You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகப் பார்வை: ஆபாச பட நடிகைக்கும் டிரம்புக்கும் எந்த தொடர்பும் இல்லை-வெள்ளை மாளிகை
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.
தொடர்பு இல்லை
ஆபாச பட நடிகைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் தொடர்பு உள்ளது என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை வெள்ளை மாளிகை தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. 2006 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தனக்கும் டிரம்புக்கும் தொடர்பு இருந்ததாக சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் ஸ்டோர்மி கூறி இருந்தார். மேலும் இந்த தகவலை வெளியே கூறாமல் இருக்க டிரம்பின் வழக்கறிஞர் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேர்தலுக்கு முன்பு கொடுத்ததாகவும் கூறி இருந்தார்.
ரஷ்ய அதிகாரிகள் வெளியேற்றம்
அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் பத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய உயர் அதிகாரிகளை தங்கள் நாடுகளிலிருந்து வெளியேற்றி உள்ளது. ரஷ்ய உளவாளி பிரிட்டனில் விஷம் வைத்து கொல்ல முயற்சி நடந்ததை அடுத்து இம்முடிவினை அந்நாடுகள் எடுத்துள்ளன. அதிக அளவில் ரஷ்ய அரசு அதிகாரிகள் வெளிநாடுகளிலிருந்து வெளியேற்றப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறை.
ஏவுகணை தாக்குதல்
செளதியை நோக்கி குறி வைத்து தாக்கப்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக செளதி படைகள் கூறி உள்ளன. ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செளதிக்கு எதிராக இத்தாக்குதலை மேற்கொண்டு இருக்கிறார்கள். ஏமன் பிரச்சனையில் செளதி தலைமையிலான கூட்டணி படைகள் தலையிட தொடங்கி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் மூன்று ஆண்டுகள் முடிவடைகிறது, ஹூதி கிளர்ச்சியாளர்கள், ரியாத் விமானநிலையம் உள்ளிட்ட எண்ணற்ற இடங்களை தாங்கள் குறி வைத்ததாக கூறி உள்ளனர். இந்த ஏவுகணைகளை மறித்து செளதி தாக்கியது. ஏவுகணையின் உடைந்த துண்டுகள் புறநகரில் விழுந்ததில் எகிப்தியர் ஒருவர் மரணமடைந்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.
விரிவாக படிக்க: சௌதி மீது ஏவுகணை தாக்குதல்; ரியாத் அருகே ஒருவர் பலி
பாலியல் துன்புறுத்தல்
பணியின் போது தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பிரேசில் விளையாட்டு துறை நிருபர்கள் கரம் கோர்த்து பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். #DeixaElaTrabalhar (அவளை பணி செய்ய விடுங்கள்) என்ற ஹாஷ் டாகை உருவாக்கி தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொந்தரவுகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
வடகொரிய அதிபர் சீனாவுக்கு ரகசிய பயணமா?
மூத்த வட கொரிய அதிகாரி ஒருவருடன் ரயில் ஒன்று பீஜிங்கிற்கு வந்துள்ளது என ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மூன்று பெயர் வெளியிடப்படாத நபர்கள் தந்த தகவல்படி அது வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னாக இருக்கலாம் என ப்ளூம்பர்க் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. சீனா, வட கொரியாவின் ஒரே முக்கிய கூட்டாளி ஆனால் வட கொரியா அணு அயுத சோதனைகளில் ஈடுபடுவதால் ஏற்பட்ட பதற்றங்களால் இருநாட்டு உறவில் விரிசல்கள் ஏற்பட்டன. பதவியேற்றதிலிருந்து கிம் வட கொரியாவை விட்டு சென்றதில்லை என நம்பப்படுகிறது.இந்த செய்தி குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் இல்லை. சீனா மற்றும் வட கொரிய அரசு ஊடகங்களிலும் இதுகுறித்த எந்த செய்தியும் இல்லை.
பிற செய்திகள்
- சீனாவுக்கு ரகசிய ரயிலில் சென்றாரா வட கொரிய அதிபர் கிம்?
- பிகார்: வரதட்சணையை தடுக்க கடத்தப்பட்டு கட்டாய திருமணம் #BBCShe
- பெண்கள் எவ்வாறு உடைய அணியக் கூடாது? தஜிகிஸ்தான் அரசு புத்தகம் வெளியீடு
- தேனி நியூட்ரினோ திட்டம்: சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுமதி
- ஸ்டெர்லைட் ஆலை : மக்கள் போராடுவது ஏன்? - 5 முக்கிய கேள்விகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்