You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாலத்தீவு தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹீம் வெற்றி - இந்தியா, அமெரிக்கா வரவேற்பு
மாலத்தீவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளர் இப்ராஹீம் முஹம்மது சோலீப் வெற்றி பெற்றதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீனை எதிர்த்து போட்டியிட்ட இப்ராஹீம், 1,34,616 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. யாமீன் 96,132 வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்தியாவும் அமெரிக்காவும் இந்த முடிவுகளை வரவேற்றுள்ளன.
அதிகாரப்பூர்வ முடிவுகள் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியிடப்படும். ஆனால், அதற்கு முன்னதாகவே இப்ராஹீமின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களுடைய முடிவை ஏற்றுக் கொள்ளும்படி, அதிபர் அப்துல்லாவுக்கு, சோலீப் அழைப்பு விடுத்துள்ளார்.
"மாலத்தீவில் உள்ள மக்களுக்கு, மாற்றம், அமைதி மற்றும் நீதி வேண்டும் என்று இதிலிருந்து நன்றாக தெரிகிறது" என தலைநகர் மேலில் செய்தியாளர்களிடம் பேசிய சோலீப் தெரிவித்தார்.
அடுத்த முறையும் அதிபராக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட யாமீன், வெளிப்படையாக இன்னும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
யார் இந்த இப்ராஹீம் முஹம்மது சோலீப்?
மாலத்தீவில் உள்ள மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான இப்ராஹீம், பல ஆண்டுகளாக ஜனநாயக சீர்திருத்தத்தில் ஈடுபட்டு வந்தார்.
மாலத்தீவு ஜனநாயக கட்சி, ஜூம்ஹொரி கட்சி மற்றும் அதாலத் கட்சி ஆகிய எதிர்க்கட்சிகளுடனான கூட்டணியில் அதிபர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்டார்.
மாலத்தீவு ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற தவைராக 2011ஆம் ஆண்டிலிருந்து சோலீப் இருந்து வருகிறார்.
இந்தியா வரவேற்பு
இந்நிலையில், மாலத்தீவுடனான உறவை மேலும் மேம்படுத்த இணக்கமாக செயல்பாட்டை எதிர்பார்ப்பதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இப்ராஹீம் முஹம்மது சோலீப் வெற்றிப் பெற்றுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அவருக்கு வாழ்த்துகளை இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும், முடிவுகளை தேர்தல் ஆணையம், அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கும் என நம்புவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர்
- `ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதை
- ரஃபேல் ஊழல் குற்றச்சாட்டு: இது இன்னொரு போஃபர்ஸ் ஊழலா?
- 'சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே'
- நகர்ப்புற நக்சல்: கவலையளிக்கும் கைதுகளும் உச்ச நீதிமன்றத் தலையீடும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :