ரஷ்ய தொலைக்காட்சி வெளியிட்ட 'உளவாளி மகளின் உரையாடல்'

தெற்கு இங்கிலாந்தில் கடந்த மாதம் நச்சுத் தாக்குதலுக்கு உள்ளான முன்னாள் ரஷ்ய உளவாளியின் மகளான யூலியா ஸ்கிர்பால், நாளுக்கு நாள் தான் மீண்டும் பலமடைந்து வருவதாக கூறியுள்ளார்.

தன் நலன் மீது அக்கறை காட்டுவோருக்கும், தான் மீண்டு வருவதற்காக செய்தி அனுப்புபவர்களுக்கும் தாம் நன்றிக்கடன்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நடந்த சம்பவங்களால் தாம் நிலைகுலைந்து போயுள்ளதாகவும், தனது அந்தரங்கம் மதிக்கப்பட வேண்டும் என்றும் யூலியா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

யூலியா மற்றும் அவரது உறவினர் ஒருவருடனானது என்று கூறப்படும் உரையாடலை ரஷ்ய தொலைக்காட்சி வெளியிட்டுள்ள நிலையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், அதன் நம்பகத்தன்மை குறித்து பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

பிரிட்டனில் கடந்த மார்ச் 4 அன்று மயங்கிய நிலையில் காணப்பட்டு, தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் 66 வயதாகும் முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் 33 வயதாகவும் அவரது மகள் யூலியாவை கொல்ல நோவிசோக் (novichok) எனப்படும் நச்சு வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக பிரிட்டன் காவல் துறை கூறியுள்ளது.

ஓய்வுபெற்ற ரஷ்ய ராணுவ அதிகாரியான செர்கெய், ஐரோப்பாவில் ரகசியமாக இயங்கும் ரஷ்ய உளவு அமைப்பினர் பற்றிய தகவல்களை பிரிட்டனுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2010இல் விடுவிக்கப்பட்ட அவர் பிரிட்டனில் வசித்து வந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: