You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கனடாவில் -7 டிகிரி குளிரில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
-7 குளிர் காற்றையும் பொருட்படுத்தாமல் ஆண். பெண், குழந்தைகள் கூடி தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் நடந்துக்கொண்டிருக்கும் போராட்டத்திற்காக தங்கள் ஆதரவை நீட்டினர் கனடா தமிழர்கள்.
டொரோன்டோவின் டென்டாஸ் ஸ்கவெரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 'வேதாந்தா' நிறுவனத்திற்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக வட அமெரிக்கா முழுவதும் பல நகரங்களில் தொடர்ச்சியாக அமைதியான போராட்டங்களும், பேரணிகளும் நடந்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
'அத்துமீறல்களுக்கு எதிராக`
இதனை ஒருங்கிணைத்த ஸ்ரீ வித்யாவிடம் இது குறித்து பேசிய போது, "அத்துமீறல்களுக்கு எதிராக நாம் எழுந்தே ஆகவேண்டும் என்பது தான் முதல் நோக்கம்" என்கிறார்.
மேலும் அவர், "சுற்றுப்புற சூழலினால் ஏற்படும் இழப்புகளுக்கு யார் பதில் கூறுவார்கள்?" என்றும் கேட்கிறார்.
"எங்களுக்கும் ஸ்டெர்லைட்டுக்கும் எந்த பகையும் கிடையாது ஆனால் மிக அதிகமாக பாதிக்கபட்டிருக்கும் மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும். அதற்காக ஸ்டெர்லைட் நிறுவனம் தடை செய்யப்படவேண்டும். உலக தமிழர்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பினால் தூத்துக்குடி மக்களுக்கு ஒரு உந்துதல் கூடும். அதன் மூலம் தங்கள் போராட்டத்தை தொடர்ச்சியாக செய்வதற்கு வலிமை கிடைக்கும்" என்றார் அவர்.
தொழில் வளர்ச்சி மிக முக்கியம் இல்லையா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக தேவை ஆனால் மக்களில் வாழ்க்கையுடன் விளையாடி அல்ல என்பது அவரின் வாதம்.
'சுத்தமான காற்றிக்காக'
தமிழ்நாட்டை சேர்ந்த யு ட்யூப் நட்சத்திரம் 'புட் சட்னி' ராஜ்மோகனும் இதில் கலந்துகொண்டார்.
அவர், "தமிழ் மண்ணின் இயற்கை வளங்களை அழிப்பதற்காக யார் முனைந்தாலும், ஒன்று கூடி அதை தடுத்தே ஆக வேண்டும் எந்த ஒரு தொழில் நிறுவனத்திற்கும் லாபம் முக்கியம் தான். ஆனால் லாபமே குறிக்கோளாக இருக்க கூடாது." என்றார்.
இந்த போராட்டம் சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காக போராட்டமே என்ற அவர், ஸ்டெர்லைட் நிறுவனம் 20 ஆண்டுகளாக அசுத்தத்தை தொடர்ச்சியாக செய்து கொண்டு இருக்கிறார்கள். நமது பொறுமையை கையாலாகாததனம் என்று நினைக்கிறார்கள் என்றார்.
இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் ஒருங்கிணைப்பிற்கு வருகை தந்த 100க்கும் மேற்பட்டோர் பேரணியாக டன்டாஸ் இஸ்கவரிலிருந்து இந்திய தூதரகத்திற்கு ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட மனு தருவதற்காக சென்றார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்