ஐ. எஸ் அமைப்பால் பாலியல் அடிமையாக பிடித்து வைக்கப்பட்ட பெண்ணின் கதை

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம்.

பாலியல் அடிமை

வடக்கு இராக்கில் யசிதி மக்கள் நிறைந்து வாழும் பகுதியிலிருந்து ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகளால் பிடித்து செல்லப்பட்ட பெண் தமது அனுபவத்தை பிபிசியிடம் பகிர்ந்துள்ளார். தமது 14 வயதில் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்ட அவர், நூறு டாலர் பணத்திற்கு அபு ஹுமம் என்பவரிடம் பாலியல் அடிமையாக விற்கப்பட்டு இருக்கிறார். அவர் மட்டும் அல்ல அவருடன் ஏறத்தாழ ஆயிரம் பெண்கள் விற்கப்பட்டு இருக்கிறார்கள். பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட அவர் மூன்று மாத போராட்டத்திற்கு பின் அங்கிருந்து தப்பி ஜெர்மனி வந்திருக்கிறார்.

செலவு அதிகம், ராணுவ அணிவகுப்பு வேண்டாம்

ராணுவ தினத்தன்று நடத்தப்படும் ராணுவ அணிவகுப்பை வேண்டாம் என ரத்து செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அதற்கு அவர் கூறிய காரணம், இந்த அணிவகுப்பை நடத்துவதற்கு செலவு அதிகமாகிறது என்பதுதான். இந்த அணிவகுப்பை நடத்த திட்டமிட்டதைவிட மூன்று மடங்கு தொகை அதிகமாகலாம். அதாவது, 90 மில்லியன் டாலர்கள் அதிகம் ஆகலாம் என்கிறது அங்கிருந்து வரும் தகவல்கள். இது குறித்து ட்வீட் செய்துள்ள டிரம்ப், உள்ளூர் அரசியல்வாதிகள் 'பெரும் தொகை' கேட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

திருமண நிகழ்வுக்குபின் சந்திப்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சனிக்கிழமை ஜெர்மன் சான்சிலர் ஏங்கெலா மெர்கலை சந்திக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், இந்த சந்திப்பானது ஆஸ்திரியாவில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பின்பே நிகழும் என்கின்றன தகவல்கள். ஆஸ்திரியாவின் தீவிர வலதுசாரி கட்சியான சுதந்திர கட்சியின் கூட்டணி ஆட்சியில், வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கிறார் கரீன். ஆஸ்திரியா வருகையின் போது கரீனின் திருமணத்தில் கலந்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சமீபத்தில்தான் புதின் வருவது உறுதி செய்யப்பட்டது. ஆனால், புதினுக்கு அதிகமான பாதுகாப்பு வழங்கவேண்டி இருக்கும். இதற்காக செலவிடப்படும் பணம் அனைத்தும் வரி செலுத்துவோரின் பணம் என கவலை தெரிவித்துள்ளனர் ஆஸ்திரிய மக்கள்.

வைஃபை இணைப்புக்காக போராட்டம்

தென் ஆஃப்ரிக்கா டர்பனில் உள்ள ஒரு கடற்கரை நகரத்தில் அமைந்துள்ள க்வாஜுலு நடால் பல்கலைக்கழகத்தில் வைஃபை இணைப்பு மிகவும் மெதுவாக இருக்கிறது என்றும், அங்கு வாழ்க்கை தரம் மோசமாக இருக்கிறது என்றும் குற்றஞ்சாட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் பலரை கைது செய்தனர்.

கேரள வெள்ளம்

கேரள வெள்ள பாதிப்பானது சர்வதேச செய்திகளில் பிரதான இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் கடந்த நூறு வருடங்களில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு மிகவும் மோசமானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் பருவமழை துவங்கியது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் உயிரிழப்புகள் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது.பருவமழையை தொடர்ந்த பாதிப்புகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு படை வீரர்கள் கேரளாவில் வசிப்பவர்களை காப்பாற்ற கடுமையாக போராடிக்கொண்டிருக்கின்றனர்.நிலச்சரிவின் காரணமாக நிறைய பேர் உயிரிழந்ததாக கேரள அரசு கூறுகிறது.

கேரளாவின் முக்கிய விமானநிலையமான கொச்சி விமான நிலையம் ஆகஸ்ட் 26-ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாதிப்புகளை பார்வையிட இன்று இந்தியப் பிரதமர் மோதி கேரளாவுக்கு விரைந்துள்ளார். 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :