You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரேசில் அருங்காட்சியகத்தில் தீ: முக்கிய கலைப் பொருட்கள் சேதமாகும் அபாயம்
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள பழமையான தேசிய அருங்காட்சியம் தீயில் நாசமாகியுள்ளது.
அருங்காட்சியகத்தில் இருந்த மிகவும் பழமை வாய்ந்த எஞ்சியிருந்த உடற்கூறுகள் உள்ளிட்ட 20 மில்லியன் பொருட்கள் அனைத்தும் சேதமாகியிருக்கும் என்று நம்பப்படுகிறது.
எப்படி தீ பற்றியது என்பது பற்றி தெரிய வரவில்லை. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தற்போது அருங்காட்சியம் இருக்கும் கட்டடத்தில், ஒரு காலத்தில் போர்துகீஸிய அரச குடும்பம் வாழ்ந்து வந்தது. இந்தாண்டு இக்கட்டடத்திற்கு 200வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை அருங்காட்சியகம் மூடியிருந்த நிலையில், இந்த தீ ஏற்பட்டது.
கட்டடம் முழுவதும் தீ பரவுவதை அந்நாட்டு தொலைக்காட்சியில் வெளியான செய்தியில் காணமுடிந்தது.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் மைக்கெல் டிமெர், "பிரேசில் மக்களுக்கு இது ஒரு சோகமான நாள்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 200 ஆண்டு காலத்தின் ஆய்வுப்பணிகள், அறிவுத்திறன் ஆகியவற்றை நாம் தொலைத்துவிட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அருங்காட்சியத்திற்கு அருகில் இருந்த தீயணைப்புக் குழாய்கள் வேலை செய்யாததால் அருகில் இருந்த ஏரியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் நீர் எடுத்து வரவேண்டிய நிலை ஏற்பட்டதாக ரியோவின் தீயணைப்புத்துறை செய்தி தொடர்பாளர் ரொபெர்டோ ரொபடே ஏபி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
திங்கட்கிழமை காலை தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, சேதமடைந்த பொருட்கள் மீட்கப்பட்டன.
அருங்காட்சியகத்தில் என்ன இருந்தது?
அமெரிக்காவில் இயற்கை வரலாறு மற்றும் மானுடவியல் பற்றிய மிகப் பெரிய அருங்காட்சியகத்தில் இதுவும் ஒன்று.
அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட படிமங்கள், பிரேசிலின் மிகப்பெரிய விண்கல், டைனாசரின் எலும்புக்கூடுகள், 12,000 வருடங்கள் பழமை வாய்ந்த 'லூசியா' என்ற பெண்ணின் எலும்புக்கூடு போன்றவை அங்கு இருந்தன
கிரேக்க-ரோமன் மற்றும் எகிப்து காலகட்டத்தில் இருந்த பொருட்களும் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெற்றிருந்தன.
1818ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம், அறிவியல் ஆராய்ச்சிக்காக ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் நோக்கத்தில் தொடங்கப்பட்டதாகும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்