You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகப் பார்வை: ஆபாசப்பட நடிகையை மிரட்டினாரா டிரம்ப்?
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.
ஆபாசப்பட நடிகையை மிரட்டினாரா டிரம்ப்?
2006ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பாலியல் உறவு வைத்திருந்தது குறித்து 'பொதுவெளியில் பேசக்கூடாது என்று தாம் மிரட்டப்பட்டதாக' ஆபாசப்பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ் கூறியுள்ளார்.
2011ஆம் ஆண்டு லாஸ் வேகஸில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் யாரென்று தெரியாத நபர் ஒருவர் தம்மிடம் வந்து இதை கூறிச் சென்றதாக அவர் சிபிஎஸ் செய்தி அமைப்பிடம் தெரிவித்துள்ளார்.
நடிகையுடன் உறவு வைத்துக் கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை டிரம்ப் கடுமையாக மறுத்துள்ளார்.
சைபீரியாவில் தீ விபத்து - 37 பேர் பலி
சைபீரியாவில் உள்ள கெம்ரொவா நகரத்தில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 37 பேர் பலியாகி உள்ளனர். மேலும், பல பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை காணவில்லை என ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது.
வின்டர் செர்ரி வணிக வளாகத்தின் மேல் மாடியில் இந்த விபத்து ஏற்பட்ட போது, இதில் பாதிக்கப்பட்ட பலரும் அங்குள்ள திரையரங்கில் அமர்ந்திருந்தனர்.
ஒரு திரையரங்கு அரையில், 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக கெம்ரொவா பகுதியின் துணை ஆளுநர் தெரிவித்தார்.
கேட்டலோனியா : பூஜ்டியமோன் கைதுக்கு எதிர்ப்பு
கேட்டலான் பிரிவினைவாத தலைவர் பூஜ்டியமோன் கைது செய்யப்பட்டு ஜெர்மன் நாட்டு சிறையில் ஓர் இரவை கழித்துள்ளதை தொடர்ந்து கேட்டலோனியாவில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
வன்முறையை தூண்டும் விதமாக அவர் பேசியதாக பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டில், அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பார்சிலோனாவில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், பூஜ்டியமோனின் கைதுக்கு எதிராக போராட்டங்கள் செயதனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ஸ்பெயினிலிருந்து கேட்டலோனியாவை பிரித்து தனி குடியரசை அமைப்பதற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பொன்றை இவர் நடத்தினார். இந்த வாக்கெடுப்பை ஸ்பெயின் தடை செய்து இருந்தது.
செளவுதியை நோக்கி ஏழு ஏவுகணைகள்
ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செளதி பகுதியை நோக்கி அனுப்பிய 7 ஏவுகணைகள் தடுத்து நிறுத்தப்பட்டதாக செளதி தலைமையிலான கூட்டணி படையினர் தெரிவித்துள்ளனர்.
இதில் மூன்று ஏவுகணைகள் செளதி தலைநகர் ரியாத்தை நோக்கி அனுப்பப்பட்டதாகும்.
சேதப்படுத்தப்பட்ட ஏவுகணைகளின் துகல்கள், அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் விழுந்ததில் எகிப்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமன் சிவில் போரில் சவுதி தலைமையிலான கூட்டணி தலையிட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும், ரியாத் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களை தாங்கள் இலக்கு வைத்துள்ளதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் கூறினர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்