பழனி சிலை விவகாரம்: சிலை திருட்டு தடுப்புப் படையே விசாரிக்க உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோவில் உற்சவர் சிலை செய்தது தொடர்பான வழக்கை மாநில குற்றப்பிரிவு காவல்துறையிடமிருந்து மாற்றி மீண்டும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிடமே ஒப்படைக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உள்ள மிகப் பழமையான உற்சவர் சிலை சேதமடைந்திருப்பதாகக் கருதப்பட்டதால், 2003ஆம் ஆண்டின் இறுதியில் புதிதாக உற்சவர் சிலை ஒன்றை நிறுவி, அதற்கு பூஜைகளைச் செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது.

இதையடுத்து 2004ஆம் ஆண்டில் புதிதாக உற்சவர் சிலை ஒன்று செய்யப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனால், இதற்குப் பக்தர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அந்த சிலை சில மாதங்களிலேயே அகற்றப்பட்டது.

அகற்றப்பட்ட சிலை, கோவிலேயே ஒரு மண்டபத்தில் வைத்துப் பூட்டப்பட்டது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பழனி கோவிலில் சோதனை நடத்தினார். அப்போது, புதிய உற்சவர் சிலையில் அளவுக்கு அதிகமாக தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

அந்தத் தங்கம் எப்படி வந்தது என்பது குறித்தும் புதிய உற்சவர் சிலையை வைத்து பழமையான மூலவர் சிலையை கடத்தத் திட்டமிட்டதாகவும்கூறி, இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் தலைமை ஸ்தபதி முத்தையாவும் 2004ஆம் ஆண்டுகாலத்தில் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இணை ஆணையராக இருந்த ராஜாவும் கைதுசெய்யப்பட்டனர்.

ஆனால், ஏப்ரல் மாதத் துவக்கத்தில் இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் இருந்து, மாநில குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றி, காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவிட்டார்.

இது சிலை திருட்டு தொடர்பான வழக்கு இல்லை என்றும் சிலை செய்ததில் முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கு என்பதாலும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரிப்பதே சரியாக இருக்கும் என காவல்துறையின் அறிக்கை கூறியது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தை தானாக எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வழக்கை சிபிசிஐடியிலிருந்து மாற்றி, மீண்டும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளது. நீதிபதி சுவாமிநாதன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்த ஸ்தபதி முத்தைய்யா, இணை ஆணையர் ராஜா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், 90 நாட்களுக்கு இணையம் மூலமோ, செல்போன் மூலமோ யாரையும் தொடர்புகொள்ளக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: