அறிவுசார் சொத்துகளை திருடுவதா? சீனா மீது தடை விதிக்க அமெரிக்கா முடிவு

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

சீனா மீது தடை விதிக்க அமெரிக்கா முடிவு

அமெரிக்க தொழில்களில் உள்ள அறிவுசார் சொத்துக்களை திருடுவது மற்றும் அந்நாட்டுக்கு மாற்றம் செய்வதை ஊக்குவிப்பதாக கூறி, சீனா மீது இதுதொடர்பான தடைகள் விதிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பல ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததை அடுத்து வெள்ளை மாளிகை இந்த முடிவை எடுத்துள்ளது.

ஃபேஸ்புக் தரவுகளை தவறாக பயன்படுத்தும் அரசியல் அமைப்புகள்

ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட தவறு காரணமாக லட்சக்கணக்கான மக்களின் தரவுகளை அரசியல் ஆலோசனை அமைப்பு ஒன்று தவறாக பயன்படுத்தியதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் ஒப்புக் கொண்டுள்ளார்.

அரசியல் கட்சிகளின் சார்பில், இத்தரவுகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ள சக்கர்பர்க், "நம்பிக்கை மீறல்" நடைபெற்றது உண்மைதான் எனக் கூறியுள்ளார்.

பெரு அதிபர் ராஜினாமா

வாக்கு பெற்றதில் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து பெரு அதிபர் பெட்ரோ பப்லோ தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறிய பெட்ரோ, தாம் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்க விரும்பவில்லை எனக் கூறி பதவி விலகினார்.

நைஜீரியா: கடத்தப்பட்ட சிறுமிகள் வீடு திரும்பினர்

நைஜீரியாடப்சி நகரத்தில் போராளிகளால் கடத்தப்பட்ட 110 பள்ளி மாணவிகள் வீடு திரும்பியதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அதில் சுமார் 101 மாணவிகள் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் சேர்ந்துள்ளனர். இதனையடுத்து அந்நாட்டு அதிபர் முஹமது புஹாரியை சந்திக்க அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

மூளை சோதனை: புதிய ஸ்கேனர் கண்டுபிடிப்பு

பிரிட்டனில், நடமாடும் போதே மூளையின் செயல்பாடுகளை பதிவு செய்யும் ஸ்கேனரை முதன்முறையாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பழைய இயந்திரங்கள் போல, கணமாக இல்லாமல் சிறிய ஹெல்மட்டை போல இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த முறையில் மூளை சோதனை செய்ய நோயாளிகள் அசையாமல் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: