You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏன் பிரிட்டிஷ் வாழ் இந்தியர்கள் பழமைவாதிகளாக இருக்கிறார்கள்?
- எழுதியவர், ட்ருஷார் பரோத்
- பதவி, பிபிசி
பிரிட்டனில் வசிக்கும் ஆசியர்கள் குறிப்பாக இந்தியர், பாகிஸ்தானியர், பங்களாதேஷிகள் பெரும்பாலானோர் பிரிட்டிஷ் மக்களை விடவும் வாழ்க்கையில் பழமைவாத பார்வை நிறைந்தவர்களாக உள்ளனர். பிபிசி ஆசிய பிரிவின் ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த தகவல் எனக்கு ஆச்சரியம் தரவில்லை.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் பிரிட்டிஷ் இந்தியர் வீட்டில் வளர்ந்த சிலரில் நானும் ஒருவன். பிரிட்டிஷ் வாழ் ஆசிய மக்களை விட பிரிட்டிஷ் மக்கள் முற்போக்கான மனப்பாங்கு மிக்கவர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களை விடவும் பிரிட்டிஷ் இந்தியர்கள் பிற்போக்கு மனப்பாங்கு மிக்கவர்கள் என நான் கருதுவது உங்களுக்கு ஆச்சரியம் தரலாம்.
பழமைவாத மனபாங்கு
கடந்தாண்டு முதல் டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் பணி புரிந்து வருகிறேன். 4 வயதாக இருக்கும் போது இந்தியாவிலிருந்து குடும்பத்துடன் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு சென்றுவிட்டேன். நீண்ட காலத்திற்கு பின் கடந்தாண்டு இந்தியா திரும்பினேன். அப்போது பல விஷயங்களை நான் அறிந்தேன்.
பழமைவாத மனப்பாங்கு கொண்ட தங்கள் இந்திய முன்னோர்களின் பண்புகள், கலாசாரம் அடிப்படையிலேயே பிரிட்டிஷ் வாழ்இந்தியர்களும் தங்கள் வாழ்க்கையை கட்டமைத்துகொண்டுள்ளனர் என்பதுதான் அது.
இந்த பண்புகள், கலாசாரம் அனைத்தும் காலத்தில் உறைந்தவை.
இந்தியாவிலிருந்து பிரிட்டன் வந்தாலும் சரி அல்லது கிழக்கு ஆப்ரிக்கா சென்றாலும் சரி இந்தியர்கள் தங்கள் வேர்களை இறுகப்பிடித்தபடி உள்ளனர். ஆனால் தற்போது இந்தியர்கள் முன்னேறுவதை பார்க்க முடிகிறது.
என் வயதை ஒத்த தலைமுறையினர் முன்பிருந்த இந்தியாவுடன் தற்போதைய இந்தியாவை பார்க்கும்போது நிறைய மாற்றங்களை உணர்கிறார்கள். மேற்கத்திய மற்றும் நவீன கால நாகரிக வாழ்க்கைக்கு அவர்கள் மாறியுள்ளனர். நாங்கள் இந்தியா வரும்போது ஜீன்ஸ், டி ஷர்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ என காட்சியளிப்போம். ஆனால் அப்போது நாங்கள் இருந்ததை விடவும் இப்போது இந்தியர்கள் மாறிவிட்டனர்.
ஆடை அணிவதிலும் சிகை அலங்காரத்திலும் வாழ்க்கை குறித்த கண்ணோட்டத்திலும் அவர்கள் வெகுவாக முன்னேறிவிட்டதாகவே கருதுகிறேன்.
குடியேற்றம், மதம் என வரும்போது பிரிட்டிஷ் ஆசிய குடும்பங்கள் பழமைவாதத்தில் ஊறியிருப்பது பிபிசி ஆய்வுகளில் தெரியவருகிறது. திருமணத்திற்கு முந்தைய பாலுறவு, ஓரினச் சேர்க்கை என வரும்போது இவர்களின் மனோபாவம் பழமையான கருத்துகளை ஒட்டியே உள்ளது.
இந்தியாவில் இது போன்ற பண்புகள், கலாச்சாரங்கள் முக்கியமானதாக உள்ளன. ஆனால் டெல்லி போன்ற நகரங்களில் உண்மையான மாற்றம் நிகழ்ந்து வருவதை தற்போது நான் காண்கிறேன்.
வெளிப்படையான உரையாடல்
பாலுறவு குறித்தும் திருமணம் குறித்தும் வாழ்க்கை துணை குறித்தும் தம் பெற்றோர்களுடன் வெளிப்படையாக பேசியுள்ளதாக என் நண்பர்கள் தெரிவித்தனர். ஆனால் யுகே-வில் உள்ள பிரிட்டிஷ் இந்திய குடும்பத்தினரில் ஒருவர் கூட என்னிடம் இது போன்று பேசியதாக நினைவில் இல்லை.
குஜராத்தியான நான் லண்டனில் புலால் உண்ணா குடும்பத்தில் வளர்ந்தேன்.
புலால் உண்ணாதவராக இருப்பது இந்திய சமூகத்தில் இயல்பானதாகவும் எளிதில் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் இருந்தது.
புலால் உண்பது அனைத்து தரப்புக்கும் பொதுவானதாக இருந்தபோதிலும் இந்திய சமூகத்தில் இதற்கு மாறாக இருந்தது.
பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு வசிக்க வந்தபோது நான் புலால் உண்ணாதவன் எனக்கூறக்கேட்டு பலரும் வியப்படைந்தனர். இன்னும் சிலர் ஏமாற்றத்துடன் என்னைப் பார்த்தனர்.
எத்தனை பேர் இப்படி கூறினார்கள் என்ற எண்ணிக்கையை கூட மறந்துவிட்டேன்.
நவீன கால இந்தியர்களுக்கு மத்தியில் இப்படி பிற்போக்குத்தனமானவனாக இருக்கிறாரே என அவர்கள் நினைத்திருப்பார்கள் என கருதுகிறேன். ஆனால் இது சரியான யூகமா என்பதை உறுதியாக கூற முடியாது. அதே சமயம் பிரிட்டனிலும் பிற மேற்கத்திய நாடுகளிலும் இளம் தலைமுறையினரிடம் புலால் உணவு தவிர்க்கும்போக்கு அதிகரித்து வருவதையும் காண முடிகிறது. ஆனால் நானறிந்த இந்தியர்கள் பலர் இதை பழமைவாத போக்காக கருதுகின்றனர்.
நான் விரும்பும் இந்தியா
இந்தியா தற்போது எவ்வளவு மாறியுள்ளது என்பதை கடந்த ஓராண்டில் தெரிந்துகொண்டுள்ளேன். நவீன இந்தியாவின் பரிமாணங்களை நான் விரும்புகிறேன். அவற்றை இன்னும் நன்றாக புரிந்துகொண்டுவருகிறேன். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் நான் உறுதியாக கூறுகிறேன். எது மாறினாலும் எனது சிகையலங்காரம் மாறாது என்பதுதான் அது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்