You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிரியா: கிளர்ச்சியாளர்கள் பகுதிகளை கைப்பற்றி முன்னேறும் அரசு படைகள்
கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு கோட்டா பகுதியில் சிரியா குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்த்துள்ளதாக, அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு கோட்டா பகுதியின் பெரிய நகரமாக விளங்கும் டூமா நகரின்தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்துக்கான பாதைகளை பிற பகுதிகளில் இருந்து துண்டித்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ் கூறியுள்ளது.
கிழக்கு கோட்டா பகுதியில் பாதி அளவு தற்போது சிரியா அரசின் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், கடந்த மூன்று வாரங்களில் போர் நடக்கும் பகுதிகளில் சுமார் 1,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
தலைநகர் டமாஸ்கஸ்-ஐ சுற்றியுள்ள, கிளர்ச்சியடையாளர்கள் வசம் இருக்கும் புறநகர்ப் பகுதிகளை மீட்க சிரியா கடந்த மாதம் தனது தாக்குதலை அதிகப்படுத்தியது.
களத்தில் என்ன நடக்கிறது?
கிழக்கு கோட்டாவின் பகுதிகளை தனித்தனியாகப் பிரித்து, அவற்றை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் செய்வதன்மூலம், கிளர்ச்சியாளர்களுக்குத் தேவையானஆயுதங்கள் மற்றும் பொருட்கள் கிடைக்கும் விநியோகத் தொடரமைப்பைத் துண்டிப்பதே சிரியா அரசின் இலக்கு என்று கூறும் அரேபிய விவகாரங்களுக்கான பிபிசியின் ஆசிரியர் செபாஸ்டியன் உஷர் , அந்த இலக்கைத் தற்போது சிரியா அடைந்துள்ளதாவே தோன்றுகிறது என்று கூறுகிறார்.
கிழக்கு கோட்டா பகுதியின் வடக்கே அமைந்துள்ள டூமா மற்றும் மேற்கே அமைந்துள்ள ஹரஸ்தா ஆகிய பெருநகரங்களை இணைக்கும் சாலையில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரான மிஸ்ரபாவை சிரியா அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளதுடன், அதைச் சுற்றியுள்ள விளைநிலங்களிலும் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.
இதன் மூலம் டூமா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், ஹரஸ்தா மற்றும் கிழக்கு கோட்டாவின் தெற்கில் உள்ள பிற பகுதிகள் ஆகியன தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு அந்த மூன்று பகுதிகளிலும் இருக்கும் கிளர்ச்சியாளர்கள் எவ்விதத்திலும் தொடர்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
கிழக்கு கோட்டாவை மூன்றாகப் பிரித்துள்ளதாக சிரியா அரசுத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளபோதிலும், டூமா மற்றும் ஹரஸ்தா ஆகிய பகுதிகளுக்கு இடையேயான தொடர்பு துண்டிக்கப்படவில்லை என்று கிளர்ச்சியாள்கள் குழு ஒன்றின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
இதனிடையே, கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த பகுதிகளில் சிறை வைக்கப்பட்டிருந்த ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் அமைப்பினரால் வெளியேற்றப்பட்ட ஜிகாதிகள் கிழக்கு கோட்டாவில் இருந்து ஹாமா மாகாணம் வந்தடைந்துள்ளதாக அரசு எதிர்ப்பாளர்களின் வலைத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு கோட்டா பகுதியில் இன்னும் சுமார் நான்கு லட்சம் பேர் வசிக்கின்றனர். கிளர்ச்சியடையாளர்கள் வசம் உள்ள அப்பகுதியில், கடந்த 2013 முதல் அரசு மற்றும் ஆதரவுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
பிற செய்திகள்:
- ட்விட்டர்: உண்மைச் செய்திகளைத் தோற்கடித்த போலிச் செய்திகள்
- உஆப்கானிஸ்தான் தாலிபன் தாக்குதலில் 24 காவல் படையினர் பலி
- இலங்கை: முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவது பற்றி நாடாளுமன்ற விவாதம்
- மகாராஷ்டிராவில் 25,000 விவசாயிகள் பேரணி - 7 முக்கிய தகவல்கள்
- காதலின் பெயரால் நடக்கும் கொலைக்குப் பின் உள்ள உளவியல் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்