“சிறையான சொகுசு விடுதி” - மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

சிறையான சொகுசு விடுதி மீண்டும் திறப்பு

கடந்த நவம்பர் மாதம் செளதியில் ஊழல் தடுப்பு நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்ட இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட 200 -க்கும் மேற்பட்டோர் மூன்று சொகுசு விடுதிகளில் அடைக்கப்பட்டு இருந்தனர். அதில் ஒன்று ரியாத் ரிட்ஸ் கார்ட்லான் சொகுசு விடுதி. ஜனவரி இறுதியில் அரசுக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஒரு பொருளாதார தீர்வு எட்டியதை அடுத்து, அவர்களிடமிருந்து 100 பில்லியன் டாலர் மீட்கப்பட்டது. இதனை அடுத்து பெரும்பாலானவர்கள் விடுவிக்கப்பட்டார்கள், சிலர் சிறைக்கு மாற்றப்பட்டார்கள். இதனை தொடர்ந்து விடுதி மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.

இஸ்ரேலை எச்சரித்த டிரம்ப்

இஸ்ரேல் குடியேற்றங்கள், பாலத்தீனியர்களுடனான பேச்சுவார்த்தையை சிக்கலாக்கும் என்றும், இஸ்ரேல் இதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். பழமைவாத நாளிதழான இஸ்ரேல் ஹாயோம்-க்கு அளித்த பேட்டியில் இவ்வாறாக கூறி உள்ளார். மேலும் அவர், பாலத்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு தரப்புகளும் அமைதியை ஏற்படுத்த தயாராக உள்ளதுபோல தெரியவில்லை என்றும் கூறி உள்ளார்.

சூழலியலாளர் உளவாளியா?

இரான் தெஹ்ரான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சூழலியலாளர் செய்யது இமாமி சில தினங்களுக்கு முன் மரணமடைந்தார். இவர் மரணம் குறித்து அனைவரும் சந்தேகம் எழுப்பி இருந்த சூழலில், இவர் தற்கொலைதான் செய்துக் கொண்டார் என்று கூறி உள்ளது இரான் நீதித் துறை. இமாமி உளவு பார்த்ததற்கான ஆதாரங்களை கிட்டியதை அடுத்து அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறி உள்ளது நீதித்துறை.

மக்கள் தலைவர் அறிவாரா?

ரோஹிஞ்சா அகதிகள் சந்திக்கும் பிரச்சனையின் வீரியத்தை மியான்மர் நாட்டின் உண்மையான மக்கள் தலைவர் ஆங் சான் சூச்சி அறிவாரா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்று இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் கூறி உள்ளார். மேலும் அவர், ரோஹிஞ்சா அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதற்காக உதவும் வகையில் ஐ.நா உதவி குழுக்களுடன் ஆங் சான் சூச்சி இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

நிறுவனத்துக்கு எதிராக வழக்கு

ஹார்வி வைன்ஸ்டீனிடமிருந்து ஊழியர்களை காக்க தவறிவிட்டதாக கூறி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வைன்ஸ்டீன் மீது வழக்கு தொடுத்துள்ளார் நியூயார்க் அரசுத் தரப்பு வழக்கறிஞர்.வைன்ஸ்டீன் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட ஏராளமான பாலியல் புகார்கள் உள்ளன. ஆனால், பரஸ்பர சம்பந்தம் இல்லாமல் தான் யாருடனுன் உடலுறவு கொள்ளவில்லை என்றுகூறி வைன்ஸ்டீன் தன் மீதான புகார்களை மறுத்து வருகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :