You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிளம்பிய சில நிமிடங்களில் நொறுங்கிய ரஷ்ய விமானம்: பயணித்த 71 பேரும் பலி
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து கிளம்பிய ஒரு பயணிகள் விமானம், சில நிமிடங்களில் நொறுங்கியது. இதில் பயணித்த 71 பேரும் இறந்துள்ளனர்.
சராடோவ் ஏர்லைன்ஸின் ஏஎன்148 என்ற இந்த விமானம், கஜகஸ்தான் உடனான ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள உரால் மலைப்பகுதியின் ஓர்ஸ்க் நகரத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது. விமானம் ரேடார் திரைகளில் இருந்து மறைந்த பிறகு இந்த விபத்து நடந்துள்ளது.
மாஸ்கோவின் தென்கிழக்கில் 80கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அர்குனோவோ பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், விமானம் எரிந்துக்கொண்டு கீழே விழுவதை மக்கள் பார்த்துள்ளனர்.
இந்த விமானம் ஒரு நிமிடத்திற்கு 3,300 அடிகள் கீழ் இறங்கியதாக விமானம் கண்காணிப்பு தளமான, 'ப்ளைட்ரேடார்' ட்வீட் செய்துள்ளது. பனி படர்ந்த நிலத்தில், விமானத்தின் பாகங்கள் கிடப்பதை இந்த தளத்தின் புகைப்படங்கள் காட்டுகின்றன. இதன் அருகில் உடல்களை கண்டெடுத்தாக அதிகாரிகள் கூறுகின்றனர் என டாஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
விமானத்தில் 65 பயணிகள் மற்றும் ஆறு விமான குழுவினர் இருந்துள்ளனர். ரஷ்ய அதிபர் புதின் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மற்றும் விபத்துக்கு காரணத்தை கண்டுபிடிக்க விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது விபத்தில் சிக்கியுள்ள விமானம் சரடோவ் ஏர்லைன்ஸிக்கு சொந்தமானது.
விமானத்தில் விமானிகள் இருக்கும் பகுதியில், விமானி அல்லாத ஒருவர் இருந்ததை திடீர் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டதால், சரடோவ் ஏர்லைன்ஸின் சர்வதேச விமான சேவைக்கு 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.
தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்த இந்த விமான நிறுவனம், 2016-ம் ஆண்டு மீண்டும் தனது சர்வதேச சேவையை தொடங்குவதற்கு முன்பு தனது கொள்கையில் மாற்றங்களைக் கொண்டுவந்தது.
இது ரஷ்ய நகரங்களுக்கு இடையே சேவையாற்றுகிறது. அத்துடன், ஆர்மீனியா மற்றும் ஜோர்ஜியாவிற்கும் சேவை வழங்கி வருகிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்