உலகப்பார்வை: சௌதி இளவரசி படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய சஞ்சிகை

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

அட்டைப்படத்தில் இளவரசி - சர்ச்சையில் சஞ்சிகை

சௌதி அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹைஃபா பிண்ட் அப்துல்லா அல் சௌத் ஒரு காரில் அமர்ந்திருப்பதுபோல தங்கள் அட்டைப்படத்தில் வெளியிட்டது அரபு உலகில் உள்ள பெண்களின் பிரச்சனையை வெளிப்படுத்தவே என்று 'வோக் அரேபியா' சஞ்சிகை கூறியுள்ளது.

பெண்கள் வாகனங்கள் ஓட்ட வரும் ஜூன் 24 முதல் சௌதி அரேபியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும், அதற்குப் போராடிய பெண் செயல்பாட்டாளர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ள அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் படத்தையே அந்த சஞ்சிகை வெளியிட்டது விமர்சனத்துக்கு உள்ளானது.

சுரங்கப்பாதை தோண்டிய தொழில் அதிபர் கைது

அமெரிக்காவின் மேரிலாந்தில், தனது வீட்டின் பாதாளத்தில் அணு ஆயுத தாக்குதல் நடந்தால், அதிலிருந்து தப்பிக்க சுரங்கப்பாதை தோண்டியபோது உண்டான தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் இறந்தது தொடர்பாக டேனியல் பெக்விட் எனும் தொழில் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

"சர்வதேச அச்சுறுத்தல் மற்றும் வடகொரியா ஆகியவற்றிடம் இருந்து தப்ப அவர் சுரங்கப்பாதை தோண்டினார்," என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

'ஆபத்தான விளையாட்டு'

ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு அதிக வரி விதித்துள்ளதன் மூலம் அமெரிக்கா ஆபத்தான விளையாட்டில் இறங்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் சிசிலியா மால்ஸ்ட்ராம் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கை ஐரோப்பிய நாடுகள் பொருளாதார சரிவிலிருந்து மீண்டு வருவதில் பின்விளைவுகளை உண்டாக்குமென்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரேசிலில் பெட்ரோல் விலை உயர்வு

பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றத்தை எதிர்த்து பிரேசில் சரக்கு வாகன ஓட்டுநர்கள் கடந்த வாரம் மேற்கொண்ட வேலைநிறுத்தம் அந்நாட்டில் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாட்டை உண்டாக்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து பிரேசிலின் மிகப்பெரிய பெட்ரோல் உற்பத்தி நிறுவனமான பெட்ரோபிராசின் தலைவர் பெட்ரோ பேரண்டே பதவி விலகியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: