You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாதிப்பதை சாத்தியப்படுத்தும் 6 விஷயங்கள்
- எழுதியவர், டேவிட் ராப்சன்
- பதவி, பிபிசி
நமக்கு நாலு பேரு சலாம் அடிக்கிற மாதிரி எப்போது வளரப்போகிறோம்னு கனவு காண்பவர்களா நீங்கள்...அப்படியானால் உங்களுக்கானதுதான் இந்தக் கட்டுரை
எதிலும் ஓர் ஆர்வம், மனசாட்சியுடன் கூடிய நேர்மை, போட்டியில் ஜெயித்தாக வேண்டும் என்ற துடிப்பு, எந்த சூழலுக்கும் ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் தன்மை, குழப்பமான சூழலிலும் தெளிவான கண்ணோட்டம், ரிஸ்க் எடுப்பதை ரெஸ்க் சாப்பிடுவது போன்று பார்க்கும் மனப்பாங்கு..இந்த 6 குணாதிசயங்களும் உங்களிடம் இருக்கிறதா...ஆம் என்றால் குஷியாக ஒரு விசில் அடியுங்கள். இவை உங்களை எங்கோ ஒரு புது உயரத்துக்கு கொண்டு செல்வது நிச்சயம். போகிறபோக்கில் சொல்லிவிட்டுப்போகும் அட்வைஸ் அல்ல இது. நீண்ட உளவியல் ஆய்வுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட்ட அரிய முத்துகள்தான் இவை.
பணியிட சூழல்கள்...குணாதிசயங்கள் இடையிலான தொடர்புகளை ஆராய பிரபலமான பல வழிமுறைகள் உள்ளன. இதில் மையர்ஸ் பிரிக்ஸ் முறை குறிப்பிடத்தக்கது.
அமுக்குணித்தனமான மனப்பாங்கு...எல்லாரிடமும் வெளிப்படையாக பழகும் குணம் உள்ளிட்டவற்றின் அடிப்படையிலும் சிந்தனைகள்... உணர்வுகள்... அடிப்படையிலும் மனிதர்களை இது வகைப்படுத்துகிறது.
அமெரிக்காவில் உள்ள 90% நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை மதிப்பிட மையர்ஸ் அண்ட் பிரிக்ஸ் முறையைத்தான் பயன்படுத்துகிறன.
ஆனால் உளவியலாளர்கள் பலர் இம்முறை சிறந்தது என்பதை ஏற்கவில்லை. இதன் பல கருதுகோள்கள் தற்காலத்துக்கு ஒவ்வாதது என்றும் உண்மையான செயல்திறனை மதிப்பிட இந்த முறை தவறிவிட்டதாகவும் உளவிலாளர்கள் கூறுகின்றனர்.
இது போலி அறிவியல் என்கின்றனர் இன்னும் சிலர். பணியிட குணாதிசயங்களை கணிக்க இது ஓரளவு உதவும என்றாலும் விரிவான முழுமையான புரிதலுக்கு மையர்ஸ் அண்ட் பிரிக்ஸ் முறை ஏற்றதல்ல என்கிறார் ஹை பொட்டன்ஷியல் என்ற புத்தகத்தை உடன் எழுதியவரும் உளவியலாளருமான இயான் மெக்ரே.
பணியிட குணாதிசய மதிப்பீட்டில் நவீன கால ஆய்வுகள் பெரிதும் உதவுகின்றன என்கின்றனர் மெக் ரேவும் லண்டன் பல்கலை கல்லூரி பேராசிரியர் ஆட்ரியன் ஃபர்ன்ஹாமும் ...
பணித்திறன் வெற்றிக்கு 6 முக்கிய குணாதிசயங்கள் காரணம் என்கின்றனர் அவர்கள்.
தற்போது அந்த 6 குணாதிசயங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்
1) மனசாட்சி மிக்கவர்கள்
இத்தரப்பினர் எதையும் ஒரு திட்டத்துடன் செய்து முடிக்கவேண்டுமென்பதில் உறுதியாக இருப்பர்.
உள்மனத்தடைகளை புறந்தள்ளி, நீண்டகால நோக்கில் பலன் தரும் முடிவுகளை எடுப்பர். பணியிடங்களில் சிறப்பான திட்டமிடலுக்கு இக்குணாதிசயம் வெகுவாக உதவுகிறது.
அதே சமயம் இதுபோன்றவர்களிடம் வளைந்து கொடுத்து போகாத, பிடிவாத குணங்கள் இருக்கும் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.
2) ஒத்துப்போகும் தன்மை
இது போன்றவர்கள் உணர்ச்சிகரமான, நெருக்கடியான சூழல்களில் சிறப்பாக ஒத்துழைப்பர். இவர்களின் இப்பண்பு பணியில் எதிர்மறையாக பிரதிபலிக்காது.
நெருக்கடியான சூழல்களில் ஒத்துழைக்கும் பண்பு ஒருவரது நலனுக்கு எதிரானது என்பதை விட அவர்களின் வளர்ச்சிக்கு ஓர் ஆதாரமாக அமையும்.
3) குழப்ப சூழலில் பணிபுரியும் ஆற்றல்
தெளிவற்ற சூழலில் பணிபுரியும் வல்லமை பெற்றவர்கள் ஒரு முடிவுக்கு வருமுன் பல்வேறு கோணங்களில் ஒரு பிரச்னையை அலசி ஆராய்வார்கள்.
இதில் அவர்கள் தரும் முடிவு மறுக்க முடியாத வகையில் இருக்கும். இதுபோன்றவர்கள் சிக்கலான விஷயங்களை அற்புதமான வியாபார வித்தையாக மாற்ற முயல்வார்கள் என்கிறார் உளவியலாளர் மெக் ரே.
தெளிவற்ற சூழலை எதிர்கொள்ளும் நபர்கள் வெளிப்புற மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை தகவமைத்து கொள்வார்கள் என்றும் கூறுகிறார் மெக் ரே.
4) புதியதை தெரிந்துகொள்ளும் ஆர்வம்
மற்ற குணாதிசயங்களுக்கு தரும் முக்கியத்துவத்தை புதியதை தெரிந்து கொள்ளும் பண்பிற்கு உளவியலாளர்கள் தருவதில்லை. ஆனால் இந்த பண்பு பணியிடங்களில் புதிய யுக்திகளை கையாள உதவுகிறது என்பது அண்மைய ஆய்வுகளில் தெரியவந்த உண்மை.
படைப்பாற்றல், நடைமுறைகளை எளிதாக கையாளல் என பல நல்ல விஷயங்களுக்கும் இப்பண்பு உதவுகிறது. பணி திருப்தி அளிப்பதுடன் களைப்படையும் உணர்வையும் தவிர்க்க இப்பண்பு உதவுகிறது
அதே நேரம் எதிலும் ஓர் ஆழமான புரிதலின்றி அடுத்து...அடுத்து... என அடுத்தடுத்த திட்டங்களுக்கு மாறும் பட்டாம்பூச்சி மனப்பாங்கு இப்படிப்பட்டவர்களுக்கு இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
5) ரிஸ்க் எடுக்கும் திறன்
பிரச்னை என்றால் விலகி ஓடாமல் தைரியமாக எதிர்கொண்டு தீர்வு காணும மனப்பாங்கு நிர்வாக பணிகளுக்கு மிக அவசியமான ஒன்றாகும். எதிர்ப்புகள் வந்தாலும் அச்சமின்றி சமாளிக்கும் திறனும் நிர்வாக பணியிடத்திற்கு அவசியமான ஒன்றாகும்.
6) போட்டி மனப்பாங்கு
போட்டியில் வெல்லும் மனப்பாங்கு இருப்பது ஒருவருக்கு கூடுதல் சாதகத்தை தரும். அதே நேரம் ஓர் அணியில் பிளவை உண்டாக்கவும் இந்த குணம் காரணமாக அமையலாம்.
பிறரது பொறாமைக்கு ஆளாகாமல் இருப்பதற்கும் தனிப்பட்ட பணி வெற்றிக்கும் இடையே ஒரு மெல்லிய இழைதான் இருக்கிறது என்பதையும் இங்கு அறிய வேண்டும்.
பணியில் சிறப்பாக செயல்பட இந்த 6 குணாதிசயங்களும் அவசியமானதாக இருக்கிறது. குறிப்பாக தலைமை இடத்தை அடைய விரும்புவோருக்கு இப்பண்புகள் தவிர்க்க முடியாதவை.
உளவியலாளர் மெக் ரே இந்த 6 அம்சங்களை பன்னாட்டு நிறுவனங்களில் உள்ள தொழிலதிபர்களுடன் சில வருடங்களாக ஒப்பிட்டு ஆராய்ந்து வந்துள்ளார்.
இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் உள்ளன. இந்த குணாதிசயங்களை கொண்டு வெற்றி வாய்ப்புகளை கணிப்பது குறித்த ஆய்வறிக்கையும் கடந்தாண்டு வெளியாகியுள்ளது.
போட்டியிடும் தன்மை, தெளிவற்ற சூழலில் சமாளிக்கும் திறன் ஆகிய அம்சங்களை வைத்து ஒருவரது ஊதியத்தை உறுதியாக கணிக்க முடிந்தது.
மனசாட்சி என்ற அம்சம் பணித்திருப்தியை கணிக்க உதவியது. இந்த 6 அம்சங்களுடன் ஐக்யூ எனப்படும் நுண்ணறிவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
HPTI எனப்படும் இம்முறை திறமை மிக்க பணியாளர்களை தேர்வு செய்ய கடைபிடிக்கப்படுகிறது. தனிப்பட்ட வளர்ச்சிக்கும் இப்பண்புகள் உதவுவதாக கூறுகின்றார் மெக் ரே.
இந்த 6 பண்புகளும் கொண்ட ஒருவரை கனடாவில் கண்டதாக கூறுகிறார் மெக் ரே. வங்கி ஒன்றின் தலைமை செயல் அதிகாரியான அவரிடம் எல்லா பண்புகளும் கணிசமாக இருந்ததாக கூறுகிறார் மெக் ரே.
இதுபோன்றவர்களிடம் வேலை செய்ய கொஞ்சம் பயமாக இருந்தாலும் அவர்களை தைரியமாக நம்பலாம்...மரியாதை தரலாம் என்கிறார் மெக் ரே.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்