிக்கும்' என்றார் அவர். அப்படிச் செய்யதே என கூறி கத்தினேன். கடுமையான வலியால் அழுதேன்.
அதன்பிறகு, அவர் '' தூங்கிக்கொண்டிருப்பதால் வலி குறைவாக இருக்கும் என எண்ணினேன்'' என்றார். அதன்பின்னர் என்னை அழைத்துச் சென்று எனது வீட்டில் விட்டார்.
நான் யாரிடமும் சொல்லவில்லை. அம்மாவிடமோ அல்லது நண்பர்களிடமோ கூட!''
''முதலில் நான் அதிர்ச்சியடைந்தேன். பிறகு அது எனது தவறு என கருதினேன். நான் பெரியவர்களிடம் கூறினால் '' அவனது வீட்டில் உனக்கு என்ன வேலை?'' என கேட்டிருப்பார்கள். அப்போது இதனை பாலியல் வல்லுறவா உடலுறவா? எந்த வகையில் சேர்ப்பது என முடிவு செய்திருக்கவில்லை. நான் கன்னித் தன்மை இழந்துவிட்டேன் என்பது மட்டுமே நினைவில் இருந்தது.''
''நான் எப்போதோ ஒருநாள் உடலுறவில் ஈடுபடும்போது அன்பை பகிர்ந்து கொள்வேன், அதன் வாயிலாக குழந்தை பெற்றுக்கொள்வேன் என்பதே எனது எண்ணத்தில் இருந்தது. ஆனால் இந்நிகழ்வு அந்தவகையில் வராது.
ஆனால், பிறகும் என்னுடைய முதலாமாண்டு கல்லூரி படிப்பின்போது இருந்த ஆண் நண்பர்களிடம் கூட நான் கன்னி என பொய் சொல்லியிருக்கிறேன்''.
''இப்போது நினைத்துப்பார்த்தால், அன்றைய தினம் நடந்தது பாலியல் வல்லுறவு என்பதை உணர்ந்தேன். எனக்கு ஏழு வயது இருக்கும்போது வளர்ப்புத்தந்தை உறவினர் ஒருவர் எனது கால்களுக்கு இடையில் தொட்டார். எனது கையை அவரது ஆணுறுப்பில் வைத்தார். இதை நான் எனது அம்மா மற்றும் வளர்ப்புத்தந்தையிடம் கூறியபோது அவர்கள் என்னை எனது தாத்தா பாட்டிகளுடன் வாழ இந்தியாவுக்கு ஒரு வருடம் அனுப்பிவைத்தார்கள். ஆக நீங்கள் உண்மையை சொன்னால் தூக்கியெறிப்படுவீர்கள். இந்த அனுபவங்கள் என்னை பாதித்தன.''
''பதின்பருவத்தில் ஒருவர் செய்த தவறுக்கு ஒரு ஆண் தண்டனை அனுபவிக்கவேண்டுமா என கேட்கலாம். ஆனால் ஒரு பெண் அந்த தவறுக்கு தனது வாழ்நாள் முழுவதும் அதற்கான தண்டனையை அனுபவிக்கிறாள். ''''
32 வருடங்களுக்கு பிறகு இதை கூறும் அந்த தொலைக்காட்சி பிரபலம் '' இதைப் பற்றி பேசுவதால் எனக்கு எந்த லாபமும் கிடைக்கப்போவதில்லை'' என்கிறார்.
''பாலியல் தாக்குதல் குறித்த உண்மையை எப்போது சொல்லலாம் என வரையறையை நமக்கு நாமே வைத்துக்கொள்வதால் நமக்கு தான் நஷ்டம்'' என்கிறார்.
'' எனக்கு தற்போது ஒரு மகள் இருக்கிறாள். அவளுக்கு வயது 8. அவள் எளிமையாக புரிந்துகொள்ளும் வண்ணம் நான் சொல்லியிருக்கிறேன் ' யாரவது உனது அந்தரங்க உறுப்புகளில் தொட்டால் அல்லது நீ சங்கடமாக உணர்ந்தால் சத்தமாக கத்திவிடு. உடனடியாக அங்கிருந்து வெளியேறி யாரிடமாவது சொல். உன் மீது கை வைக்க யாருக்கும் உரிமை இல்லை. உனது உடல் உனக்கானது' என கூறியிருக்கிறேன்'' என கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
பத்ம லக்ஷ்மி சென்னையில் 1970-ல் பிறந்தவர். அவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது பெற்றோர்கள் விவாகரத்து செய்து கொண்டனர். தனது தாயுடன் அவர் அமெரிக்காவில் வளர்ந்தார். தொலைக்காட்சி உலகில் பிரபலமான இவர், சல்மான் ருஷ்டியின் முன்னாள் மனைவி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :