‘உடனே நிறுத்தப்பட வேண்டும்’ - ட்விட்டரில் கொதித்த டிரம்ப்

கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

நிறுத்தப்பட வேண்டும்

அமெரிக்கா தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பாக இப்போது சென்று கொண்டிருக்கும் விசாரணை இப்போதே நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த விசாரணைக்கு தலைமைவகித்து வரும் சிறப்பு வழக்குரைஞர் ராபர் முல்லரை 'முற்றிலும் முரண்பாடு நிறைந்த நபர்' என்றும் விமர்சித்துள்ளார்.

நாடு திரும்பிய மதகுரு

எத்தியோப்பியாவின் அதிகாரமிக்க பழமைவாத தேவாலயத்தின் தலைவராக இருந்த பிஷப் மெர்கொரியோஸ் 27 ஆண்டுகளுக்குப் பின் நாடு திரும்பி இருக்கிறார். அந்நாட்டில் 1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தொடர்ந்து தேவாலயம் இரண்டுபட்டது. அதனை தொடர்ந்து இவர் நாடு கடத்தப்பட்டிருந்தார். எத்தியோப்பியா பிரதமர் அபே அகமது கடந்த வாரம் பிஷப்பை அமெரிக்காவில் சந்தித்து அழைப்பு விடுத்ததை தொடர்ந்து பிஷப் நாடு திரும்பினார்.

தொடரும் வர்த்தக போர்

முன்பு திட்டமிட்டதைவிட ஏறத்தாழ இரண்டு மடங்கு வரியை 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய சீன பொருட்கள் மீது விதிக்க அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. சீனாவின் வர்த்தக நடைமுறை மாற வேண்டும் என்று விரும்பும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டு கொண்டதை அடுத்து வரியை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், இந்த முடிவானது உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட இரண்டு நாடுகளிடையே பதற்றத்தை அதிகப்படுத்தும் என்று தெரிகிறது.

பொருளாதார தடை

அமெரிக்க பாஸ்டரை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பதைக் காரணம் காட்டி துருக்கி நீதி மற்றும் உள்துறை அமைச்சர்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ளது அமெரிக்கா. வடக்கு கரோலினாவை சேர்ந்த சுவிசேஷ அறிவிப்பாளரான ஆண்ட்ரியூ ப்ரூண்சன் அரசியல் குழுக்களுடன் தொடர்ப்பு வைத்திருக்கிறார் என்று குற்றஞ்சாட்டி கடந்து இரண்டு ஆண்டுகளாக அவரை சிறையில் வைத்திருக்கிறது துருக்கி. ஆனால், அவர் நிரபராதி என்கிறது அமெரிக்கா.

ஜிம்பாப்வே துப்பாக்கிச் சூடு

ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் போராட்டத்தில் ஈடுபட்ட எதிகட்சியினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் இறந்தனர் என்கிறது அந்நாட்டு காவல் துறை. ஜிம்பாப்வேவில் திங்கட்கிழமை நடந்த தேர்தலில் சானு பி.எஃப் கட்சி முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக கூறி, எதிர்கட்சியான ஜனநாயக மாற்றத்திற்கான இயக்கக் கூட்டணி போராட்டத்தில் ஈடுபட்டது. இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது என்று கூறும் போலீஸார், அதனை கட்டுக்குள் கொண்டுவரவே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுகிறது. ராபர்ட் முகாபே ஆட்சியை இது நினைவுப் படுத்துவதாக குற்றஞ்சாட்டுகிறது ஜனநாயக மாற்றத்திற்கான இயக்கக் கூட்டணி .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :