ப்ளே பாய் மாடலுடன் பேசிய டிரம்ப் - ரகசிய ஆடியோ பதிவு
கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
ப்ளே பாய் மாடலுடன் பேசிய டிரம்ப் - ரகசிய ஆடியோ பதிவு

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டிரம்பும், முன்னாள் ப்ளே பாய் மாடல் ஒருவரும் பேசிக் கொள்வதை, டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கெல் கொஹென் ரகசியமாக பதிவு செய்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூயார்க்கில் உள்ள கொஹென் வீட்டில் நடத்தப்பட்ட எஃப் பி ஐ சோதனைக்கு பிறகு, இந்த ஆடியோ பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிபர் டிரம்புடன் உறவு வைத்துக் கொண்டதாக கூறும் கரென் மெக் டொகலுக்கு பணம் அளிப்பது தொடர்பாக, டிரம்ப் மற்றும் கொஹென் பேசிக் கொள்ளும் ஆடியோ அதில் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

’கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி’ இயக்குநர் பணிநீக்கம்

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில், பிறர் மனதை புண்படுத்தும் பதிவுகளை எழுதியதற்காக, ’கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி’ மூன்றாம் பாகத்தின் இயக்குநராக இருந்த ஜேம்ஸ் கன், அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாலியல் வன்புணர்வு குறித்து கேலி செய்து ட்வீட் செய்ததற்கு ஜேம்ஸ் மன்னிப்பு கோரியிருந்தார்.
ஆனால், அவரை பணிநீக்கம் செய்வதாக வால்ட் டிஸ்னி ஸ்டூடியோவின் தலைவர் அலன் ஹார்ன் அறிவித்தார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி

பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவில் மிசூரி ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்த 17 பேரில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் இறந்துள்ளதாக அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அந்த குடும்பத்தை சேர்ந்த 11 பேரில், 9 பேரை பரிகொடுத்த பெண்ணிடம் பேசியதாக ஆளுநர் மைக்கெல் பர்சான் கூறினார்.
வியாழக்கிழமையன்று பிரபல சுற்றுலாத்தளமான மிசூரி ஆற்றில் 31 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது.

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம், AFP
எல்லைப் பகுதியில் இஸ்ரேல் சிப்பாய் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானதால் காஸாவில் ராணுவத்துக்கு சொந்தமான இடங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
சமீப காலங்களில் நடந்த மோதல்களில் முதன்முறையாக இஸ்ரேல் ராணுவத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்ற தாக்குதல்களில் நான்கு பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டனர் அதில் மூன்று பேர் ஹமாஸ் தீவிரவாத அமைப்பால் கொல்லப்பட்டனர் என காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












