You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கூகுள், ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து சராஹா ஆப் நீக்கம் - காரணம் என்ன?
அதிக தொந்தரவு அளிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சராஹா செயலியை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் ஸ்டோர்களில் இருந்து நீக்கியுள்ளது.
யார் நமக்கு செய்தி அனுப்பியது என்ற தகவலை வெளியிடாது, அனுப்பிய குறுஞ்செய்தியை மட்டுமே நம்மால் படிக்க முடியும் என்ற வசதி கொண்டதுதான் சராஹா ஆப். அதனைதான் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் நீக்கியுள்ளன.
ஆனால், இந்த ஆப், பதின்ம இளைஞர்கள் பயன்படுத்துவதற்கானது அல்ல என அதன் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.
கட்ரினா கொலின்ஸ் என்பவர், சராஹா மூலம் தனது 13 வயது மகளுக்கு, தொடர்ந்து தெரியாத நபர்களால் குறுஞ்செய்திகள் வருவதாக குற்றஞ்சாட்டி இருந்தார். தன் மகள் தன்னையே கொலை செய்து கொள்வார் என்று ஒருவர் அதில் செய்தி அனுப்பி இருந்தார் என்றும் மேலும் பல மோசமான வார்த்தைகள் பயன்படுத்தி செய்திகள் வருவதாகவும் கூறியிருந்தார்.
ஆஸ்திரேலியாவில் வாழும் கொலின்ஸ், Change.org என்ற வலைதளத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இந்த சராஹா செயலியை நீக்கக் கோரியிருந்தார். சராஹா ஆப் மிகவும் தொந்தரவு அளிப்பதை ஒப்புக்கொண்ட 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் இதற்கு ஆதரவு அளித்தனர்.
இதனை தொடர்ந்து ஆப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் இருந்து இந்த செயலி நீக்கப்பட்டது.
"குறிப்பிட்ட செயலிகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை" என கூகுள் செய்தி தொடர்பாளர் கூறினார். ஆப்பிள் நிறுவனம் இச்செயலியை நீக்கியது தொடர்பாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
இரு பெரிய நிறுவனங்கள் தங்கள் செயலியை நீக்கியது "துரதிஷ்டவசமானது" என்று சராஹா செயலியின் தலைமை நிர்வாகி செயின்-அலாப்தின் தாஃபிக் தெரிவித்துள்ளார்.
பெயர் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்திகள்
சராஹா ஆப் வெளியான ஒரு வருடத்தில் பல ஏற்றத் தாழ்வுகளை கண்டுள்ளது. அறிமுகமாகிய உடனேயே உலகெங்கிலும் 300 மில்லியன் பயன்பாட்டாளர்களை இது பெற்றது.
சவுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த செயலி, ஆப்பிள் ஸ்டோரில் கடந்த ஜுலை மாதத்தில் 30 நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட செயலியாக இருந்தது.
அரபு மொழியில் சராஹா என்றால் "நேர்மை" என்று பொருள். ஆக்கப்பூர்வமான நேர்மையான கருத்துகளை பெறுவதே இதன் நோக்கம். ஆனால், இதற்கு எதிராக மனு அளித்த கட்ரினா கொலின்ஸ், இணைய தாக்குதலுக்கு இது உதவுவதாக குற்றம் சாட்டினார்.
"என் மகளுக்கு இவ்வாறு நடந்தால், நிச்சயம் நிறைய குழந்தைகளுக்கு இது நடக்க வாய்ப்புள்ளது" என பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.
இணைய தாக்குதல்கள்
பெயரிடப்படாத குறுஞ்செய்தி பெறும் முதல் செயலி இதுவல்ல. இதற்கு முன் பெரும் சர்ச்சைக்குள்ளான சீக்ரெட் என்ற ஆப் 2015ஆம் ஆண்டு மூடப்பட்டது. 2013ஆம் ஆண்டு பல்வேறு பதின் பருவத்தினர் தற்கொலை செய்து கொண்டதற்கு ask.fm என்ற தளம்தான் காரணம் எனக் கூறப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :