You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லாவோஸ் அணை விபத்து; 20 பேர் பலி - வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு மீட்பு பணியாளர்கள் விரைவு
திங்கள்கிழமையன்று லாவோஸில் ஓர் அணை உடைந்து குறைந்தது 20 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்திருப்போரை மீட்கும் பொருட்டு அதிக எண்ணிக்கையில் மீட்பு பணியாளர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளனர்.
அணை உடைந்ததில் குறைந்தது 100 பேரை காணவில்லை என்றும், ஆயிரகணக்கானோர் அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
தென் கிழக்கு லாவோஸில் உள்ள அட்டபியு மாகாணத்தில், சம்பவ இடத்தில் இருந்து கிராம மக்களை வெளியேற்ற உள்ளூர் அதிகாரிகள் ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகளை பயன்படுத்துகின்றனர்.
அணை உடைந்து ஏற்பட்ட விபத்தில் ஏரளாமானோர் தங்கள் பொருள் மற்றும் உடைமைகளை இழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடைகள், உணவு, குடிநீர் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றை வழங்கி உதவிடுமாறு அரசு துறைகள் மற்றும் இதர தரப்பினருக்கு உள்ளூர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அணை விபத்தில் உயிர் தப்பியவர்கள் சற்றே நீரில் மூழ்கிய வீடுகளின் மேற்கூரைகளில், தங்கள் உடைமைகள் மற்றும் குழந்தைகளோடு பரிதவித்து காத்திருக்கும் காட்சிகளை இந்த பேரழிவு தொடர்பாக வெளியிடப்பட்ட காணொளி பதிவுகள் காட்டுகின்றன.
சமூகவலைதளமான ஃபேஸ்புக்கில் வெளியான காணொளி ஒன்று, தனது கிராமத்தில் இருந்து படகொன்றின் மூலம் வெளியேற்றப்படும் ஒரு பெண் கதறி அழுவதையும், ஓரு மரத்தின் கீழ் தனது தாய் உயிர் பிழைத்து இருப்பதாகவும், அவரை காப்பாற்ற வேண்டுமென்றும் மீட்பு பணியார்களிடம் மன்றாடுவதை காண்பித்துள்ளது.
2013 ஆம் ஆண்டு இந்த அணை கட்டும் பணி தொடங்கியது. கிட்டத்தட்ட 90 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு இந்த அணையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.
புதிதாக கட்டப்பட்டு வரும் இந்த அணையின் நீர்மின் திட்டத்தால் அங்குள்ள மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் சாத்தியமான தாக்கங்கள் குறித்து சுற்றுச்சூழல் குழுக்கள் ஏற்கனவே அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தன.
தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக "பெருக்கெடுத்த நீர்" அணையை நோக்கி பாய்ந்ததை தாங்காமல், அணை உடைந்துவிட்டதாக இதன் கட்டுமான நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக லாவோஸில் கனமழை பெய்து வரும் நிலையில், அதில் பலர் பாதிக்கப்பட்டிருந்தனர். உணவு மற்றும் குடிநீருக்காக மக்கள் சிரமப்படுவது குறித்து தொடர்ந்து ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்தன.
திங்கள்கிழமை (நேற்று) ஏற்பட்ட பேரழிவின் காரணமாக உண்டான உயிர் மற்றும் பொருள் இழப்புகள் அதிகமாக இருக்கக்கூடும் என்றும், அதனை முழுமையாக மதிப்பிட இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்றும் கருதப்படுகிறது.
இந்நிலையில், போர்க்கால அடைப்படையில் பணியாற்றும் மீட்பு குழுவினருடன் சேர்ந்து சில உள்ளூர் தன்னார்வ அமைப்புகளும் தங்களை மீட்பு பணியில் இணைத்து கொண்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :