உலகப் பார்வை: இரு கால்களும் இல்லாமல் தவழ்ந்தே சென்று மலையேறிய இளம்பெண்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

கால்கள் இல்லாமல் தவழ்ந்தே சென்று மலையேறிய இளம்பெண்

ரயில் விபத்து ஒன்றில் தனது கால்களையும் 2014இல் இழந்த, மேண்டி ஹோர்வாத் எனும் அமெரிக்காவைச் சேர்ந்த 24 வயதாகும் இளம் பெண், கொலோரடோவில் உள்ள மானிட்டோ இன்கிலைன் மலைப்பாதையில் 2700 படிகள் தவழ்ந்தே சென்று சாதனை படைத்துள்ளார்.

கை, கால் இழப்புக்கான விழிப்புணர்வு மாதத்தையொட்டி அவர் இதைச் செய்துள்ளார்.

'நச்சு அல்ல, தூசுதான்'

சிரியாவின் டூமா நகரில் நச்சுத் தாக்குதல் நடந்தாக சந்தேகிக்கப்படும் நிலையில், அந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டதாக ஒரு காணொளியில் காட்டப்பட்ட 11 வயது சிறுவனை வைத்தே அங்கு நச்சுத் தாக்குதல் நடக்கவில்லை என நிரூபிக்க ரஷ்யா முயன்றுள்ளது.

ரஷ்ய அதிகாரிகள் முன்னிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹசன் டையாப் எனும் அச்சிறுவன் தாக்குதல் நடத்தப்பட்டபின், கூக்குரல் கேட்டதும் தான் மருத்துவமனையை நோக்கி ஓடியதாகவும், அங்கு தன் மீது தண்ணீர் ஊற்றப்பட்டதாகவும் கூறினான்.

நச்சுத் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மீது முதலில் தண்ணீர் ஊற்றுவது வழக்கம். அந்த மருத்துவமனையில் அப்போது இருந்த மருத்துவர் ஒருவரும் அது தூசு மற்றும் புகையால் உண்டான பாதிப்பு என்று அந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

கட்டாயக் கருத்தடை வழக்கை எதிர்கொள்ளும் முன்னாள் அதிபர்

பெரு நாட்டின் அதிபராக அல்பெர்ட்டோ ஃபுஜிமோரி 1990 முதல் 2000 வரை பதவி வகித்தபோது, ஐந்து பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை செய்தது தொடர்பான வழக்கு மீண்டும் திறக்கப்படவுள்ளது.

மோசமான உடல்நிலை காரணமாக கடந்த டிசம்பரில் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

அவர் அதிபராக இருந்தபோது, ஓர் அரசு திட்டத்தின் ஒரு பகுதியாக 30,000 பெண்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

ஸ்பெயின் பாலியல் தாக்குதல் வழக்கு

ஸ்பெயினில் மாடு பிடித் திருவிழா ஒன்றின்போது, ஒரு 18 வயதாகும் இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியில் மோசமாக நடந்துகொண்ட ஐந்து பேரை பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளில் இருந்து அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று விடுவித்துள்ளது அங்கு பெரும் போராட்டங்களைத் தூண்டியுள்ளது.

எனினும் அவர்கள் பாலியல் தாக்குதல் நடத்தியதாக ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் தாக்குதல் ஆகியவற்றுக்கு தனித்தனி சட்டங்கள் உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: