இந்தியாவில் தமிழ் - இந்தி; மொழி அரசியல் ஆதிக்கம் செலுத்திய உலக நாடுகள்

அரசியல் என்பது வெறும் தேர்தல் அரசியல் மட்டுமல்ல. தேர்தலையும், அரசாங்கத்தையும், ஏன் சாதியையும், மதத்தையும், நாட்டையும் முதலாக கொண்டு அரசியல் செய்யப்படுகின்றன.

மேற்குறிப்பிடப்பட்ட அரசியல்களை விட மொழி சார்ந்த பிரச்சனையின் காரணமாக உருவான அரசியல்கள் பல நாடுகளின் வரலாற்றையே தலைகீழாக மாற்றியுள்ளன.

அந்த வகையில் இருவேறு மொழிகளுக்கிடையேயான பிரச்சனையின் மூலம் அரசியல் உருவான சில நாடுகள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

இந்தியா

பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றவுடன் இந்திய அரசாங்கம் வட இந்தியாவில் பரவலாக பேசப்படும் இந்தி மொழியை அரசின் ஆட்சி மொழியாக்குவதற்கு முயற்சி செய்தது. ஆனால், பல்வேறு மொழிபேசும் மாநிலங்கள், சமுதாயங்களை கொண்ட இந்தியாவில், குறிப்பாக தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

தனக்கே உரிய பழமை வாய்ந்த மொழி சார்ந்த சிறப்பியல்புகளையும், தனித்துவத்தையும் கொண்ட தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிராக மிகப் பெரிய அளவிலான போராட்டங்களை மாணவர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் முன்னெடுத்தனர்.

தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பை தடுக்கும் முயற்சிகள் பலனளிக்காததால் இந்தியை அதிகாரப்பூர்வ ஆட்சிமொழியாக்கும் முடிவிலிருந்து அப்போதைய மத்திய அரசு பின்வாங்கியது. எனவே, அன்று முதல் இன்றுவரை ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளும் அலுவல் மொழிகளாக பயன்படுத்தப்படுகிறதே தவிர, தேசிய மொழி என்ற ஒன்று இதுவரை தேர்வு செய்யப்படவில்லை.

கனடா

கனடாவின் அரசமைப்பு சட்டத்தின்படி, "சம உரிமை" பெற்ற மொழிகளாக ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகள் உள்ளன. மேலும், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இருந்தபோதிலும், பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் அதிகமுள்ள கியூபெக் மாகாணத்தில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகமுள்ளதாக கவலை எழுந்தது.

எனவே, கடந்த 1974ஆம் ஆண்டு கியூபெக் மாகாணத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக பிரெஞ்சு அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், உணவகங்கள், சாலைகள் போன்றவற்றின் பெயர்களை பிரெஞ்சு மொழியில் எழுதுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

லாட்வியா

ஐரோப்பாவின் பால்டிக் கடற்கரையை ஒட்டியுள்ள லாட்வியாவில், ரஷ்ய மொழியை பேசுபவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். ஆனால், அந்நாட்டு அரசாங்கமோ லாட்வியா மொழியை மட்டும் அதிகாரப்பூர்வ மொழியாக கொண்டுள்ளது.

நீண்டகால போராட்டத்திற்கு பிறகு, ரஷ்ய மொழியை நாட்டின் இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியாக்குவதற்காக கடந்த 2012ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பும் தோல்வியில் முடிந்தது.

எனவே, லாட்வியன் மொழியை அந்நாட்டிலுள்ள உயர்நிலை பள்ளிகள் அனைத்திலும் பயிற்று மொழியாக்குவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.

குரேஷியா

யுகோஸ்லேவியாவின் ஒரு பகுதியாக இருந்த குரேஷியா கடந்த 1991ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றவுடன், அந்த பிராந்தியத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்ட சிரிலிக் எழுத்து வடிவை பயன்பாட்டிலிருந்து நீக்கியது.

குரேஷியர்கள் லத்தீன் எழுத்து வடிவையும், செர்பியர்கள் சிரிலிக் எழுத்து வடிவையும் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு குரேஷியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தவுடன், செர்பிய சிறுபான்மையினர் அதிகமுள்ள பகுதிகளில் சிரிலிக், லத்தீன் ஆகிய இரண்டு எழுத்து வடிவை பயன்படுத்திக்கொள்வதற்கு குரேஷிய அரசாங்கம் அனுமதியளித்தது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரேஷியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துருக்கி

துருக்கியின் ஒரே அதிகாரப்பூர்வ ஆட்சிமொழியாக துருக்கிய மொழி இருந்து வந்தாலும், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குர்திஷ் சிறுபான்மையினர் தங்களது மொழியை பயன்படுத்திக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த பல்வேறு ஆண்டுகளாக குர்திஷ் சிறுபான்மையினரும், ஐரோப்பிய ஒன்றியமும் கொடுத்துவந்த அழுத்தத்தின் காரணமாக கடந்த 2002ஆம் ஆண்டு அந்நாட்டின் சில பகுதிகளில் குர்திஷ் மொழியில் பாடங்களை கற்பிப்பதற்கும், ஊடகங்களை தொடங்குவதற்கும் துருக்கி அரசாங்கம் அனுமதி அளித்தது.

அதன் பிறகு, கடந்த 2009ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கையின் காரணமாக துருக்கியிலுள்ள பல்கலைக்கழகங்களில் குர்திஷ் உள்ளிட்ட சிறுபான்மையினர் மொழிகளில் படிப்புகள் வழங்கப்பட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :