`குண்டு குள்ளர்`, `பலவீனமான முதியவர்` டிரம்ப்- கிம் பயன்படுத்திய வசைமொழிகள்

    • எழுதியவர், மானிடரிங் பிரிவு
    • பதவி, பிபிசி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள வாய்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இணக்கமான உறவுகளை நோக்கி நகரும் இரு தலைவர்களும் கடந்த காலத்தில் ஒருவரையொருவர் கடுமையான வார்த்தைகளால் தாக்கி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியவர்கள்.

ஒருவரை ஒருவர் வசை மொழிய பயன்படுத்திய வார்த்தைகளில் "ராக்கெட் மேன் (Rocket man)" மற்றும் "டோடார்ட் (dotard)" என்ற வார்த்தைகளும் அடங்கும்.

செப்டம்பர் 19ஆம் நாளன்று "டோட்டர்ட்(dotard)" என்ற வார்த்தையால் வட கொரிய தலைவர் கிம், டிரம்ப்பை அழைத்தபோது இருவருக்குமான வார்த்தை போர் உச்சத்தை அடைந்தது.

பலருக்கு அந்த வார்த்தையின் பொருள் புரியாமல், அகராதியில் தேடினார்கள். "டோட்டர்ட்" என்ற வார்த்தைக்கு மனதளவிலும் உடல் அளவிலும் பலவீனமான முதியவர் என்று பொருள்.

வட கொரியா "முற்றிலும் அழிக்கப்படும்" என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா.வில் டிரம்ப் ஆற்றிய உரைக்கு, கிம், இவ்வாறு எதிர்வினை ஆற்றியிருந்தார்.

தங்கள் தலைவரின் குறிப்பறிந்த வட கொரிய ஊடகங்கள், டிரம்புக்கு எதிரான தனிப்பட்ட அவதூறுகளை முன்வைத்தன. வட கொரியாவில், அந்நாட்டின் உயர் தலைவர்களை அவமதித்தாலோ, கிம் குடும்பத்தாரின் `பெரிய மனிதர்களை` "கண்ணியக்குறைவாக" பேசினாலோ மரண தண்டனை வழங்கப்படும்.

சமீபகாலமாக "விஷக் காளான்", "புழு", "ரவுடி", "கொள்ளைக்காரன்", "வெறி நாய்", "பித்துப்பிடித்தவன்" " மனதளவிலும் உடல் அளவிலும் பலவீனமான முதியவர் " போன்ற வார்த்தைகளால் வட கொரிய ஊடகங்கங்கள் டிரம்பை விவரித்தன.

டிரம்பை முதியவர் என்று வட கொரிய ஊடகங்கள் கூறிய சமயத்தில், கிம்மை "குள்ளர் மற்றும் குண்டானவர்" என்று தான் "அழைக்கவில்லை" என்று ட்ரம்ப் டிவீட் செய்தார்.

"விவசாயிகளால் வளர்க்கப்படும் கால்நடைகளை விட கீழான புழுவை போன்றவர் டிரம்ப் என்றும், நச்சுக்காளான் போன்றவர் என்றும், குழம்பிப்போன முதியவர்" என்றும் வட கொரிய செய்தி முகமையான கேசிஎன்ஏ தெரிவித்திருந்தது.

செப்டம்பர் 23ஆம் தேதியன்று " டிரம்ப் ஒரு குறைபாடுள்ள மனிதன்... ஒரு அரசியல் குண்டர், ஒரு கொள்ளைக்காரன், குழந்தைத் தன்மை கொண்டவர்" என்று வட கொரிய அரசு நாளிதழான ரோடொங் சின்மூன் தெரி்வித்திருந்தது.

தனது மேஜையில் ஒரு பெரிய அணுஆயுத பொத்தான் இருப்பதாக ஜனவரி மாதத்தில் டிரம்ப் டிவீட் செய்தபோது, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரோடொங் சின்மூன், டிரம்ப்பை "மனநோயாளி", "பொறுப்பற்ற பித்துபிடித்தவர்", "தோல்வியடைந்தவர்" என்று கூறியது. அதில் வெளியிட்ட கருத்துக்களில் "வெறிபிடித்த நாயின் குரைப்பு" என்றும் இடம்பெற்றிருந்தது.

வட கொரிய கட்சியின் பத்திரிகையான ரோடோங் சின்முன், ஜனவரி 16ஆம் தேதியன்று வெளியிட்ட செய்தியில், டிரம்பின் "மனநோய்" பற்றி உலகமே கவலைப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. அமெரிக்க அணுசக்தியின் பொத்தான் "பழங்காலத்து பைத்தியக்காரன்" ஒருவரின் கரங்களில் இருப்பதாகவும் அந்த செய்தித்தாள் குறிப்பிட்டிருந்தது.

செப்டம்பர் 25ஆம் தேதியன்று"குண்டர்களின் தலைவர்; வெறிநாய்" என டிரம்பை கேசிஎன்ஏ தெரிவித்திருந்தது.

இப்படி அவதூறு புழுதிகளை வாரி வீசிக்கொண்ட இரு உயர் தலைவர்களும் மே மாதத்தில் நேரிடையாக சந்திக்கும் நிலையில் உள்ளனர் எனவே இனிமேல் இரு தரப்பும் தரமான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள் என்று நம்பலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: