“பெருங்கனவொன்று நினைவானது” - செளதியில் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமை

பட மூலாதாரம், EVN
செளதி அரேபியா அரசு முதல் முறையாக ஓட்டுநர் உரிமத்தை பெண்களுக்கு வழங்க தொடங்கி உள்ளது.
செளதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட தடை செய்யப்பட்டு இருந்தது. இந்த தடையானது, ஜூன் 24 ஆம் நாளோடு நிறைவடைகிறது.
அதற்கு முன்னதாக, பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்களின் இசைவு
பெண்கள் எடுக்கும் பல முடிவுகளுக்கு ஆண்களின் இசைவானது தேவை என்கிறது செளதி அரேபியா சட்டம். இது பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கும் வரை நீள்கிறது.
பெண்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டி, பல காலமாக அந்நாட்டில் செயற்பாட்டாளர்கள் போராடி வருகிறார்கள்.
இந்த சட்டத்தை மீறியதற்காக பல பெண்களும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
கடந்த மாதம் பல செயற்பாட்டாளர்கள், 'துரோகி' என்றும், வெளிநாட்டு சக்திகளுக்காக வேலை பார்ப்பதற்காகவும் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

பட மூலாதாரம், EVN
இந்த கைதினை "அப்பட்டமான அச்சுறுத்தல் தந்திரோபாயங்கள்" என்று அம்னெஸ்டி இண்டெர்நேஷனல் வர்ணித்தது.
செளதி அரசு தரப்பு வழக்கறிஞர்கள், 17 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர், 8 பேர் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டனர் என்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
பெண்கள் வாகனம் ஒட்டும் உரிமைக்காக தொடர்ந்து போராடி வரும், செயற்பாட்டாளர் லவ்ஜெயின் அல் - ஹத்லவுலும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் என்று கருதப்படுகிறது.
அரபு அமீரக எல்லையில் வாகனம் ஓட்ட முயற்சித்ததற்காக 2014 ஆம் ஆண்டு, ஹத்லவுல் கைது செய்யப்பட்டார். சிறார் தடுப்பு மையத்தில் 72 நாட்கள் சிறைப்படுத்தப்பட்டார். இந்த அனுபவத்தை தனது ட்வீட்டர் பக்கத்திலும் விரிவாக எழுதி இருக்கிறார்.
நினைவான பெருங்கனவு
அடுத்த வாரத்திற்குள் இன்னும் 2000 பெண்கள் செளதியில் ஓட்டுநர் உரிமம் பெறுவார்கள் என்கிறது செளதி தகவல் துறை அமைச்சகத்தின் அறிக்கை.
"எனது கனவு நினைவானது. செளதியில் நானே சுயமாக வாகனம் ஓட்ட போகிறேன்" என்று ஓட்டுநர் உரிமம் பெற்ற ரிமா ஜவ்தாத் கூறியதாக அந்த அமைச்சகத்தின் அறிக்கை விளக்குகிறது.
செளதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான், நாட்டை நவீனமாக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்றும் கடந்த செப்டம்பர் அறிவித்து இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












