வட இந்தியாவில் புயல், இடி மின்னல் தாக்கி 50 பேர் பலி

பிபிசி தமிழில் இன்று வெளியாகும் முக்கிய தேசிய மற்றும் சர்வதேச செய்திகளின் தொகுப்பு.

புயல், இடி மின்னல் - 50 பேர் பலி

வட இந்தியாவில் பலத்த புயல் மற்றும் இடி மின்னல் தாக்கி சுமார் 50 பேர் இறந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் செவ்வாய் இரவு வீசிய புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் சுமார் 15 பேர் இறந்துள்ளனர். பிகாரிலும் இதே காரணத்தால் 20 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புயல், மின்னல் மற்றும் மின்கம்பி அறுந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். உத்தராகண்ட் மாநிலத்தில் புயலால் மரம் சரிந்து விழுந்து மூன்று குழந்தைகள் பலியாகினர்.

இனவாதத்துடன் பதிவிட்ட நகைச்சுவையாளர்

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின், ஆப்பிரிக்க - அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த பெண் உதவியாளர் ஒருவரை மனித குரங்குடன் ஒப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்ட தொலைக்காட்சி நகைச்சுவையாளர் ஒருவரின் நிகழ்ச்சியை ஏ.பி.சி தொலைக்காட்சி நிறுவனம் ரத்து செய்துள்ளது.

தாம் நகைச்சுவைக்காகவே அவ்வாறு கூறியதாக ரொசேன் பார் கூறினாலும், அவர் இனவாதத்துடன் பதிவிட்டது தங்கள் விழுமியங்களுக்கு எதிரானது என்று அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் கூறியுள்ளது.

தலித்துகள் மீது தாக்குதல்

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்திக்கு அருகில் உள்ள கச்சநத்தம் கிராமத்தில் நடந்த தாக்குதலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஐந்து பேர் சரணடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் இருந்து விரட்டப்பட்ட ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் நிறுவனம், 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி, மகாராஷ்ட்ரா தொழில் வளர்ச்சி கழக்கத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்துக் கொண்டது. அந்த ஒப்பந்தத்தின்படி ரத்னகிரி அருகே அந்த நிறுவனத்திற்கு, 20,80,600 சதுர மீட்டர் நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு தரப்பட்டது.

மக்கள் போராட்டம் தீவிரமடைய, ஜூலை 15, 1993 ஆம் ஆண்டு அரசு இந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. இப்போதுகூட அந்த ஆலையின் கட்டுமானங்களை இங்கு காணலாம்.

'' சூப்பர் ஹீரோ போல உணர்கிறேன்'' - களத்துக்கு திரும்பிய செரீனா

தனது முதல் குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு பிறகு, மீண்டும் விளையாட்டு களத்துக்கு திரும்பிய பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், பாரீஸ் நகரில் நடைபெற்றுவரும் ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் முதல்சுற்று போட்டியில் 7-6 (7-4) 6-4 என வெற்றி பெற்றுள்ளார்.

கழுத்து முதல் பாதம் வரை நீளும் கருப்பு நிற ஒற்றை ஆடை அணிந்து விளையாடிவரும் செரீனா, ''இந்த உடை எனக்கு வசதியாக உள்ளது. ஓர் அரசி போல அல்லது ஒரு சூப்பர் ஹீரோ போல இந்த உடையில் என்னை உணர்கிறேன்'' என்று குறிப்பிட்டார்.