You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் தேர்தல் பிரசார கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 100க்கும் மேற்பட்டோர் பலி
தென் மேற்கு பாகிஸ்தானில் நடந்த ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில் ஒரு தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் குறைந்தபட்சம் 128 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
2014-ல் இருந்து அந்நாட்டில் நடந்த மிகக்கோரமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.
மாஸ்துங் நகரத்தில் நடந்த இத்தாக்குதலில் உள்ளூர் வேட்பாளரும் இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக்கொள்ளும் ஐஎஸ் குழு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
முன்னதாக, பண்ணு நகரத்தில் நடந்த இதே போன்றதொரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் நடந்த குண்டு தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் வரும் ஜூலை 25 அன்று பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இத்தாக்குதல்கள் நடந்துள்ளன.
இதற்கிடையில் பிரிட்டனில் இருந்து நேற்று பாகிஸ்தானுக்கு திரும்பிய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கைது செய்யப்பட்டார் .
அவருடன் வந்த அவரது மகள் மரியமும் கைது செய்யப்பட்டார். மரியமுக்கும் சமீபத்திய ஊழல் வழக்குத் தீர்ப்பில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்த நவாஸ் ஷெரீஃப் விமானம் மூலம் லாகூர் வந்து இறங்கினார்.
மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஊழல் குற்றச்சாட்டு ஒன்றில் கடந்த வாரம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வெள்ளிக் கிழமை தாக்குதல் குறித்து அறியப்படுவது என்ன?
மாஸ்துங்கில் நடந்த தாக்குதலில் 150-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் பலுசிஸ்தான் மாகாண வேட்பாளர் சிராஜ் ரைசனியும் ஒருவர். ரைசனி இறந்ததை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். பலோசிஸ்தான் அவாமி கட்சியின் வேட்பாளர் அவர்.
பிரச்சார பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் மக்கள் கூட்டத்தினுள் தாக்குதல்தாரி ஒரு குண்டை வெடிக்கச் செய்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'' மனித சடலங்களும் மற்றும் ரத்த வெள்ளத்துடன் மனித சதைகளும் கூட்டம் நடத்த வளாகத்தில் எங்கும் சிதறிக்கிடக்கின்றன என உள்ளூர் பத்திரிகையாளரான அட்டா உள்ளாஃஹ் கூறியதாக ஏ.எஃப் பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் வலி மற்றும் பயம் காரணமாக அழுதுகொண்டே இருந்ததாக அந்த செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஐ எஸ் தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியதாக சம்பவத்துக்கு பின்னர் தெரிவித்தனர். ஐ எஸ் குழு ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பிராந்தியத்தில் கடந்த சில வருடங்களில் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் 2014-ல் பாகிஸ்தானி தாலிபான்கள், பெஷாவரில் உள்ள ஒரு ராணுவம் நடத்தும் பள்ளியில் தாக்குதல்கள் நடத்தியதில் 132 சிறுவர்கள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பிறகு நடந்த மோசமான தாக்குதல் இது.
முன்னதாக பண்ணு பகுதியில் நடந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
மதச்சார்பற்ற கட்சிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன
இஸ்லாமாபாத்தில் இருந்து பிபிசியின் எம்.இலியாஸ் கான் சொல்வது என்ன?
தாலிபான்களின் சரணாலயமாக இருந்த ஆப்கான் எல்லையில் உள்ள பாகிஸ்தான் மேற்கு பிராந்தியங்களில் தீவிரவாதிகள் அழிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்த நிலையில் இத்தாக்குதல்கள் நடந்திருப்பது எதிர்பாராததாக இருக்கிறது.
2013 தேர்தலுக்கு முன்னதாக தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்தனர். இலக்குவைக்கப்பட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் பிரசாரங்கள் முடக்கப்பட்டன. இக்கட்சிகள் தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன.
இதே மதச்சார்பற்ற கட்சிகள் மற்றும் குழுக்கள் மீண்டும் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் பொது தேர்தலுக்கு சமீபத்திய தாக்குதல்கள் புதிய பதட்டங்களை உருவாகக்கூடும்.
குறிப்பாக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட பிறகு இத்தாக்குதல் நடந்துள்ளது.
நவாஸ் பிரிட்டனில் இருந்து லாகூருக்கு வருவதற்கு சில மணி முன்பு இத்தாக்குதல் நடந்துள்ளது. அவரை வரவேற்க காத்திருந்த அவரது ஆதரவாளர்களை தடுத்து நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
செவ்வாய்க்கிழமையன்று வடக்கு பெஷாவரில் ஒரு தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் மாகாண வேட்பாளர் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானி தாலிபான் இத்தாக்குதலை நடத்தியதாக தெரிவித்திருந்தது.
பாகிஸ்தான் பொது தேர்தல்
- 342 இடங்களை கொண்ட பாகிஸ்தானின் நாடாளுமன்றத்துக்கு வாக்காளர்கள் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவுள்ளனர்.
- நவாஸ் ஷெரீஃப்பின் பி எம் எல் - என் கட்சி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பிடிஐ மற்றும் பிலாவல் பூட்டோ ஜார்தாரியின் பிபிபி கட்சி ஆகியவை பிரதான கட்சிகளாகும்.
- எந்த பாகிஸ்தான் பிரதமரும் தமது ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்ய முடிந்ததில்லை. ராணுவ சதி, ராணுவம் ஆட்சியை கைப்பற்றுதல் குறித்த நெடிய வரலாறு பாகிஸ்தானுக்கு உண்டு. பாகிஸ்தானில் முதல் பொதுத் தேர்தல் 1970 ஆம் ஆண்டு நடந்தது.
- ஒரு தேர்தலின் மூலம் ஆட்சி அதிகாரம் முறையாக கைமாறப் போவது, பாகிஸ்தானில் இது இரண்டாவது முறை.
- 3,71,000 படை வீரர்கள் இந்த தேர்தலை பாதுகாப்பாகவும் நேர்மையாகவும் சுதந்திரமான வகையிலும் நடத்துவதற்காக நாடு முழுவதும் அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :