You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாம் அருந்தும் குடிதண்ணீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிப்பு
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.
தண்ணீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள்
ஓர்ப் மீடியா அமைப்பு, ஒன்பது நாடுகளை சேர்ந்த 11 பிராண்டுகளின் பாட்டில் குடிநீரை சோதித்து பார்த்ததில், அவற்றில் சிறிய அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த 11 பிராண்டுகளில் இந்தியாவை சேர்ந்த பிஸ்லரியும் அடக்கம். இந்த சோதனை நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடந்தது. அந்த பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் ஷெர்ரி மேசன், "குறிப்பிட்ட பிராண்டுகளை குற்றம் சுமத்துவதற்காக இந்த சோதனையை மேற்கொள்ளவில்லை; எங்கும் பிளாஸ்டிக் நிறைந்து இருக்கிறது, பரவலாக காணப்படுகிறது என்பதை உணர்த்தவே இதனை மேற்கொண்டோம்" என்கிறார்.
முற்றுகிறது பிரிட்டன் ரஷ்யா மோதல்
முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மீதான கொலை முயற்சி தொடர்பாக உரிய விளக்கத்தை ரஷ்யா அளிக்காததால் தங்கள் நாட்டில் பணியாற்றும் 23 ரஷ்ய அதிகாரிகளை வெளியேற பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ரஷ்யாவிற்கு எதிராக பல கடும் நடவடிக்கைகளை பிரிட்டன் எடுத்துள்ளது.
தனியார் விமானங்கள், சரக்கு விமானங்கள், கப்பல்கள் கடுமையாக சோதிக்கப்படும், பிரிட்டன் நாட்டினரை அச்சுறுத்தப் பயன்படுத்தப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் பிரிட்டனில் உள்ள ரஷ்ய அரசின் சொத்துகள் முடக்கப்படும், ரஷ்யாவில் நடக்கவிருக்கும் சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியினை காண பிரிட்டனிலிருந்து அரச குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் யாரும் செல்ல மாட்டார்கள் என்று தெரீசா மே அறிவித்துள்ளார்.
முன் கூட்டிய திட்டமிடப்பட்ட உயர் அதிகாரிகள் அளவிலான இரு தரப்பு பேச்சு வார்த்தையை ரத்து செய்துள்ளது பிரிட்டன்.
செய்தியினை விரிவாக படிக்க:ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்ற முடிவு: பிரிட்டனிற்கு அமெரிக்கா ஆதரவு
மாணவர்கள் வெளிநடப்பு
ஃப்ளோரிடாவில் கடந்த மாதம் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். அதை நினைவுகூரும் வகையில் மாணவர்களும்ம் ஆசிரியர்களும் வகுப்பிலிருந்து வெளிநடப்பினை மேற்கொண்டார்கள். 17 பேரின் நினைவாக 17 நிமிடங்கள் பாடம் நடத்துவது நிறுத்தப்பட்டது.
லிபியா அகதிகளும், கைது நடவடிக்கையும்
முறைகேடாக ஐரோப்பா செல்லும் அகதிகளுக்கான கடத்தல் வலைப்பின்னலில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 205 பேருக்கு எதிராக கைது பற்றாணையை பிறப்பித்துள்ளது லிபியா.
அவர்களுக்கு எதிராக மனித கடத்தல், கொடுமைப்படுத்துதல், கொலை மற்றும் பாலியல் வல்லுறவு ஆகிய குற்றச்சாட்டுகள் உள்ளன. 2011 ஆம் ஆண்டு கடாஃபி அரசு வீழ்ந்த பிறகு, அந்நாட்டு அரசியல் சூழ்நிலை குழப்பத்தில் இருந்து வருகிறது. இதனால் பலர் முறைகேடான வழியில் ஐரோப்பா செல்கிறார்கள். இந்த சட்ட விரோத குடியேற்றத்தினை ஏற்பாடு செய்தார்கள் என்பதுதான் அந்த 205 பேர் மீதான முதன்மையான குற்றச்சாட்டு.
அதுமட்டுமல்லாமல், இந்த கடத்தல் கும்பலுக்கும், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவுக்கும் தொடர்பு உள்ளது என்பதனை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்கிறார் ஒரு விசாரணை அதிகாரி.
காயமடைந்தவர்கள் வெளியேற்றம்
சிரியா கிளிர்ச்சியாளர்களுக்கும், சிரியா அரசின் கூட்டாளியான ரஷ்யாவிற்கும் இடையேயான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் கிழக்கு கூட்டாவில் போரின் காரணமாக காயமடைந்த பொதுமக்கள் சிலர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அரசு சோதனை சாவடி வழியாக ஏறத்தாழ 25 நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வெளியேறி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்