உலகப் பார்வை: இஸ்ரேல் படைகள் சுட்டதில் 3 பாலத்தீனர்கள் பலி

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

இஸ்ரேல் சுட்டதில் 3 பாலத்தீனர்கள் பலி

இஸ்ரேலில் உள்ள தங்கள் பூர்வீக இடங்களுக்குச் செல்ல தஞ்சம் கோருபவர்களை அனுமதிக்கக் கோரி இஸ்ரேல்-பாலத்தீன எல்லையில் தொடர்ந்து போராடி வரும் பாலத்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலத்தீனைச் சேர்ந்த 10,000க்கும் மேலானவர்கள் எல்லையில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

ஆபாசப் பட நடிகை வழக்கு இடைநிறுத்தம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வழக்கறிஞர் மைகேல் கோஹென் மீது ஆபாசப் பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணையை அமெரிக்க நீதிமன்றம் ஒன்று 90 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்துள்ளது.

டிரம்ப் உடன் 2006இல் அவருக்கு இருந்த பாலியல் தொடர்பை வெளியில் தெரிவிக்காமல் இருக்க டிரம்ப் தரப்புடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவரக் கோரி ஸ்ட்ரோமி டேனியல்ஸ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உயிருடன் இருந்த பன்றி மூளைகள்

அமெரிக்காவின் ஏல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உடலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட சுமார் 100 பன்றிகளின் மூளைகளை 36 மணி நேரத்துக்கும் மேலாக ஆய்வகத்தில் உயிர்ப்புடன் வைத்திருந்து அவற்றுக்கு மீண்டும் உயிரூட்டியுள்ளனர்.

இதை அந்தப் பன்றி மூளைகள் உணர்ந்திருக்குமா என்பது தெளிவாகவில்லை என்றாலும் அப்போது அவற்றுக்கு கொஞ்சமேனும் உணர்வுகள் இருந்திருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த விவகாரம் ஆய்வு விழுமியங்கள் குறித்த விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

புதிய பிரிட்டன் இளவரசர்

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் திங்களன்று பிறந்த தங்கள் மூன்றாவது குழந்தைக்கு லூயீ ஆர்தர் சார்லஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

அத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: