You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சமூக ஊடகங்களில் தொடர்ந்து சர்ச்சையில் மாட்டிக் கொள்ளும் ரஜினி – காரணம் என்ன?
- எழுதியவர், அபர்ணா ராமமூர்த்தி
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர் ரஜினிகாந்துக்கு சர்ச்சைகள் என்பது புதிதல்ல என்றாலும், சமீப காலங்களாக சமூக ஊடகங்களில் பல கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் அவர் ஆளாகி வருகிறார்.
ஆன்மீக அரசியல், போலீஸாருக்கு ஆதரவாக பேசியது, தற்போது தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டது, செய்தியாளர்கள் சந்திப்பில் காட்டமாக பேசியது என ரஜினியை பலரும், பல்வேறு விதமாக விமர்சித்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் ரஜினிக்கு எதிரான அலை உண்டாகி வருகிறதா? ஏன் அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் மாட்டிக் கொள்கிறார்? அவரது முழுமையான அரசியல் பிரவேசத்துக்கு முன் நெட்டிசன்கள் அவரை எப்படி பார்க்கின்றனர்? என்பது குறித்த கருத்துகளை பதிவு செய்துள்ளார்கள் சமூக வலைதளவாசிகள்.
"ரஜினிக்கு பேசத் தெரியவில்லை"
ரஜினிகாந்த் பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து மாட்டிக் கொள்வதற்கு முக்கிய காரணம், அவருக்கு பேசும்போது வார்த்தைகளை சரியாக தேர்ந்தெடுக்க தெரியவில்லை என்பதுதான் என்று கூறுகிறார் வளைப்பதிவர் பத்மநாபன் நாகராஜ்.
"அவருக்கு சொல்ல வேண்டிய விஷயத்தை ஒழுங்காக சொல்லத் தெரியவில்லை. அரசியல்வாதிகள் என்று எடுத்துக் கொண்டால், அவர்கள் அவ்வளவு எளிதாக வார்த்தைகளை விடமாட்டார்கள். ஆனால், ரஜினி அப்படி அல்ல".
"எதுவாக இருந்தாலும், விரைவாக பேசிவிட்டு, அந்த இடத்தை விட்டு செல்ல வேண்டும் என்றே ரஜினி நினைக்கிறார். சொல்ல வேண்டிய, சொல்ல நினைக்கும் விஷயங்களை அவர் ஒழுங்காக சொல்லவில்லையோ என்று தோன்றுகிறது." என்கிறார் அவர்.
மேலும், தூத்துக்குடியில் மோதல் நடைபெற்றதற்கு சமூக விரோதிகள்தான் காரணம் என்றால், யார் செய்தாரகள் அல்லது இந்த தகவல் அவருக்கு எங்கிருத்து கிடைத்தது என்பதையாவது குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று பத்மநாபன் கூறினார்.
எனினும், அவர் கட்சி ஆரம்பிக்கும் போது, அவர் கொள்கைகள் ஈர்க்கக்கூடியவையாக இருந்தால் இந்த சர்ச்சைகளை எல்லாம் மக்கள் எளிதாக மறந்து விடுவார்கள். ஆனால், ஒரு சாதாரண குடிமகனாக பார்க்கும்போது, ரஜினியின் அரசியல் பிரவேசம் குழப்பமாகவே உள்ளது என்கிறார் அவர்.
அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடப் போகிறாரா, அல்லது சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்தப் போகிறாரா, அவருடைய ரசிகர்களே வேட்பாளர்களாக களமிறங்கப் போகிறார்களா என்ற எந்த தெளிவும் இல்லாமல், ரஜினி மாதிரி தானும் குழம்பிப்போயிருப்பதாக கூறுகிறார் பத்மநாபன்.
ரஜினியின் எதேச்சதிகாரப் போக்கு
இந்நிலையில், கமல், ரஜினி யாராக இருந்தாலும், மேட்டுக்குடி மனோபாவத்தில் இருந்தே சமூகத்தை பார்க்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு அரசியல் அறிவு உள்ளது என்ற கேள்விக்கு உட்படுத்தாமலே நாம் அவர்களை வரவேற்றுள்ளோம் என்று கூறுகிறார் வளைப்பதிவர் மற்றும் எழுத்தாளரான ராஜசங்கீதன் ஜான்.
"தூத்துக்குடி விவகாரத்தில், முழுக்க முழுக்க மாநில அரசின் மனப்பான்மையையே அவர் கொண்டிருந்தார். அங்கு இரு தரப்பினர் இடையே தாக்குதல் நடந்திருக்கலாம், ஆனால் குறைந்தபட்ச ஆய்வு கூட நடத்தாமல் ரஜினி வார்த்தையை விட்டுள்ளார்" என்று குறிப்பிடுகிறார் ஜான்.
மேலும், செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினி பேசியதெல்லாம் அவரின் எதேச்சதிகாரப் போக்கையே காண்பிக்கிறது என்றும் ஊடகங்களின் கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க முடியாத ரஜினியால், மக்கள் பிரச்சனைகளை எப்படி முறையாக அணுக முடியும் என்ற கேள்வியையும் அவர் எழுப்புகிறார்.
"தமிழக அரசியலை பொறுத்தவரை, தெருமுனைக்கூட்டங்களின் பங்கு அதிகமானது. கீழிலிருந்து மேல் என்ற போக்கையே திராவிட, கம்யூனிஸ அரசியல் கட்சிகள் கடைபிடித்திருக்கின்றனர். ஆனால், ரஜினி, கமல் போன்றவர்களின் போக்கு மேலிருந்து கீழாக உள்ளது" என்கிறார் அவர்.
இதே மாதிரியான போக்கை ரஜினி கடைபிடித்து வந்தால், விரைவில் அவர் தெருவுக்கு வந்துவிடுவார்" என்றும் ஜான் தெரிவித்தார்.
"இந்நிலையில், ரஜினி அரசியலுக்கு வந்ததை பா.ஜ.கவினர் வரவேற்பதற்கு காரணம், அவர்களின் குரலாக இங்கு ரஜினி ஒலிக்கிறார் என்பதுதான். பா.ஜ.கவுக்கு தமிழகத்தில் காலூன்ற முடியாது என்று நன்றாக தெரியும். மற்ற மாநிலங்களில் வாக்குப்பதிவு இயந்திர முறைகேடுகளால் பா.ஜ.க வெற்றி பெற்றது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அப்படி செய்து தமிழகத்திலும், பா.ஜ.க வெற்றி பெறலாம். அப்போது இங்கு ’பா.ஜ.க வெற்றி பெற்றது’ என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால், ரஜினி வெற்றி பெற்றார் என்று கூறினால் நம்புவார்கள்" என்று அவர் கூறினார்.
ஒரு சாதாரண குடிமகனாக என்னைக் கேட்டால், ரஜினி படத்தில் மட்டும் நடிக்கலாம் என்றும் அவரின் காலா படத்திற்காக காத்திருப்பதாகவும் ஜான் குறிப்பிட்டார்.
"ரஜினிக்கு வார்த்தை விளையாட்டுகள் தெரியாது"
"ரஜினிக்கு சர்ச்சைகள் என்பது ஒன்றும் புதிதல்ல" என்று கூறுகிறார் வளைப்பதிவர் பாலகணேசன். 1996ஆம் ஆண்டுக்கு பிறகே அவர் அரசியல் ரீதியாக தாக்கப்பட்டு வருகிறார் என்று அவர் குறிப்பிட்டார்.
"ரஜினிக்கு வார்த்தை விளையாட்டுகள் தெரியாது. உண்மையை நேரடியாகக் கூறும் நபர் அவர். இது அரசியலுக்கு சரியாக வராது. அதனால், பெரிய பிரச்சனை உண்டாகிறது. சமூக ஊடகங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த காலக்கட்டத்தில், சில வார்த்தை பிரயோகங்களை அவர் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவரது இமேஜ் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது" என்று பாலகணேசன் கூறினார்.
சமூக ஊடகங்களில் ரஜினிக்கு ஒருவகையான எதிர்ப்பலை உள்ளதா என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், "சமூக ஊடகங்கள் என்பது வேறு, உண்மை நிலவரம் என்பது வேறு" என்று கூறினார்.
ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு வந்ததும், செய்தியாளர்களை சந்தித்ததும் பெரிய விஷயம் என்று குறிப்பிட்ட பாலகணேசன், ஊடகங்கள் நல்ல கோணத்தில் காண்பித்ததாகவும், சமூக ஊடகங்கள்தான் சர்ச்சையை கிளப்புவதாகவும் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்