ஜப்பான் சாமியாருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

இந்த ஜப்பான் சாமியாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது ஏன்?

ஜப்பானில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் 1995ஆம் ஆண்டு நச்சு வாயு தாக்குதல் நடத்திய, ஓம் ஷினிக்யோ என்ற வழிபாட்டு குழுவின் தலைவர் ஷோகோ அசஹராவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

'சரின்' என்ற நச்சு அமிலத்தை வைத்து டோக்கியோவில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் இக்குழு நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடந்தனர்.

ஓம் ஷினிக்யோ, இந்து மற்றும் பௌத்த மத நம்பிக்கைகளை சேர்க்கும் ஆன்மீக குழுவாக 1980களில் தொடங்கப்பட்டது . இதற்கு அர்த்தம் 'உச்சக்கட்ட உண்மை' என்பதாகும்.

பின்னர், இதன் தலைவர் ஷோகோ அசஹரா தன்னை இயேசு என்று அறிவித்து கொண்டதோடு, புத்தருக்கு பிறகு “ஞான ஒளி பெற்றவர்” தன்னை அழைத்துக் கொண்டார்.

காண்டாமிருகத்தை வேட்டையாட வந்தவர்களை கடித்து தின்ற சிங்கங்கள்

தென் ஆஃபிரிக்காவில் உள்ள விலங்குகள் பூங்கா ஒன்றில், காண்டாமிருகங்களை வேட்டையாட சென்றவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரு நபர்களை அங்குள்ள சிங்கங்கள் கடித்து தின்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிபுயா பூங்காவில் உள்ள சிங்கங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பிடத்தில் இரண்டு அல்லது மூன்று நபர்களின் உடற்பாகங்களை சரகர்கள் கண்டுபிடித்தனர்.

அங்கு ஒரு துப்பாக்கி மற்றும் கோடாரியும் கண்டெடுக்கப்பட்டது.

பிரிக்கப்பட்ட குடும்பங்களை ஒன்றிணைக்க மரபணு சோதனை

அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் பிரிக்கப்பட்ட குடும்பங்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக, குடிபெயர்ந்த சுமார் 3000 குழந்தைகளுக்கு மரபணு சோதனை செய்ய அமெரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பிரிக்கப்பட்ட குடும்பங்களை ஒன்றிணைக்க நீதிமன்றம் அளித்த காலக்கெடுவிற்குள் இதனை முடிக்க, இந்த சோதனைகள் நடத்த உத்தரவிடப்பட்டதாக அமெரிக்க சுகாதார செயலாளர் அலெக்ஸ் அசர் கூறினார்.

காவல் தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளில் சுமார் 100 பேர் 5 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று அசர் தெரிவித்தார்.

அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ராஜினாமா

ஊழல் குற்றச்சாட்டுகளையடுத்து அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவராக இருந்த ஸ்காட் ப்ரூயட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக அதிபர் டிரம்பிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் கடினமான தாக்குதல் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :