You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'விரைவில் பிரிட்டன் அதிகாரிகளை வெளியேற்றுவோம்' : ரஷ்யா பதிலடி
பிரிட்டனில் பணியாற்றும், ரஷ்யாவைச் சேர்ந்த 23 ராஜீய அலுவலர்களை வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ரஷ்யாவில் பணியாற்றும் பிரிட்டன் அலுவலர்களும் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த வெளியேற்றம் நிச்சயம் நடக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கூறியுள்ளார்.
முன்னதாக முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் மீதான கொலை முயற்சி தொடர்பாக உரிய விளக்கத்தை ரஷ்யா அளிக்காததால் தங்கள் நாட்டில் பணியாற்றும் 23 ரஷ்ய அதிகாரிகளை பிரிட்டன் வெளியேற்றும் என பிரிட்டன் பிரதமர் தெரீசா மே புதனன்று அறிவித்தார்.
அந்தத் தாக்குதலில் தங்களுக்குத் தொடர்பில்லை என்று கூறியுள்ள ரஷ்யா, பிரிட்டனின் நடவடிக்கை பொறுப்பற்றது என்றும், அடிப்படை ஆதாரங்களின்றி எடுக்கப்பட்ட முடிவு என்றும் கூறியுள்ளது.
பிரெக்சிட் பிரச்சனையால் பிரிட்டன் அரசுக்கு உண்டாகியுள்ள சிக்கலும் ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றும் முடிவுக்கு ஒரு காரணம் என்று செர்கெய் லாவ்ரோவ் கூறியுள்ளார்.
பிரிட்டனில் கடந்த மார்ச் 4 அன்று மயங்கிய நிலையில் காணப்பட்டு, தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் முன்னாள் 66 வயதாகும் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் 33 வயதாகவும் அவரது மகள் யூலியாவை கொல்ல நோவிசோக் (novichok) எனப்படும் நச்சு வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக பிரிட்டன் காவல் துறை கூறியுள்ளது.
ஓய்வுபெற்ற ரஷ்ய ராணுவ அதிகாரியான செர்கெய், ஐரோப்பாவில் ரகசியமாக இயங்கும் ரஷ்ய உளவு அமைப்பினர் பற்றிய தகவல்களை பிரிட்டனுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2010இல் விடுவிக்கப்பட்ட அவர் பிரிட்டனில் வசித்து வந்தார்.
இந்த நச்சுத்த தாக்குதலில் ரஷ்யாவுக்கு பங்கு இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் வேறு முடிவுக்கு வர முடியாது என்றும் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே கூறியுள்ளார்.
"தங்களை எதிர்ப்பவர்களுக்கு இந்த நிலைதான் ஏற்படும் எனும் செய்தியை இந்த வகையில் ரஷ்யா மக்களிடம் வெளிப்படுத்துகிறது," என்பர் பிரிட்டன் வெளியுறவுச் செயலர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்