மூன்றாவது மார்பகம்: ஃபேஷன் தொழிலின் புதுப்போக்கு

பட மூலாதாரம், Getty Images
உலகம் முழுவதும் நடத்தப்படும் பேஷன் ஷோக்களில் வடிவமைப்பாளர்கள் நவீன மற்றும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அவர்கள் அறிமுகப்படுத்தும் டிசைன்கள் பார்வையாளர்களை மட்டுமல்ல ஊடகங்களையும் ஈர்க்கின்றன.
ஃபேஷன் உலகில், வடிவமைப்பாளர்கள் தங்கள் படைப்பாற்றலை மாறுபட்ட கோணத்தில் முன்வைக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
செப்டம்பர் 22ஆம் தேதியன்று நடைபெற்ற மிலான் வீக்கில் இதுவரை யாருமே பயன்படுத்தாத புதிய உத்தி ஒன்று களம் இறக்கப்பட்டது.
மேடையில் அலங்காரமான பெண் ஒய்யார நடைபோட்டு நடந்து வந்தபோது, "பார்த்த விழி பார்த்தபடி பூத்துப்போனது" என்ற பிரபல திரைப்பட பாடல் வரிகளுக்கு ஏற்ப பார்வையாளர்களின் கண்கள் அந்த மாடலின் மீதிருந்து அகலவேயில்லை.
மாடலின் அழகோ, ஆடையோ, அலங்காரமோ, ஒப்பனையோ யாருடைய கண்ணிலும் படவில்லை. அனைவரையும் ஈர்த்தது மாடலின் மூன்றாவது மார்பகம்...
சாதாரணமான, இயல்பான ஒப்பனையில் நீல வண்ண ஆடை அணிந்திருந்த பெண் ஒயிலாக மேடையில் நடந்து வந்தபோது, அவரது இரு மார்பகங்களுக்கு நடுவில் மூன்றாவது மார்பகம் முளைத்திருந்தது! இல்லையில்லை... முளைத்ததுபோல அலங்காரம் செய்யப்பட்டிருந்தது...
இந்த மூன்றாவது மார்பகம், செயற்கையாக உருவாக்கப்பட்ட ப்ரோஸ்தெசிஸ் (prosthesis) மார்பகம். மூன்று மார்பகங்களையும் ஒரே மாதிரியாகக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக, பெண்ணின் நெஞ்சில் பொருத்தப்பட்ட மூன்றாவது மார்பகத்தின் இரு புறமும் இருந்த இயற்கையான மார்பகங்கள், ஒப்பனை மூலம் செயற்கையானதைப் போன்றே உருமாற்றப்பட்டன. இதுபோன்ற ஃபேஷன் ஷோக்களில் செயற்கையானவைக்கு ஒப்பாக, இயற்கையானவைக்கு ஒப்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியின் ஸ்ட்ரீட்வேர் என்ற பிராண்ட் GCDS (God Can't Destroy Streetwear) இந்த தயாரிப்பை வழங்கியது. இந்த பிராண்டை உருவாக்கிய இயக்குநர் ஜூலியானோ கால்ஜா என்ற வடிவமைப்பாளர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கால்ஜாவின் தாயாருக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக கேள்விப்பட்டதும் அவரது உறக்கம் தொலைந்து போனது. எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அவரது மனம் கவலைப்பட்டது.
மார்பகத்தை சுற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த அவரது மனம், ஃபேஷன் ஷோவுக்காக திட்டமிடும்போதும் அதன் அடிப்படையிலேயே உத்தியை வழங்கியிருக்கிறது.
மூன்று மார்பகங்களை உருவாக்கியது தனது மனதில் உள்ள அனைத்தையும் நினைவுபடுத்துவது மட்டுமல்ல, ஒருவிதமான அரசியல் அறிக்கை என்றும் அவர் கூறுகிறார்.


மேலும், கலை-கலாசாரம் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படும்போது, மூன்று மார்பகங்கள் என்ற கருத்தாக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று கால்ஜா கருதுகிறார்.
கலை மற்றும் கலாசாரத்திற்கு பங்களிக்க வேண்டிய அவசியத்தின் அடிப்படையில் மூன்றாவது மார்பகம் என்ற எண்ணத்தை அதில் இணைத்தார். 2014 ஆம் ஆண்டில் இந்த பிராண்டைத் தொடங்கினார் கால்ஜா.
இந்த நவீன ஆடை அலங்கார அணிவகுப்பில் வெள்ளை மற்றும் கருப்பினத்தை சேர்ந்த தலா ஒருவர் என இரு பெண்கள், மூன்று மார்பகங்களுடன் தோன்றினார்கள்.
சமூக ஊடகங்களில் சர்ச்சை
மூன்றாம் மார்பகம் என்ற கருத்தாக்கம், சமூக ஊடகங்களில் பல விவாதங்களை தூண்டியது. சிலர் நகைச்சுவையாக கிண்டலடித்தால், பலரோ அதிர்ச்சியடைந்தாலும், செய்தியை வெறுமனே பகிர்ந்ததோடு நின்றுவிட்டார்கள். சிலரோ திகைப்பூட்டும் பதில்களை பதிவிட்டார்கள்.
"மூன்று கால்கள் இருப்பதை விட இது நல்லது" என்று டேவிட் என்ற பயனர் எழுதியிருந்தார்.

பட மூலாதாரம், Twitter
''இதுபோன்ற உடலமைப்பு இருந்தால் பெண்களால் வாழவே முடியாது'' என்று டிவிட்டர் செய்தியில் கூறுகிறார் மார்க் அத்ரி.

பட மூலாதாரம், Twitter
"எதிர்காலத்தின் தாராளவாதிகள் விரும்புவது இதைத்தான்" என்கிறார் டாம்ப்கின் ஸ்பைஸ் என்பவர் தனது டிவிட்டர் செய்தியில்.

பட மூலாதாரம், Twitter
"இது பேஷனா? பைத்தியக்காரத்தனம்" என்கிறார் பிரட் கோஜக்.

பட மூலாதாரம், Twitter
"அடுத்த ஆண்டு மூன்று கால்களுடன் நடப்பார்கள் என்பதைத் தவிர, வேறு எதையும் விட்டுவைக்கவில்லை" என்று பதிவிட்டிருக்கிறார் மெல் கர்க்லே.

பட மூலாதாரம், Twitter
வித்தியாசமான முயற்சிகள்

பட மூலாதாரம், Reuters
ஃபேஷன் வீக்கில் எப்போதும் இதுபோன்ற புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமானதே.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற மிலான் ஃபேஷன் வீக்கில், தனது முகத்தைப் போன்ற தோற்றமளிக்கும் போலித் தலையை கையில் ஏந்தியபடி, மாடல்கள் ஒய்யார நடை பயின்றபடி மேடையை வலம் வந்தனர்.
மாடலின் கையில் இருந்த முகமும், மாடலின் முகமும் அச்சு அசலாக ஒன்றுபோலவே இருந்தன. அதுமட்டுமல்ல, போலி முகம் வெளிப்படுத்திய உணர்ச்சியையே அசல் முகமும் வெளிப்படுத்தியது. இது கூசி பிராண்டின் ஃபேஷன் முகம்...
இதைத்தவிர பல மாடல்கள் மூன்று கண்களுடன் வலம் வந்தால், சிலர் 'டிராகனின் சிறிய உருவங்களை' கையில் பிடித்தவாறு மேடையில் ஒயிலாக நடைபயின்றனர்.
திருநங்கையர்களுக்கும் மாடல் வாய்ப்பு - புது முயற்சி
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













